Speech Sounds – Octavia E. Butler
தமிழில் – நரேன்
Ocatavia E. Butler (1947 – 2006)
அறிபுனைவு கதைகளுக்காக மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அமெரிக்க எழுத்துலகின் பல்வேறு விருதுகளை வென்று குவித்தவர். அறிபுனைவுதான் இலக்கிய வகைமைகளில் மிகவும் கட்டற்ற சுதந்திரத்தை தனக்குக் கொடுப்பதாகச் சொல்லி அவ்வகையான கதைகளையே தொடர்ந்து எழுதினார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்பதாலும் ஏழ்மையான பின்னணியில் தன் இளமைக் காலத்தைக் கழித்ததாலும் இவரது கதைகளில் மிக ஆழத்தில் மெல்லிய இழையாக அமெரிக்க இனவாதமும், பெண் அடக்குமுறைகளும், குடும்ப வன்முறைகளும் வெளிப்படும். அறிபுனைவு தரும் கிளர்ச்சியையும் மீறி இவரது கதைகள் பல ஆண்டுகளாக வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு இதுவொரு முக்கிய காரணம். இதே காரணங்களால் இவரின் கதைகள் அறிபுனைவுவகைச் சட்டகத்தினுள் அடங்குவதில்லை என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. அறிபுனைவுகள் “உணர்ச்சி அல்லது உள்ளுணர்வுகளை விடவும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்” என்பது அமெரிக்க அறிபுனைவு ஆய்வேடுகளில் முன்வைக்கப்படும் முக்கியமான புள்ளி. ஆனால் “என்னுடைய எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன். ஆண்வயப் பார்வையிலிருந்து முற்றும் விலகி என் கதைகளில் உள்ளார்ந்த பெண்களின் உணர்வுகளும் அவர்களை உந்தும் அந்த நிச்சயமற்ற ஏதோ ஒன்றும் இருக்கும்” என்று அறிவிக்கிறார் ஆக்டேவியா. அதனால் தன் கதைகளை அறிபுனைவு என்று வகைப்படுத்தாவிடிலும் தனக்கு அதில் ஒப்புதலே என்கிறார். இவரின் சிறுகதைகள் மற்றும் நாவல்களின் மீது அறிபுனைவுகளில் பெண்ணியத்தையும் இனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
‘பேச்சொலிகள்’ என்ற இச்சிறுகதை 1984-ல் சிறந்த அறிபுனைவுகளுக்கென வழங்கப்படும் ‘ஹ்யூகோ’ விருதை வென்றது. ஐசக் அஸிமோவ் தேர்ந்தெடுத்த சிறந்த அறிபுனைவுச் சிறுகதைகளில் இதுவும் ஒன்று. “அறிவியல் புனைவுகளுக்கு அற்புதங்களையோ அல்லது பேரழிவுகளையோ உருவாக்கிக் காட்ட வேண்டிய கட்டாயமில்லை. அது சாத்தியமான சூழ்நிலைகளையே ஆராய்கிறது. அறிபுனைவுகளின் அடிப்படை, அசாத்தியமான சூழ்நிலைகளில் மக்களின் எதிர்வினையையும் வாழ்வையும் ஆய்விற்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்கிறார் அஸிமோவ். இக்கதையில் ஆசிரியர், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு சமுதாயத்தைப் பெரிய விவரிப்புகள் ஏதுமின்றி உருவாக்குகிறார், அவ்வழிவிற்குத் தனித்துவமான காரணிகளை முன்வைக்கிறார். மொழியும் பேச்சும் – அதன் போதாமையும், ஒரு சமூகத்தை முற்றாக அழிக்கவும் அல்லது ஒரு ஒற்றைப் புள்ளியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது. சொல்லும் மௌனமும் இவ்விரண்டையும் வெளிப்படுத்தும் சரியான தருணத்தைத் தேறும் அறிவும், உலகமும் அதில் உறவுகளும் இன்னும் உய்வித்திருப்பதற்கான காரணிகள்!
*
பேச்சொலிகள்
வாஷிங்டன் பெருஞ்சாலை நிறுத்தத்தில் பேருந்தினுள் ஏதோ சலசலப்பு உண்டானது. தன்னுடைய பயணத்தின் பிற்பாடோ அல்லது உடனடியாகவோ கூட ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதை ரைய் எதிர்பார்த்திருந்தாள். தனிமையும் நம்பிக்கையின்மையும் அவளை வீட்டிலிருந்து துரத்தும் வரை இப்பயணத்தை ஒத்தி வைத்திருந்தாள். தன்னுடைய சொந்தங்களில் சிலர் – சகோதரனும் அவனது இரண்டு மகன்களும் இருபது மைல் தொலைவில் பாஸடேனாவில் இன்னமும் உயிருடன் இருக்கக்கூடும் என்று நம்பினாள். அதிர்ஷ்டம் அவளுக்குத் துணை இருக்குமானால் இந்த ஒருவழிப் பயணம் ஒரே நாளில் முடிந்துவிடும். விர்ஜினியா சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளிவந்த போது எதிர்பாரா விதமாக அவ்வழியே பேருந்து வந்து நின்றதும் ஒருதுளி அதிர்ஷ்டம் அவள் வசம் இருப்பது போலத்தான் தோன்றியது. ஆனால் இந்தச் சலசலப்பு தொடங்கியதும் அதுவும் இல்லாமல் போனது.
இரு இளைஞர்கள் தங்களுக்குள் ஏதோ கருத்து உடன்படாமையாலோ அல்லது… அனேகமாக ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொண்டதாலோ பூசலிட்டுக் கொண்டிருந்தனர். பேருந்தின் இடைவழியில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்து வெறித்து உறுமலிட்டு கையசைவுகளால் மிரட்டிக்கொண்டு இருந்தனர். சாலைக்குழியில் பேருந்து சடாரென இறங்கி ஏற அவர்கள் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிச் சமநிலை கொண்டு தடுமாற்றமான ஒருநிலையில் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓட்டுநர் வேண்டுமென்றே அவர்களை நிலைகுலையச் செய்ய முயற்சி மேற்கொண்டது போல் தெரிந்தது. இருப்பினும், அவர்களது கை அசைவுகள் எதிராளியைத் தொடவில்லை, சற்று முன்னதாகவே நின்றுவிடுகின்றன – தொலைந்துவிட்ட வசைச் சொற்களுக்குப் பதிலாக தற்போது போலியான காற்றில் வீசப்படும் குத்துகளும், அச்சுறுத்தும் வெற்று விரல் விளையாட்டுகளும்.
மற்ற பயணிகள் இந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர், பின்னர் தங்களுக்குள் பார்வைகளைப் பரிமாறி கவலை தொனிக்கும் சத்தங்களை எழுப்பினர். இரண்டு குழந்தைகள் சிணுங்கினர். சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சற்றுதள்ளி பேருந்தின் பின்கதவிற்கு எதிரில் அமர்ந்திருந்தாள் ரைய். அவ்விருவரையும் அவள் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எவருடைய கையாவது நழுவி அடுத்தவரின் மேல் பட்டுவிட்டாலோ, யாரோ ஒருவரின் நரம்பின் மீது அடி விழுந்தாலோ, எவராவது தன்னுடைய மட்டுப்பட்ட, மிஞ்சியிருக்கும் உரையாடும் திறனின் எல்லையை அடைந்து விட்டாலோ, உடனடியாகச் சண்டை தொடங்கிவிடும் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். இதைப்போன்ற சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
அப்படியொன்று நடந்துவிட்டது, பேருந்து ஒரு பெரிய குழியில் இறங்கி குலுங்க, ஏளனப் பார்வையால் பழித்துக் கொண்டிருந்த மெலிந்த உயரமானவொருவன் குள்ளமான தனது எதிராளியின் மீது தடுமாறி விழுந்தான்.
நொடிப்பொழுதில், அந்த குள்ள மனிதன் தனது இடது கை முட்டியால் ஏளன இளிப்பைச் சிதறடித்தான். இறுக மூடிய இடது கையைத் தவிர தன்னிடம் வேறு ஆயுதம் இல்லை, வேறெதுவும் தனக்குத் தேவையுமில்லை என்பதைப்போல அப்பெரிய எதிரியைச் சம்மட்டியென ஓங்கி அடித்தான். மிக வேகமாகத் தாக்கினான். உயரமான மனிதன் மீண்டும் தன் சமநிலையை மீட்டி எழுவதற்கோ அல்லது ஒருமுறை கூட திருப்பித் தாக்குவதற்கோ இயலாத அளவிற்கு அந்த அடி அவ்வளவு பலமாக விழுந்தது.
மக்கள் பயத்தில் அலறினார்கள், கூச்சலிட்டார்கள். அருகிலிருந்தவர்கள் அவர்களுக்கு வழிவிட்டு அங்கிருந்து கலைந்து நகர்ந்தார்கள். மேலும் மூன்று இளைஞர்கள் உற்சாகத்தில் உறுமினார்கள், ஆரவாரமாகக் கைகளை அசைத்தார்கள். பிறகு, திடீரென எப்படியோ அந்த மூவரில் இருவருக்குள் அப்பேருந்தினுள் இரண்டாவது கைகலப்பு உருவானது – அனேகமாக ஒருவன் தெரியாத்தனமாக அடுத்தவனைப் பலமாக இடித்திருக்கலாம் அல்லது வெறுமனே தொட்டு விட்டவனாகக் கூட இருக்கலாம்.
இந்த இரண்டாவது சண்டை ஏற்கனவே பதறிப்போன பயணிகளை இருக்கையிலிருந்து சிதறடித்தது. ஒரு பெண், பஸ் டிரைவரின் தோள்களைக் குலுக்கி சண்டையை நோக்கி கைகளைக் காட்டியபடி உறுமலொலி எழுப்பினாள்.
டிரைவர் வெற்றுப் பற்களைக் காட்டி அவளை நோக்கி பதிலுக்கு உறுமினான். பயந்து போன அப்பெண் அவனிடமிருந்து விலகி பின்னால் சென்றாள்.
இந்தக் கலவரத்தைக் கையாள பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்றும் வழிமுறைகளை ரைய் ஏற்கனவே அறிந்தவளென்பதால் தனக்கு முன்னால் இருந்த இருக்கையின் கம்பியை இறுகப்பற்றி உடலோடு அணைத்துக் கொண்டாள். ஓட்டுநர் ஓங்கி பிரேக்குகளை அழுத்தியபோது அவள் அதற்குத் தயாராக இருந்தாள், ஆனால் சண்டைக்காரர்கள் சுதாரிக்கவில்லை. அவர்கள் கத்தி அலறிக் கொண்டிருந்த பயணிகளை நோக்கி இருக்கைகளின் மீது பாய்ந்து விழுந்தனர். அது மேலும் குழப்பங்களை உண்டு பண்ணியது, குறைந்தபட்சம் மேலுமொரு சண்டை அங்கே தொடங்கிவிட்டது.
பேருந்து முழுமையான நிறுத்தத்திற்கு வந்த அடுத்த கணம், ரைய் வேகமாக ஓடி பின்கதவை ஓங்கித் தள்ளினாள். இரண்டாவது முறை தள்ளியதில் கதவு திறந்து கொண்டது. ஒரு கையில் கைப்பையைப் பிடித்தபடி வெளியே குதித்தாள். மற்ற பயணிகளும் அவளைப் பின்தொடர்ந்தனர், ஒரு சிலர் பேருந்திலேயே தங்கிவிட்டனர். இப்போதெல்லாம் பேருந்து முறையாக வருவதில்லை, மிக அரிதாகத்தான் வரும். என்ன நடந்தாலும் பரவாயில்லையென மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் பேருந்தில் ஏறிக்கொள்கின்றனர். இன்றோ நாளையோ மற்றொரு பேருந்து வராமலே போகலாம். இந்நாட்களில் மக்கள் நடந்தே பயணப்படத் தொடங்கி விட்டனர். வழியில் பேருந்தைப் பார்த்தால் அதைச் சூழ்ந்து மடக்கி நிறுத்திவிடுவர். ரைய் மேற்கொள்ளும் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து பாஸடேனா பயணத்தைப் போல் நகரங்களுக்கிடையில் பயணிப்பதாக இருந்தால் மக்கள் ஆங்காங்கே முகாமிடுவதற்குத் தங்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அல்லது தாங்கள் கொள்ளையடிக்கப்படும், கொல்லப்படும் ஆபத்தைப் பொருட்படுத்தாது உள்ளூர் மக்களிடம் அவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைவார்கள்.
பேருந்து நகரவில்லை, ஆனால் ரைய் அங்கிருந்து விலகி தூர வந்துவிட்டாள். சண்டை முடியும்வரை காத்திருந்துவிட்டு பின்பு மீண்டும் அதில் ஏறிக்கொள்வது தான் அவள் எண்ணம். ஆனால் அங்கே துப்பாக்கிச்சூடு ஏதும் நடக்குமெனில் பதுங்கிக்கொள்ள மரத்தின் மறைவு வேண்டும். அதனால் அவள் சாலையின் விளிம்பில் ஒதுங்கியிருந்தபோது உருச்சிதைந்த ஒரு நீலநிற ஃபோர்டு கார் எதிர் திசையிலிருந்து யூ-டர்ன் போட்டு பேருந்தின் முன்னால் வந்து நின்றது. இந்நாட்களில் கார்கள் மிகமிக அரிதானவை – தீவிரப் பற்றாக்குறையாகிப் போன எரிபொருட்களையும் கார்களை பழுதின்றி உருவாக்கும் திறனுடையவர்களையும் போல மிக அரிதானவை. இன்று ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் பெரும்பாலும் போக்குவரத்திற்குப் பயன்படுவதைவிடக் கேடயங்களாக, ஆயுதங்களாகத்தான் பயன்படுகின்றன. அதனால் ஃபோர்டு காரின் டிரைவர் ரைய்யை நோக்கித் தலையசைத்தபோது அவள் முன்னெச்சரிக்கையுடன் மேலும் விலகிச் சென்றாள். டிரைவர் வெளியே வந்தான் – பெருத்த சரீரமுடைய மனிதன், சீரான தாடியும் செழிப்பான கறுத்த தலைமுடியும் கொண்ட இளைஞன். அவன் ஒரு நீண்ட மேலங்கியை அணிந்திருந்தான், அவன் விழிகளில் நிறைந்திருந்த எச்சரிக்கையுணர்வு ரைய்யை ஒத்திருந்தது. அவள் பல அடிகள் அவனிடமிருந்து தள்ளி நின்றிருந்தாள், அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காணக் காத்திருந்தாள். உள்ளே நடந்து கொண்டிருக்கும் சண்டையினால் குலுங்கும் பேருந்தைச் சற்றுநேரம் நோக்கினான், பிறகு கீழிறங்கி நின்று கொண்டிருக்கும் பயணிகளின் சிறுகுழுவைப் பார்த்தான். இறுதியாக மீண்டுமொரு முறை ரைய்யை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான்.
அவன் பார்வைக்குப் பதிலளிப்பதைப் போல அவளும் பார்த்தாள், தன் மேலாடையினுள் மறைத்து வைத்திருக்கும். 45 வகை தானியங்கி துப்பாக்கி தந்த தைரியம் அது. அவள் அவன் கைகளைக் கவனித்தாள்.
அவன் தன்னுடைய இடது கையால் பேருந்தைச் சுட்டினான். இருண்டிருந்த ஜன்னல்கள் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் அவனைத் தடுத்தது.
அவனது இந்த நேரடியான கேள்வியை விடவும் இடது கையை உபயோகித்ததுதான் அவளுக்கு அதிக ஆர்வமூட்டுவதாக இருந்தது. இடதுகை பழக்கமுடையவர்கள் பலவீனம் ஏதுமற்றவர்களாகவும் அதீத சமநிலையுடையவர்களாகவும் அடுத்தவர்களைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் கோபத்தால், குழப்பத்தால், விரக்தியால் உந்தப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.
அவளும் அவனது கையசைவைப் போலவே தன் இடது கையை பேருந்தை நோக்கி நீட்டி, பிறகு தனது இரண்டு கை முஷ்டிகளையும் மடக்கி காற்றில் சண்டையிடும் சைகையைக் காட்டினாள்.
அம்மனிதன் லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையின் சீருடையும் அதனுடன் பொருந்திய லத்தியும் துப்பாக்கியும் வெளித் தெரியும்படி தன் மேலங்கியைக் கழற்றினான்.
அவனிடமிருந்து மேலும் ஒரு அடி பின்னகர்ந்தாள் ரைய். லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை என ஒன்று இப்போது இல்லவே இல்லை. எந்தவொரு பெரிய அமைப்பும், அது அரசுத்துறையோ அல்லது தனியாரோ, எதுவும் இப்போது இல்லை. அக்கம்பக்கத்தினர் இணைந்து செயல்படுத்தும் ரோந்து பணிகள் உண்டு. சிலர் சொந்தமாக ஆயுதம் வைத்திருப்பதுண்டு, அவ்வளவுதான்.
அவன் தன் மேலங்கியின் பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்தான். பிறகு அந்த மேலங்கியை காருக்குள் எறிந்தான். திரும்பவும் ரைய்யை நோக்கி, அவளைப் பேருந்தின் பின்பக்கத்திற்கு வரும்படி கைகளை அசைத்தான். ஏதோவொரு பிளாஸ்டிக் பொருளை கையில் வைத்திருந்தான். அவன் பேருந்தின் பின்பக்கம் சென்று அவளை அங்கே வந்து நிற்கும்படி அழைத்தான். அதுவரை அவன் என்ன செய்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஒரு ஆர்வத்தில்தான் அவன் சொன்னதை அவள் பின்பற்றினாள். போலீஸோ இல்லையோ, அந்த முட்டாள்தனமான சண்டையை நிறுத்த அவன் ஏதேனும் செய்யக்கூடும்.
பேருந்தைச் சுற்றி நடந்து முன்னால் ஓட்டுநரின் கதவு திறந்திருந்த சாலை பக்கமாகச் சென்றான். அங்கே அவன் பேருந்திற்குள் எதையோ வீசி எறிந்ததாக அவளுக்குத் தோன்றியது. இருண்டிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக உள்ளே கூர்ந்து பார்க்க அவள் முயன்றபோது உள்ளிருந்த பயணிகள் மூச்சுத் திணறி கண்களில் நீர் வழியப் பின்கதவு வழியாகத் தடுமாறி வெளியேறிக் கொண்டிருந்தனர். புகை!
கீழே விழப்போன ஒரு மூதாட்டியை ரைய் பிடித்துக் கொண்டாள். இடித்துத் தள்ளப்பட்டு மிதிபடும் ஆபத்திலிருந்து இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றித் தூக்கினாள். அந்தத் தாடி மனிதன் முன்கதவின் வழியாகப் பயணிகள் வெளியேறுவதற்கு உதவிக் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். சண்டைக்காரர்களில் ஒருவன் தூக்கித் தள்ளிய ஒரு முதியவரை அவள் தாங்கிக் கொண்டாள். அம்முதியவரின் எடை தாளாமல் அவள் தடுமாறியதால், பாய்ந்து வெளியே குதித்த கடைசி இளைஞனுக்கு வழிவிட்டு விலக முடியவில்லை. அவன் புகையினால் உண்டான விம்மலை இன்னும் அடக்க மாட்டாமல், கண்களிலும் மூக்கிலும் இரத்தம் வடிய, அடுத்தவர்கள் மேல் கண்மூடித்தனமாக விழுந்து அவர்களைப் பற்றிக்கொண்டான்.
தாடி மனிதன் முன்கதவு வழியாக டிரைவர் வெளியேறுவதற்கு உதவினான். ஆனால் அவ்வுதவியை டிரைவர் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு கணம், மீண்டும் அங்கே இன்னொரு சண்டை தொடங்கும் என்று ரைய் எண்ணினாள். அத்தாடிக்காரன் சில அடிகள் பின்னால் எடுத்து வைத்து டிரைவரின் மிரட்டும் உடற்மொழியைக் கவனித்தான், சொற்களின்றி வெளிப்படும் கோபத்தில் டிரைவர் கத்துவதைப் பார்த்தான்.
தாடிக்காரன் அசையாது நின்றான். வெளிப்படையான அவ்வெறுக்கத்தக்க டிரைவரின் உடல் அசைவுகளுக்கு தன் மறுமொழியை மறுக்கும் விதமாகச் சிறு ஒலியைக்கூட அவன் உண்டாக்கவில்லை… குறைந்த ‘பாதிப்பிற்குள்ளான’ மக்கள் இப்படித்தான் செய்வார்கள் – உடல் ரீதியாகத் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவரை பின்வாங்கி நிற்பர், தங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்களை எகிறிக் குதித்துக் கத்தும்படி விட்டுவிடுவர். உரையாடும் திறன் பலவீனப்பட்டுப் போனவர்களைப் போல உடல் பலத்தைக் காட்டுவது அவசியமற்ற ஒன்று என்று உணர்ந்திருக்கிறார்கள். மேன்மையானவர்களின் அணுகுமுறை அதுதான், அதை இந்த பஸ் டிரைவரைப் போன்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய “மேன்மை” பெரும்பாலும் தாக்குதல்களாலும், சிலநேரங்களில் மரணத்தினாலும் கூட தண்டிக்கப்படுகிறது. ரைய்யை கூட அப்படியான ஆபத்துகள் நெருங்கியிருக்கின்றன. அதனால் அவள் ஆயுதங்களின்றி வெளியே போவதில்லை. அதுவும் தற்போது உடல்மொழி மட்டுமே பொதுமொழியாக இருக்கக்கூடிய சாத்தியம் பெற்ற இவ்வுலகில் கையில் ஆயுதம் வைத்திருப்பது ஒன்றே போதுமானது. மிக அரிதாகத்தான் அவள் தனது துப்பாக்கியை எடுக்க வேண்டியிருக்கும், அதன் இருப்பைக் காட்டும் அவசியம் கூட எப்போதாவது தான் வரும்.
தாடிக்காரனின் ரிவால்வர் எந்நேரமும் பார்வையில் பட்டபடி இருந்தது. பஸ் டிரைவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது. டிரைவர் வெறுப்பில் காறித் துப்பினான், கணநேரம் தாடி மனிதனை வெறித்துப் பார்த்தான், பிறகு புகை நிரம்பிய தன் பேருந்தினுள் மீண்டும் தாவி ஏறினான். பஸ்ஸினுள்ளே சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்தில் எட்டிப் பார்த்தான், ஆனால் புகை இன்னமும் பலமாக இருந்தது. அத்தனை ஜன்னல்களில் ஓட்டுநர் பக்கமிருக்கும் சின்னஞ்சிறிய ஜன்னல் மட்டும்தான் உண்மையில் திறந்திருந்தது. முன்கதவைத் திறந்து வைக்க முடியும், ஆனால் பின்கதவை யாராவது பிடித்துக்கொள்ளா விட்டால் மீண்டும் சாத்திக் கொள்ளும். ஏ.சி எல்லாம் வேலை செய்வதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. பேருந்தில் புகை முற்றிலுமாக விலக சிலநேரம் பிடிக்கும். அது டிரைவரின் சொத்து, அதுதான் அவன் பிழைப்பிற்கு ஆதாரம். பழைய பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த சில பொருட்களின் புகைப்படங்களை வெட்டி இருபக்கமும் ஒட்டியிருந்தான், காசுக்குப் பதிலாக அப்பொருட்களைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். தான் சேகரித்த பொருட்களைக் கொண்டு அவன் குடும்பத்திற்கு உணவளிப்பான் அல்லது அவற்றை விற்றுவிடுவான். இப்பேருந்து ஓடவில்லையென்றால் அவனுக்கு உணவில்லை. அதே நேரத்தில் தேவையற்ற முட்டாள்தனமான சண்டைகளால் பேருந்தின் உட்பக்கம் பிளந்து உடைந்து சேதமடைந்தாலும் அவனுக்கு ஒழுங்கான உணவு கிடைக்கப் போவதில்லை. என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தன் பேருந்தை இயக்க முடியாது என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. தாடிக்காரனை நோக்கி தன் முஷ்டியை மடக்கிக் கத்தினான். அவன் கத்தலில் சில சொற்கள் இருந்ததைப் போலத் தெரிந்தது, ஆனால் ரைய்யால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவனுடைய பிரச்சினையா அல்லது தன்னுடையதா என்று அவளுக்குத் தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களில் கோர்வையான மனிதப் பேச்சுகளை மிகக் குறைவாகத்தான் கேட்டிருக்கிறாள், அவளால் அதை இனி கேட்டறிந்து கொள்ள முடியுமா என்பதும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை, அவளது பாதிப்பின் அளவைப் பற்றியும் அவளுக்கு உறுதியில்லை.
தாடிக்காரன் சலிப்புற்றான். அவன் தன் காரைப் பார்த்தான், பிறகு ரைய்யை அழைத்தான். அவன் கிளம்புவதற்குத் தயாராக இருந்தான். ஆனால் அதற்கு முன்னர் அவனுக்கு அவளிடமிருந்து எதுவோ தேவையாயிருந்தது. இல்லை… இல்லை, அவளும் தன்னுடன் கிளம்ப வேண்டுமென்று விரும்பினான். அவனுடன் காருக்குள் ஏறுவது ஆபத்தானது, அவன் காவல் சீருடையில்தான் இருக்கிறான் என்றாலும், சட்டம் ஒழுங்கு என்றெதுவும் இப்போது இல்லை – இப்போது சொற்கள் கூட துணைக்கு இல்லை.
அவளது எதிர்மறையான பதிலை உலகப் பொதுவான தலையசைப்பினால் உணர்த்தினாள். இருப்பினும் அவன் தொடர்ந்து கையசைத்து அவளை அழைத்தான்.
திருப்பி கைகளால் அவனை விரட்டினாள். குறைந்த பாதிப்புடையவர்கள் பொதுவாக வெளியில் செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவன் செய்துவிட்டான் – மற்றவர்களின் ஆபத்தான கவனத்தை ஈர்ப்பது. அங்கிருந்த மற்ற பயணிகள் இவளை நோக்கிப் பார்வையைத் திருப்பினர்.
சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவன் அடுத்தவனின் தோளைத் தட்டினான். பிறகு தாடிக்காரனில் தொடங்கி ரைய் வரை தன் விரல்களால் சுட்டிக் காட்டியபடி நகர்த்தி இறுதியாக வலது கையின் முதலிரண்டு விரல்களை உயரத் தூக்கினான், சாரணர் படையின் சல்யூட் போல. மிக விரைவான அசைவாக அது இருந்தாலும் கூட தூரத்திலிருந்தே அதன் அர்த்தம் தெளிவாகத் தெரிந்தது. அவள் அந்த தாடிக்காரனின் கூட்டாளி என்று அறிவித்து விட்டான். அடுத்து என்ன?
விரல்கள் சுட்டிய அம்மனிதன் அவளை நோக்கி நகர்ந்து வரத்தொடங்கினான்.
அவன் என்ன உத்தேசித்தான் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் அசையாமல் அப்படியே நின்றாள். அவன் அவளைவிட அரை அடி உயரமாக இருந்தான், பத்து வயது இளையவனாக இருக்கக்கூடும். அவனிடமிருந்து ஓடித் தப்பித்துக் கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தேவைப்பட்டால் அவளுக்கு உதவ யாரேனும் வருவார்கள் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவளைச் சுற்றியிருந்த அத்தனை பேருமே அவளுக்கு அந்நியர்கள் தான்.
ஒரேயொருமுறை அவள் சைகை காட்டினாள் – மிகத்தெளிவாக அவனை நிற்கச் சொல்லும் குறிப்பு அது. மீண்டுமொருமுறை அந்தச் சைகையைக் காட்டும் எண்ணம் அவளுக்கில்லை. நல்லவேளையாக, அம்மனிதன் கீழ்படிந்தான். அருவருக்கத்தக்க வகையில் அவன் தன் உடலசைத்துக் காட்டினான், சுற்றியிருந்த பல ஆண்கள் சிரித்தனர். வாய்மொழி தொலைந்து போனதில் விதவிதமான ஆபாச உடலசைவுகள் புதிதாக உருவாகியிருந்தன. அந்த மனிதன் மிக எளிமையாக தாடிக்காரனுடன் இவள் உறவு கொண்டிருக்கிறாள் என்றும் இங்குள்ள மற்ற ஆண்களையும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் – அது தன்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் உணர்த்தி விட்டான்.
மிகவும் சோர்வுற்று அவனை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை வன்புணர முயன்றாலும் இந்த மக்கள் இதைப் போலவே இப்படியே கூடி நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவள் அவனைத் துப்பாக்கியால் சுட்டாலும் கூட இப்படியே நின்று கொண்டிருப்பார்கள். அவன் அந்த எல்லைக்குச் சென்றுவிடுவானா?
அவன் செல்லவில்லை. அவன் தொடர்ச்சியாகக் காட்டிய ஆபாச அசைவுகள் அவனை அவளிடம் நெருங்க உதவவில்லை என்று தெரிந்ததும் அவமானத்துடன் திரும்பி நடந்து விலகிவிட்டான்.
அந்த தாடிக்காரன் இன்னமும் காத்துக் கொண்டிருந்தான். அவன் அவனுடைய துப்பாக்கி அதன் உறை என அத்தனையையும் கழற்றி வைத்துவிட்டிருந்தான். தன் வெற்றுக் கைகளால் அவளை அவன் மீண்டும் அழைத்தான். நிச்சயம் அவனுடைய துப்பாக்கி காரில் அவன் கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கும். ஆனால் அதை இவன் இப்போது கழற்றி வைத்திருப்பது அவன் மீது லேசான ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. ஒருவேளை அவன் நல்லவனாக இருக்கக்கூடும். அவன் தனியனாக இருக்கலாம். இவளும் மூன்று வருடங்கள் தனிமையில் தான் வாழ்கிறாள். அந்த நோய் அவளிடமிருந்த அத்தனையையும் பறித்துவிட்டிருந்தது, அவளுடைய குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றது, அவளுடைய கணவனைக் கொன்றது, அவள் தங்கையை, அவள் பெற்றோர்களை…
அந்த நோய், அது உண்மையிலேயே ஒரு நோய் தான் என்று வைத்துக்கொண்டால், உயிருடன் இருப்பவர்களைக் கூட தனித்தனியே பிரித்துவைத்து விட்டது, எதன் மீதும் பழி போடுவதற்குக் கூட மக்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை… புதிய வைரஸ், புதிய மாசு பொருள், கதிர்வீச்சு, தெய்வச் சாபம், ரஷ்யா! (மற்ற நாடுகளுடன் ரஷ்யாவும் சத்தமின்றி வீழ்ந்துகொண்டு தான் இருந்தது) இந்த நோய் மக்களைத் தாக்கும் விதம் மிகக் கூர்மையான ஒரு வெட்டு போல இருந்தது, அதன் விளைவுகளில் உடன் வெட்டியிழுக்கும் பக்கவாதம் போன்றவையும். ஆனால் அது மிகவும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தது.
பொதுவாக எல்லோருக்கும் மொழிதான் தொலைந்து போனது, அல்லது வெகுவாக பாதிப்பிற்குள்ளானது. அது திரும்பப் பெறமுடியாமலே போனது. அவ்வப்போது வேறு சில பாதிப்புகளும் இருந்தன, பக்கவாதம், புத்தி பேதலித்தல், மரணம்…
இரண்டு இளைஞர்களின் சீட்டியொலியையும் கைதட்டலையும், தாடிக்காரனிடம் அவர்கள் உயர்த்திக் காட்டிய கட்டை விரல்களையும் பொருட்படுத்தாது அவனை நோக்கி நடந்தாள். அவன் இவ்விருவருக்கும் பதில் புன்னகை அளித்திருந்தாலோ அல்லது அவர்களின் இருப்பை ஏதேனும் ஒருவிதத்தில் அங்கீகரித்திருந்தாலோ அவள் நிச்சயமாகத் தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள். ஒரு அந்நியனின் காரில் ஏறுவதால் உண்டாகக்கூடிய பின்விளைவுகளை அவளே ஒருமுறை எண்ணிப் பார்த்திருந்தால் கூட அவள் தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள். ஆனால், அதற்குப் பதிலாக தன் வீட்டின் எதிரில் குடியிருந்த ஒருவனைப் பற்றி எண்ணிப் பார்த்தாள். அவனை நோய் தாக்கியதிலிருந்து எப்போதாவது தான் குளித்தான். அவன் எங்கிருக்கிறானோ அங்கேயே மூத்திரம் பெய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டான். இருப்பினும், அவனுடன் இரண்டு பெண்கள் தங்கியிருந்தனர் – அவனுடைய இரண்டு பெரிய தோட்டங்களை ஆளுக்கொருவர் பராமரித்தனர். அவன் அளித்த பாதுகாப்பிற்கு ஈடாக அவனுடனேயே இருந்து விட்டனர். தனது மூன்றாவது துணையாக ரைய் இருக்க வேண்டும் என்பதையும் அவன் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தான்.
அவள் காரில் ஏறியதும் தாடிக்காரன் கதவை அடைத்தான். அவன் சுற்றி நடந்து டிரைவர் கதவிற்கு வருவதை ரைய் கவனித்தாள் – அவனது பாதுகாப்பைக் கருதியே அவனைச் சுற்றி கூர்ந்து நோக்கினாள். துப்பாக்கியை இருக்கையின் மீதே வைத்துவிட்டு காரைச் சுற்றி வந்தான். இரண்டு இளைஞர்களும் பஸ் டிரைவரும் சில அடிகள் நெருங்கி வந்து ஒன்று கூடினர். தாடிக்காரன் காரில் ஏறுவது வரை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால் அவன் காரில் ஏறியதும் ஒருவன் ஒரு கல்லை அவர்கள் மீது விட்டெறிந்தான். இதைச் சாக்காக வைத்து, கார் கிளம்பிச் செல்கையில் மற்றவர்களும் வீசியெறிந்த கற்கள் இவர்களைக் காயப்படுத்தாது காரில் பட்டுத் தெறித்து விழுந்தன.
பேருந்து அவர்களுக்குப் பின்னால் சற்று தொலைவில் பின்தங்கி விட்டிருந்தபோது, அவள் தன் நெற்றியின் வியர்வையைத் துடைத்தாள், ஓய்வு தேவையாயிருந்தது அவளுக்கு. பாஸடேனாவிற்குச் செல்லும் தூரத்தில் பாதிக்கு மேல் அப்பேருந்து அழைத்துச் சென்றிருக்கும். அங்கிருந்து அவள் வெறும் பத்து மைல்கள் தான் நடக்க வேண்டியிருந்திருக்கும். இப்போது அவள் எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்குமோ என்று யோசித்தாள் – நீண்ட தூரம் நடக்க வேண்டியிருப்பது மட்டும்தான் அவளுடைய ஒரே பிரச்சினையாக இருக்குமா என்றும் சந்தேகப்பட்டாள்.
பேருந்து வழக்கமாக இடது பக்கம் திரும்ப வேண்டிய இடத்தில் அவன் காரை நிறுத்தி அவளைப் பார்த்து எந்தப் பக்கம் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டுமென்று குறிப்புணர்த்தினான். அவள் இடதுபுறம் திரும்ப வேண்டுமென்று சொன்னதும் அவன் அதன்படியே செய்த பிறகுதான் அவள் சற்று தணிந்தாள். அவள் சொன்ன திசையில் அவன் செல்ல தலைப்படுகிறான் என்றால், அவள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்.
தீயில் கருகிய கைவிடப்பட்ட கட்டிடங்களையும், வெற்றிடங்களையும், சேதமடைந்த உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட கார்களையும் அவர்கள் கடந்து செல்கையில், தன் தலைக்கு மேலாகச் சுற்றிக் கழற்றி ஒரு தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தான் தாடிக்காரன். அந்தச் சங்கிலியில் பதக்கமாக மென்மையான கண்ணாடி போன்ற ஒரு கறுப்பு கல் கோர்க்கப்பட்டிருந்தது. ஓப்ஸிடியன் . அவன் பெயர் ‘ராக்’ என்றோ ‘பீட்டர்’ என்றோ ‘பிளாக்’ என்றோ கூட இருக்கலாம், ஆனால் அவனை ‘ஓப்ஸிடியன்’ என்றுதான் நினைக்க வேண்டும் என்று முடிவுசெய்தாள். (அவன் பெயர் ஓப்ஸிடியன்தான் என்று அவளே முடிவுசெய்து விட்டாள்) எதற்கும் உபயோகமற்ற அவளின் ஞாபகசக்தி கூட சிலசமயம் ஒப்ஸிடியன் போன்ற பெயர்களைத் தக்கவைத்துக் கொள்கிறது.
அவளும் தன்னுடைய பெயரைக் குறிக்கும் ஒரு சின்னத்தைக் கொடுத்தாள் – பெரிய தங்கக் கோதுமைக் கதிரின் வடிவிலான ஒரு பிணைப்பூசி. இந்த நோயும் மௌனமும் தொடங்குவதற்கு வெகு காலம் முன்னரே அவள் அதை வாங்கியிருந்தாள். “ரைய் ” என்ற பெயரின் அர்த்த அடையாளமாக இது அமைந்திருக்கிறதென எண்ணி இதை இப்போதெல்லாம் அணிந்து கொள்கிறாள். இவளை இதற்கு முன் அறிந்திராத ஓப்ஸிடியன் போன்றவர்கள் அனேகமாக அவள் பெயர் ‘கோதுமை’ என்றே எண்ணிக் கொள்வார்கள். அதைப் பற்றி ஒரு கவலையுமில்லை. அவளின் பெயர் உச்சரிக்கப்படுவதை மீண்டும் அவள் கேட்கப் போவதேயில்லை.
அந்தக் குத்தூசியை மீண்டும் அவளிடமே திருப்பிக் கொடுத்தான் ஓப்ஸிடியன். அதை வாங்குவதற்கு நீட்டிய அவளின் கையைப் பிடித்து அதன் தடித்த மேல் தோலை தன்னுடைய கட்டை விரலால் தேய்த்தான்.
‘ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்டில்’ வண்டியை நிறுத்தி எந்தத் திசையில் போவதென்று மீண்டும் கேட்டான். பின்னர் அவள் சுட்டிக் காட்டியபடி வலதுபுறம் திரும்பி ஒரு இசை மையத்தினருகே வண்டியை நிறுத்தினான். மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை டாஷ்-போர்டிலிருந்து எடுத்துப் பிரித்தான். அது ஒரு வரைபடம் என்பதை ரைய் விளங்கிக் கொண்டா.ள் ஆனால் அதன்மீது எழுதியிருந்த எதுவும் அவளுக்குப் பொருள்படவில்லை. அவ்வரைபடத்தை அவன் முழுதாக விரித்து, அவள் கையை மீண்டும் பற்றி சுட்டுவிரலைப் பிடித்து ஒரு குறிப்பிட்ட இடத்தின் மீது வைத்தான். அவன் அவளைத் தொட்டான், தன்னை தொட்டான், பிறகு தரையைச் சுட்டிக் காட்டினான். “நாம் இங்கு இருக்கிறோம்.” அவள் எங்கு போகவேண்டும் என்று தெரிந்துகொள்ள அவன் விழைகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவனிடம் சொல்ல வேண்டுமென்று தான் அவளுக்கும் விருப்பம், ஆனால் அவள் சோகமாகத் தன் தலையை ஆட்டினாள். படிக்கும், எழுதும் திறனை அவள் முற்றாக இழந்துவிட்டாள். நோயினால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் மிக மோசமானதும் அவளுக்கு வலி மிகுந்ததும் அதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடம் எடுத்தவள் அவள். நேரம் கிடைக்கும்போது எழுதவும் செய்தாள். தான் எழுதியதையே அவளால் தற்போது வாசிக்க முடியவில்லை. அவள் வீடு முழுதும் புத்தகங்களால் நிறைந்து இருந்தன, அவற்றைப் படிக்கவும் இயலவில்லை. தீயிட்டுக் கொளுத்தவும் முடியவில்லை. அவள் முன்னர் படித்தது எதையும் நினைவில் பெருமளவில் மீட்டெடுக்க முடியாத அளவில் தான் அவளது ஞாபகத்திறன் இருந்தது.
வரைபடத்தை வெறித்துப் பார்த்தாள், எதையோ கணக்கிட முயன்றாள். அவள் பாஸடேனாவில் தான் பிறந்தாள், கடந்த பதினைந்து வருடங்களாக லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்து வந்தாள். சமூக மையக் கட்டிடத்தின் அருகே குடியிருந்தாள். அவளுக்குத் தோராயமாக இவ்விரண்டு நகரங்களின் இடநிலை தெரியும், அதன் தெருக்களும் வழிகளும் தெரியும், சேதமுற்று அனாதரவாக இருக்கும் கார்கள் மறித்துக்கொண்டிருக்கும் என்பதால் நெடுஞ்சாலையைத் தவிர்க்க வேண்டும் என்பதும் தெரியும். வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும் பாஸடேனா எங்கிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
தயக்கத்துடன், வரைபடத்தின் வலது மேல்மூலையில் இருக்கும் வெளிறிய ஆரஞ்சு நிற நிலத்துண்டின் மீது கை வைத்தாள். சரியாகத்தான் இருக்கும். பாஸடேனா.
ஓப்ஸிடியன் அவள் கையைப் பற்றித் தூக்கி அதனடியில் சுட்டிய இடத்தைப் பார்த்தான், பிறகு வரைபடத்தை மடித்து வைத்தான். அவனால் படிக்க முடிகிறது என்பதை மிகத் தாமதமாகத்தான் அவள் புரிந்து கொண்டாள். அவனால் எழுதவும் கூடுமோ என்னவோ. சட்டென, அவன்மீது அவளுக்கு வெறுப்பு உண்டானது – மிக ஆழமான கசப்பூறும் ஒரு வெறுப்பு. திருடன்-போலீஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பெருத்த மனிதனான இவனுக்கு மொழியறிவு என்னவென்று பொருள்படும். ஆனால் இப்போது அவன்தான் கல்வியறிவு உடையவன், அவளில்லை. இனி ஒருபோதும் அவளுக்கு அது இல்லை. அதீத வெறுப்பினாலும் விரக்தியானாலும் உள்ளார்ந்த பொறாமையினாலும் அவளின் அடிவயிறு புரட்டிக் கொண்டு வருவது போல உணர்ந்தாள். அவள் கை தொடும் தூரத்தில்தான் தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியும் இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள், அவனைத் துளைத்து அவனுள் ஓடும் குருதியை விழியாலேயே தொட்டுவிடும் அளவிற்கு வெறித்துப் பார்த்தாள். அவளின் ஆத்திரம் அலையைப் போலப் பொங்கிப் பொங்கி ஆர்பரித்தது. அவள் எதுவும் செய்யவில்லை.
பரிச்சயமான தயக்கத்துடன் ஓப்ஸிடியன் எட்டி அவள் கைகளைப் பிடித்தான். அவள் அவனைப் பார்த்தாள். அவள் முகம் ஏற்கனவே போதுமான அளவிற்கு அவளைக் காட்டிக்கொடுத்து விட்டது. மிஞ்சியிருக்கும் இம்மனிதச் சமூகத்தில் அவளின் இம்முக பாவனையை, அந்த பொறாமையை விளங்கிக் கொள்ளாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவள் தளர்ந்து கண்களை மூடி நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். கடந்த காலங்களின் மீதான ஏக்கத்தில் உழன்றிருக்கிறாள், நிகழ்காலத்தின் மேல் வெறுப்பையும், நீளும் நம்பிக்கையின்மையையும், நோக்கமற்ற இவ்வாழ்வையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால், அடுத்தவனைக் கொல்லும் இவ்வலுமிகு வேட்கையை அவள் ஒருபோதும் அனுபவித்ததில்லை. அவள் கிட்டத்தட்டத் தன்னையே கொல்லும் நிலைக்குச் சென்றுவிட்டதால் தான் வீட்டைவிட்டு இறுதியாக வெளியேறினாள். உயிரோடு இருப்பதற்கான காரணம் எதுவும் அவளிடம் இல்லை. ஒருவேளை அதனால்தான் அவள் ஓப்ஸிடியனின் காரில் ஏறியிருக்கலாம். இதற்குமுன் இப்படி ஒரு செயலை அவள் செய்ததில்லை.
அவன் விரல்களால் அவளின் உதட்டைத் தொட்டு அசைத்துப் பேசுவதைப் போன்ற பாவனையைச் செய்தான். அவளால் பேச முடியுமா?
அவள் தலையசைத்தாள், அவனுள் லேசான பொறாமை வந்து போவதைக் கவனித்தாள். வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாதவற்றை அவர்கள் இருவருமே இப்போது காட்டிவிட்டார்கள், ஆனாலும் வன்முறை எதுவும் அங்கே நிகழவில்லை. அவன் தன்னுடைய வாயையும் நெற்றியையும் தட்டி தலையை ஆட்டினான். அவனால் பேசவோ அல்லது பேச்சுமொழியைப் புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இந்த நோய் அவர்களின் மீதொரு வன்மையான விளையாட்டை ஆடியிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் மதிப்புமிக்கது எதுவோ அதைப் பறித்துச் சென்றுவிட்டது என்று அவள் சந்தேகப்பட்டாள்.
அவனது சட்டைக் கையைப் பிடித்து இழுத்தாள். தன்னிடம் மிஞ்சி இருப்பதை வைத்துக்கொண்டு ஏன் அவன் லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடிவெடுத்தான் என்று ஆச்சரியப்பட்டாள். மற்றபடி அவன் போதுமானளவு புத்தியுள்ளவனாகத்தான் இருந்தான். ஏன் அவன் வீட்டில் சோளம் வளர்த்து, முயல்களுடனும் குழந்தைகளுடனும் வாழவில்லை? ஆனால் இதை எப்படி கேட்பதென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது அவன் அவள் தொடையின் மீது தன் கைகளை வைத்தான். அவள் பதிலளிக்க வேண்டிய மற்றொரு கேள்வி வந்துவிட்டது.
இல்லையெனும்படி அவள் தலையை ஆட்டினாள். நோய், கர்ப்பம், கையறு நிலை, தனிமைத் துயர்… வேண்டாம்!
அவள் தொடையை அவன் மென்மையாகத் தடவிக் கொடுத்தான், வெளிப்படையாகத் தெரியும் ஒரு அவநம்பிக்கைப் புன்னகையை விடுத்தான்.
கடந்த மூன்று வருடங்களில் அவளை யாரும் தொட்டது இல்லை. யாரும் தன்னைத் தொடுவதும் அவள் விரும்பவில்லை. ஒரு தந்தை தன்னுடனே தங்கியிருக்கச் சம்மதித்து, வளர்ப்பதற்கும் தயாராகவே இருந்தாலும் கூட ஒரு குழந்தையைக் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்குவதற்கு ஏற்ற உலகமா இது தற்போது? மிகவும் மோசமானது. அவள் கண்களுக்கு ஓப்ஸிடியன் எவ்வளவு கவர்ச்சிகரமானவனாகத் தெரிந்தான் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாது – சுத்தமாக இருந்தான், இளமையானவன், அனேகமாக அவளை விட வயது குறைந்தவனாக இருக்கலாம். தனக்கு என்ன வேண்டுமென்பதைக் கேட்டுப் பெறுபவனாக இருந்தான், பறிப்பவனாக இல்லை. ஆனால் அது எதுவும் இப்போது முக்கியமில்லை. வாழ்நாள் முழுதும் தொடரும் பின்விளைவுகளுக்கு முன்னால் இந்த சிலநொடி சுகத்தின் மதிப்புதான் என்ன?
அவளை தன்னருகே அவன் பற்றியிழுத்தான், அவளும் ஒரு கணம் அந்நெருக்கத்தை மகிழ்ந்து அனுபவித்தாள். அவனிலிருந்து நல்ல வாசம் வந்தது – ஆண் வாசம், ஆனால் நல்ல வகையைச் சேர்ந்தது. அவள் தயக்கத்துடன் விலகினாள்.
அவன் சலிப்பாக காரின் வைப்புப் பெட்டியைத் திறந்தான். என்ன எடுக்கப் போகிறான் என்பதை அறியாமல் அவள் உறைந்து போனாள். ஆனால் அவன் அதிலிருந்து ஒரு சின்ன பெட்டியைத்தான் எடுத்தான். அதன்மீது எழுதியிருந்தது எதுவும் அவளுக்கு விளங்கவில்லை. அவன் உறையைப் பிரித்து பெட்டியைத் திறந்து உள்ளிருந்து ஒரு ஆணுறையை வெளியே எடுக்கும்வரை அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவன் அவளைப் பார்த்தான், அவள் ஆச்சரியத்தில் முதலில் பார்வையை விலக்கிக் கொண்டாள். பிறகு வெட்கிச் சிரித்தாள். கடைசியாக அவள் சிரித்தது எப்போது என்று அவள் நினைவில் இல்லை.
அவன் அசட்டுச் சிரிப்புடன் பின்னிருக்கையை நோக்கி சைகை காட்டினான். அவள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அவள் தன்னுடைய பதின்பருவத்தில் கூட பின் இருக்கைச் சமாச்சாரங்களை விரும்பியதில்லை. ஆனால் காலியான தெருக்களையும் சிதிலமுற்ற கட்டிடங்களையும் ஒருமுறை அவள் சுற்றிப் பார்த்தாள், பின் காரிலிருந்து வெளியே வந்து பின்னிருக்கைக்குள் நுழைந்தாள். ஆணுறையைப் போட்டுவிட அவளை அனுமதித்தான், அவளின் ஆர்வத்தைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.
சிறிது நேரம் கழித்து அவனுடைய மேலங்கியை போர்த்திக்கொண்டு அவர்களிருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர், ஆடைகளை அணிந்து மீண்டும் கிட்டத்தட்ட அந்நியர்களாக மாறிவிடும் விருப்பம் தற்போதைக்கு இல்லை அவர்களிடத்தில். குழந்தையைத் தாலாட்டும் அசைவுகளைக் காட்டி முகத்தில் கேள்விக்குறியோடு அவளைப் பார்த்தான்.
எச்சில் விழுங்கினாள், தலையை லேசாக அசைத்தாள். ஆனால் தன் குழந்தைகள் இறந்துவிட்டன என்பதை அவனிடம் எப்படிச் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அவன் அவள் கைகளை எடுத்து தன் ஆட்காட்டி விரலால் சிலுவையை வரைந்து மீண்டும் குழந்தையைத் தாலாட்டும் சைகையைக் காட்டினான்.
அவள் தன் தலையை ஆட்டி மூன்று விரல்களை உயர்த்திக் காட்டி, புரண்டு வரும் நினைவுகளை அடைக்க வேண்டி தன் தலையைத் திருப்பிக் கொண்டாள். தற்போது வளர்ந்து வரும் குழந்தைகள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். உயரமான கட்டிடங்களெல்லாம் எப்படி இருந்தன அல்லது அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றியெல்லாம் எந்த நினைவுகளுமின்றி அவர்கள் நகரங்களின் குறுகிய பள்ளத்தாக்குகளில் ஓடித்திரிவர். இன்றைய குழந்தைகள் விறகுகளையும் புத்தகங்களையும் எரிபொருளென, இரண்டும் ஒன்றெனக் கருதித்தான் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் துரத்திக்கொண்டு, சிம்பன்ஸிக்களைப் போலக் கூப்பாடு போட்டு தெருக்களெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்காலமில்லை. இப்போது இருப்பதைப் போலத்தான் அவர்கள் எப்போதும் இருக்கப் போகிறார்கள்.
அவள் தோளின் மீது கையை வைத்தான், அவள் சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்து அந்தச் சிறிய பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடினாள், பிறகு அவனை மீண்டும் தன்னுடன் காதல் செய்யும்படி வற்புறுத்தினாள். அவனால் அவளுக்கு புலனின்பத்தையும் தற்காலிக மறதியையும் கொடுக்க முடிகிறது. இதுவரை வேறெதுவும் அவளுக்கு இவற்றைத் தந்ததில்லை. இதுவரை அவள் எதைத் தவிர்ப்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறினாளோ, அதை நோக்கித்தான் ஒவ்வொரு நாளும் அவளை இழுத்துக் கொண்டிருந்தது: தன் வாயினுள் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்துவது.
தன்னுடன் தன் வீட்டிற்கு வந்து அவளுடனேயே தங்கிவிடும்படி ஓப்ஸிடியனிடம் கேட்டாள்.
அவன் அதைப் புரிந்து கொண்டதும் ஆச்சரியமடைந்தவனாகவும் உவகைக் கொண்டவன் போலவும் தோன்றினான். ஆனால் அவன் உடனடியாக பதில் சொல்லவில்லை. கடைசியில் அவள் பயந்ததைப் போலவே அவன் தலையை ஆட்டினான். திருடன்-போலீஸ் விளையாடுவதும் பெண்களை இப்படி அழைத்து அனுபவித்து பின் விலக்குவதுமே அவனுக்குப் போதுமான மகிழ்வைத் தருவதாக இருக்கிறது போலும்.
அவன் மீது எவ்விதமான கோபமும் எழாமல் அவள் அமைதியாக ஏமாற்றத்துடன் தன் ஆடையை உடுத்திக் கொண்டாள். ஒருவேளை அவனுக்கு ஏற்கனவே மனைவியும் வீடும் இருக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் பெண்களை விடவும் ஆண்களின் மீதுதான் அதிகமாக இருந்தது – நிறைய ஆண்களைக் கொன்றுவிட்டது. மீதமிருக்கும் ஆண்கள் தீவிர பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர். ஓப்ஸிடியன் போன்ற ஆண்கள் மிகவும் அரிதுதான். பெண்கள் தங்களுக்குக் கிடைத்தவர்களை ஏற்றுக்கொண்டனர் அல்லது தனியாகவே வாழ்ந்தனர். அவர்கள் ஓப்ஸிடியனைக் கண்டார்களெனில் அவனைத் தனதாக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இளமையான, அதிக அழகுள்ள யாரோ ஒருத்தி தான் அவனைச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பாள் என்று ரைய் சந்தேகப்பட்டாள்.
அவள் தன்னுடைய துப்பாக்கியை ஆடையோடு இணைத்துக் கட்டும்போது அவன் அவளைத் தொட்டு மிகச்சிக்கலான அசைவுகளால் இத்துப்பாக்கியில் தோட்டாக்கள் உண்டா எனக் கேட்டான்.
அவள் பற்களைக் காட்டிச் சிரித்து ஆமாமெனத் தலையாட்டினாள்.
அவன் அவள் தோள்களைத் தட்டிக் கொடுத்தான்.
இம்முறை வேறுவிதமான அசைவுகளைக் காட்டி அவனைத் தன்னுடன் தன் வீட்டிற்கு வர முடியுமாவென மீண்டும் கேட்டாள். முதல்முறை கேட்டபோது அவன் தயக்கம் காட்டினான். உறுதியாக நின்று லேசாக வற்புறுத்தினால் ஒருவேளை அவனை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடலாம்.
அவன் பதிலளிக்காமல் வெளியே வந்து முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
அவளும் தன்னுடைய முன் இருக்கையில் அவனைப் பார்த்தபடி அமர்ந்தாள். இப்போது அவன் தன்னுடைய சீருடையைப் பிடித்திழுத்து அவளைப் பார்த்தான். தன்னிடம் அவன் எதுவோ கேட்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.
அவன் தன்னுடைய போலீஸ் முத்திரையைக் கழற்றி ஒரு விரலால் அதைத் தொட்டு பின் தன்னுடைய இதயத்தின் மீது கைவைத்தான். சரிதான்!
அந்த முத்திரையை அவனிடமிருந்து வாங்கி தன்னுடைய கோதுமைக் கதிரை அதனுடன் பிணைத்தாள். இப்படியே போலீஸ்-திருடன் விளையாடுவது தான் அவனுடைய ஒரே பைத்தியக்காரத்தனமென்றால் அவன் அதைச் செய்யட்டும். அவள் தடுக்கப் போவதில்லை. அவள் அவனை, அவன் சீருடையையும் மற்றெல்லாவற்றையும் சேர்த்தே தான் தனக்கென எடுத்துக் கொள்வாள். ஒரு கட்டத்தில் தன்னைப்போல அவன் சந்திக்கும் வேறு யாரிடமோ அவனை அவள் தொலைக்க நேரிடும் என்பதும் அவள் மனதில் தோன்றியது. ஆனால் அதுவரையில் அவன் அவளுக்குச் சொந்தமானவன்.
அவன் வரைபடத்தை மீண்டும் எடுத்து விரித்து, தோராயமாக வடகிழக்கு மூலையில் பாஸடேனாவை நோக்கி கை வைத்து, பிறகு அவளைப் பார்த்தான். அவள் தோள்களைக் குலுக்கினாள். அவனுடைய தோள்களைத் தொட்டு பின் தன்னையும் தொட்டு தன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக இறுக்கிச் சேர்த்து உயரத் தூக்கி காட்டினாள். இணைப்பை உறுதிபடுத்திக் கொண்டாள்.
அவ்விரண்டு விரல்களையும் பற்றிக்கொண்டு தலையசைத்தான். அவனும் உறுதியேற்றுக் கொண்டான்.
அவனிடமிருந்து வரைபடத்தைப் பிடுங்கி எறிந்தாள். அவள் தென்மேற்கு திசையைச் சுட்டிக்காட்டினாள் – மீண்டும் வீட்டுக்கு. அவள் இனி பாஸடேனா செல்ல வேண்டியதில்லை. அவள் சகோதரனும் அவனின் இரண்டு மகன்களும் – வலது கை பழக்கமுடைய மூன்று ஆண்கள் – அங்கேயே பத்திரமாக இருக்கலாம். பயப்படுமளவிற்குத் தான் தனிமையில்தான் உழல்கிறோமா என்றெல்லாம் அவள் சிந்தித்து அதைப் புரிந்துகொள்கிற தேவை இனியில்லை. இப்போது அவள் தனியானவள் அல்ல.
ஓப்ஸிடியன் வண்டியைத் திருப்பினான், அவள் அவன் மீது சாய்ந்தாள், வாழ்வில் மீண்டும் ஒருவரின் அருகாமை கொடுக்கும் உணர்வுகள் என்னவென்று அறியும் ஆவலுடன். அவள் இதுவரை என்னவெல்லாம் தேடிச் சேகரித்தாளோ, எதையெல்லாம் பாதுகாத்து வைத்திருக்கிறாளோ, எவற்றையெல்லாம் பயிரிட்டு வளர்த்திருக்கிறாளோ அவையே அவர்களிருவருக்கும் போதுமானது. நான்கு அறைகள் கொண்ட அவளது வீட்டில் நிச்சயமாக அவர்களுக்குப் போதுமான இடம் இருக்கும். அவனுடைய பொருட்களைக் கூட இங்கே கொண்டுவந்து விடலாம். அனைத்திற்கும் மேலாக, தெருவில் எதிர் வீட்டில் இருக்கும் அந்த மிருகம் இனி விலகி நிற்பான், அவனைக் கொன்றுவிடும் நிலைக்கு அவளை இனி தள்ள மாட்டான்.
ஓப்ஸிடியன் தன்னருகே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான், தோள் மீது அவள் தலை சாய்த்த நேரம் அவன் சடாரென பிரேக் போட்டான். அவள் தன் இருக்கையிலிருந்து கிட்டத்தட்ட வீசியெறியப்பட்டாள். கண்களின் ஓரப்பார்வையில் யாரோ தெருவைக் கடக்கையில் கார் முன்னே வந்து நின்றதைப் பார்த்தாள். சாலையில் ஒரே ஒரு கார் தான் இப்போது ஓடுகிறது, அதற்கு முன்னால் வந்துதானா ஒருவர் பாய வேண்டும்?
ரைய் நிமிர்ந்து எழுந்தபோது ஓடிக்கொண்டிருப்பது ஒரு பெண் என்பதைக் கண்டாள். பழைய வீடு ஒன்றிலிருந்து தப்பித்து பலகைகளால் அடைத்துச் சாத்தப்பட்டிருக்கும் ஒரு கடையை நோக்கி ஓடினாள். அவள் சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தாள், ஆனால் அவளை பின்னால் துரத்தி வந்த மனிதன் ஏதோ சிதைந்த சொற்களால் கூச்சலிட்டான். அவன் கையில் எதுவோ இருந்தது. துப்பாக்கி இல்லை. கத்தியாக இருக்கலாம்.
அந்தப் பெண் கடையின் கதவைத் திறக்க முயன்றாள், அது பூட்டியிருந்ததைக் கண்டதும், மூர்க்கமாகச் சுற்றிமுற்றித் தேடி கடைசியில் கடையின் முன் ஜன்னலின் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டாள். அதைக் கையில் கொண்டு தன்னைத் துரத்தி வந்தவனை நோக்கித் திரும்பினாள். அந்தக் கண்ணாடித் துண்டால் வேறு யாரையும் காயப்படுத்துவதை விடவும் தன் கையைத்தான் அவள் வெட்டிக்கொள்ளப் போகிறாள் என்று நினைத்தாள் ரைய்.
ஓப்ஸிடியன் சத்தம் போட்டபடி காரிலிருந்து எகிறிக் குதித்தான். இப்போதுதான் முதல் முறையாக ரைய் அவனுடைய குரலைக் கேட்கிறாள் – ஆழமான, ஆனால் அதிகம் பயன்படுத்தாததால் கரகரத்துப் போன குரல். பேச்சிழந்த மனிதர்கள் செய்வதைப் போல அவன் ஒரே சத்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பினான், “டா, டா, டா!”
அந்த இருவரையும் நோக்கி ஓப்ஸிடியன் ஓடியபோது ரைய் காரைவிட்டு இறங்கினாள். அவன் தன்னுடைய துப்பாக்கியைக் கையில் வைத்திருந்தான். பயத்தில் அவளும் தன் துப்பாக்கியை வெளியே எடுத்துச் சுடுவதற்கு தயார்படுத்தினாள். இந்த நிகழ்வு எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்று அறிந்துகொள்ள அவள் சுற்றித் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதன் ஓப்சிடியனை ஒரு கணம் நோக்கிவிட்டு உடனே அந்தப் பெண் மீது பாய்ந்து தாக்கினான். அந்தப் பெண் அவன் முகத்தை கண்ணாடியால் குத்தித் தள்ளினாள். ஆனால் ஓப்ஸிடியன் அவனைச் சுடுவதற்குள்ளாகவே அவன் அவள் கைகளைத் தடுத்துப் பிடித்து அவளை இரண்டு முறை கத்தியால் குத்திவிட்டான்.
அம்மனிதன் அடிவயிற்றைப் பிடித்தபடி மடங்கி கீழே கவிழ்ந்தான். ஓப்ஸிடியன் உரக்கக் கத்தினான், இங்கு வந்து அந்தப் பெண்ணிற்கு உதவும்படி ரைய்யை நோக்கி சைகை காட்டினான்.
தன்னுடைய பையில் பஞ்சுக் கட்டுகளும் கிருமி நாசினிகளும் இருப்பது அவள் நினைவிற்கு வந்தது, அப்பெண்ணின் பக்கமாகச் சென்று நின்றாள். ஆனால் அப்பெண்ணிற்கு உதவி தேவையாயிருக்கவில்லை. கூர்மையான பற்களுடைய நீண்ட கத்தியால் குத்தப்பட்டிருந்தாள்.
அப்பெண் இறந்துவிட்டாள் என்பதை அவனுக்குத் தெரிவிப்பதற்காக அவள் ஓப்ஸிடியனை தொட்டாள். இறந்துவிட்டனைப் போலக் காணப்பட்ட, அடிபட்டு அசைவற்று கிடந்த மனிதனைப் பரிசோதிப்பதற்காக ஓப்ஸிடியன் குனிந்திருந்தான். ஆனால் ரைய் தொட்டதும் அவளைப் பார்ப்பதற்கு ஓப்ஸிடியன் திரும்பியபோது அவன் கண்கள் திறந்தன. கிழிபட்ட முகத்துடன் இருந்த அவன், அப்போதுதான் உறையில் வைக்கப்பட்டிருந்த ஓப்ஸிடியனின் துப்பாக்கியை எடுத்து அவனைச் சுட்டான். ஓப்ஸிடியன் நெற்றியில் குண்டு பாய்ந்து அவன் குலைந்து விழுந்தான்.
அவ்வளவு சாதாரணமாக அது நடந்துவிட்டது, அவ்வளவு வேகமாக. ஒருகணம் கழித்து, அவன் துப்பாக்கியை அவளை நோக்கித் திருப்ப, ரைய் அடிபட்ட அம்மனிதனைச் சுட்டாள்.
இப்போது ரைய் தனியாக இருந்தாள் – மூன்று பிணங்களுடன்.
உலர்ந்த கண்களுடன், நெரித்த முகத்துடன், ஏன் அத்தனையும் இப்படிச் சட்டென மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஓப்ஸிடியன் அருகில் மண்டியிட்டாள். ஓப்ஸிடியன் போய்விட்டான். மற்ற எல்லோரையும் போலவே அவனும் இறந்து அவளை நீங்கிச் சென்றுவிட்டான்.
அந்த ஆணும் பெண்ணும் வெளியேறி ஓடிவந்த வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் வெளியே வந்தனர் – ஒரு சிறுவனும் சிறுமியும், மூன்று வயதிருக்கலாம். அவர்கள் கைகளைக் கோர்த்தபடி சாலையைக் கடந்து ரைய்யை நோக்கி வந்தனர். அவர்கள் அவளை வெறித்துப் பார்த்தனர், பிறகு அவளை உரசிக் கடந்து இறந்த பெண்ணின் அருகே சென்றனர். அந்தச் சிறுமி இறந்தவளின் கைகளைப் பிடித்து ஆட்டினாள், அவளை எழுப்ப முயல்பவள் போல.
ரைய்யால் இதைத் தாள முடியவில்லை. கோபத்திலும் துக்கத்திலும் அவள் வயிறு ஏதோ செய்தது. அச்சிறுவர் அழத் தொடங்கினால் தான் வாந்தி எடுத்துவிடக் கூடும் என்று தோன்றியது அவளுக்கு.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இப்போது வேறு யாரும் இல்லை. சுற்றியலைந்து உணவைத் தேடிச் சேகரிக்கும் வயதை அடைந்து விட்டவர்கள். இதற்கு மேல் இனி அவளுக்கு புதிய துன்பங்கள் எதுவும் வேண்டாம். முடியற்ற சிம்பன்ஸிக்களாக பின்னாளில் வளர்ந்து நிற்கப்போகும் பெயர் அறியாத ஒருவரின் குழந்தைகள் அவளுக்குத் தேவையில்லை.
அவள் மீண்டும் காரை நோக்கிச் சென்றாள். குறைந்தபட்சம் அவளால் தன் வீட்டிற்கு வண்டியோட்டிப் போகமுடியும். கார் ஓட்டுவது எப்படி என்பது அவள் ஞாபகத்தில் இன்னமும் இருந்தது.
காரை நெருங்கும் முன்னர், ஓப்ஸிடியானை அடக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்ததும் வாந்தியெடுத்து விட்டாள்.
தனக்கென ஒரு துணையைக் கண்டுபிடித்து சடுதியில் அவனைத் தொலைத்தும் விட்டாள். அவளுக்கென இருந்த ஆதரவையும் பாதுகாப்பையும் பறித்துக்கொண்டு திடீரென விவரிக்க முடியாத வலிதரும் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதைப் போலிருந்தது. அவளது மூளை தெளிவாக இல்லை. அவளால் சிந்திக்க முடியவில்லை.
ஒருவழியாக அவள் அவனருகில் போகும்படி தன்னைத் திரட்டிச் செலுத்தினாள், அவனைப் பார்த்தாள். தன்னையறியாமலேயே மண்டியிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்தாள். அவன் முகத்தையும் தாடியையும் தடவிக் கொடுத்தாள். குழந்தைகளில் ஒன்று இறந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ஏதோ சத்தமெழுப்பியதும் அவர்களைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் அனேகமாக அவர்களுடைய அம்மாவாக இருக்கக்கூடும். அக்குழந்தைகளும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பயந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர்களுடைய பயம்தான் அவளின் ஆழத்தை இறுதியாகச் சென்று தொட்டிருக்கலாம்.
இவர்களை இப்படியே விட்டுவிட்டு வண்டியோட்டிச் சென்று விடுவதாகத்தான் இருந்தாள். அவ்விரு சிறார்களையும் கிட்டத்தட்ட இறக்கும்படி அப்படியே விட்டுச் சென்றுவிடத் துணிந்தாள். ஆனால் அங்கே ஏற்கனவே போதுமான அளவு இறப்புகள் நிகழ்ந்து விட்டன. குழந்தைகளைத் தன்னுடனே வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த முடிவு எடுத்தாலும் அது அவளை நிம்மதியாக வாழ விடாது. மூன்று உடல்களையும் அடக்கம் செய்வதற்கு இடத்தை தேடிச் சுற்றிப் பார்த்தாள். அல்லது இரண்டிற்காவது. கொலை செய்தவன் இவர்களின் அப்பாவாக இருப்பானோ என்று சந்தேகப்பட்டாள். ‘மௌனம்’ பரவுவதற்கு முன்னால் போலீஸ் எப்போதுமே சொல்வது ஒன்றுண்டு, அவர்களுக்கு வரும் ஆபத்தான அழைப்புகள் எல்லாம் குடும்ப வன்முறை காரணமாகத்தான் இருக்கும் என்று. ஓப்ஸிடியானுக்கும் இது தெரிந்திருக்க வேண்டும் – இதைத் தெரிந்து வைத்திருந்தால் அவன் இம்முறை காரிலேயே இருந்திருப்பான் என்று அர்த்தமில்லை. அந்த அறிவு அவளையும் கூட தடுத்து சும்மா இருந்திருக்க விட்டிருக்காது. ஒரு பெண் கொலை செய்யப்படுவதை அவளால் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது.
அவள் ஓப்ஸிடியானை காரை நோக்கி இழுத்துச் சென்றாள். குழி தோண்டுவதற்கு அவளிடம் எதுவுமில்லை, தோண்டும்போது அவளைப் பாதுகாப்பதற்கும் யாரும் இல்லை. உடல்களை அவளுடனே எடுத்துச் சென்று வீட்டில் கணவருக்கும் அவளின் குழந்தைகளுக்கும் பக்கத்தில் இவர்களை அடக்கம் செய்வதுதான் நல்லது. அப்படியாவது ஓப்ஸிடியன் அவளுடன் அவள் வீடு வரைக்கும் வருவான்.
காரினுள்ளே அவனைக் கீழே கிடத்தியதும் அந்தப் பெண்ணை இழுத்து வருவதற்காகத் திரும்பிப் போனாள். அந்தச் சிறுமி, மெலிந்து அழுக்கடைந்து ஆர்ந்தமைதி கொண்டிருந்த அவள் தன்னையறியாமலே எதிர்பாராத ஒரு பரிசை ரைய்க்கு கொடுத்தாள். அந்தப் பெண்ணின் உடலை கைகளைப் பற்றி ரைய் இழுத்தபோது, சிறுமி சத்தம் போட்டுக் கத்தினாள், “வேண்டாம்!”
ரைய் அப்பெண்ணுடலைக் கீழே போட்டு அச்சிறுமியை உற்றுப் பார்த்தாள்.
“வேண்டாம்!” சிறுமி மீண்டும் சொன்னாள். அவள் பெண் சடலத்தின் அருகே வந்து நின்றாள். “இங்கிருந்து போ!” அவள் ரைய்யிடம் சொன்னாள்.
“பேசாதே,” அந்தச் சிறுவன் சிறுமியிடம் சொன்னான். பேச்சொலிகள் தெளிவற்றோ குழப்பமூட்டக் கூடியதாகவோ இல்லை. இருவரும் பேசினார்கள். அதை ரைய்யும் புரிந்து கொண்டாள். அந்தச் சிறுவன் இறந்துபோன கொலைகாரனைப் பார்த்து அவனிடமிருந்து விலகி நின்றுகொண்டான். அவன் சிறுமியின் கைகளைப் பற்றிக்கொண்டான். “அமைதியா இரு,” அவன் கிசுகிசுத்தான்.
சரளமான பேச்சு! கீழே கிடந்த பெண்ணாலும் பேசமுடியும் என்பதால் தான் அவள் இப்போது இறந்து கிடக்கிறாளா? குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்ததும் காரணமாக இருக்குமா? கணவனின் நுரைத்துக் கிளம்பிய கோபத்தினால் அவள் கொல்லப்பட்டாளா? அல்லது பொறாமையால் மூண்ட யாரோ ஒரு அந்நியனின் ஆத்திரமா? இந்தக் குழந்தைகள்… ‘மெளனத்திற்கு’ பிறகு பிறந்த குழந்தைகளாக இருக்கக் கூடும். அப்படியென்றால் இந்த நோயின் ஓட்டம் முடிவிற்கு வந்துவிட்டதா? அல்லது இக்குழந்தைகள் அந்நோய் எதிர்ப்பு மிக்கவர்களா? நிச்சயமாக அவர்களும் நோயினால் பாதிப்படையவும் ‘மெளனமாகிப்’ போவதற்கும் போதிய காலம் இருந்திருக்கும். ரைய்யின் மனம் சற்று வேகமாக முன்னேறித் தாவியது. மூன்று வயதோ அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் பாதுகாப்பானவர்களாகவும் பேசக் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ? அவர்களுக்கு தற்போது தேவையானதெல்லாம் ஆசிரியர்கள் தானோ? ஆசிரியர்களும் பாதுகாவலர்களும்.
இறந்து கிடந்த கொலைகாரனைக் கணநேரம் நோக்கினாள். அவன் யாராக இருந்தாலும், இச்செயலைச் செய்ய அவனை உந்தித் தள்ளிய உணர்ச்சிகளை அவளாலும் புரிந்துகொள்ள முடியும் என்பது கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. கோபம், விரக்தி, நம்பிக்கையின்மை, அறிவை மறைக்கும் பொறாமை… இவனைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் – தங்களால் ஒருபோதும் அடைய முடியாத ஒன்றை முற்றிலுமாக அழிக்கத் துணிபவர்கள்?
ஓப்ஸிடியன் ஒரு பாதுகாவலனாக இருந்தான், என்ன காரணத்திற்காக அவன் அந்தப் பாத்திரத்தைத் தேர்வு செய்துகொண்டான் என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை வழக்கற்றுப் போன சீருடையை அணிந்துகொண்டு யாருமில்லாத தெருக்களில் ரோந்து போவதுதான் தன் வாயில் தானே துப்பாக்கி வைத்துச் சுடுவதிலிருந்து தப்பிக்க தேர்ந்துகொண்டதோ என்னவோ? இப்போது பாதுகாக்கப்பட வேண்டிய பெருமதிப்பு மிக்க ஒன்று இருக்கிறது, ஆனால் அவன் போய்விட்டான்.
அவள் ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்தவள். நல்ல ஆசிரியரும் கூட. தன்னை மட்டும் தான் அவள் பாதுகாத்துக் கொண்டாள் எனினும் அவள் ஒரு சிறந்த காவலாளிதான். வாழ்வதற்கு அவளிடம் எந்த காரணமும் இல்லாத போதும் அவள் தன் உயிரைக் காத்துக்கொண்டாள். இந்நோய் விட்டுவைக்குமானால் இச்சிறுவர்களின் உயிரையும் அவளால் காக்க முடியும்.
இறந்த பெண்ணின் சடலத்தை எப்படியோ மேலே தூக்கி காரின் பின்னிருக்கையில் போட்டாள். சிறுவர்கள் அழத்தொடங்கினர், ஆனால் அவள் சேதமடைந்திருந்த நடைபாதையில் மண்டியிட்டு அமர்ந்து மெல்ல குசுகுசுக்கும் குரலில் பேசத் தொடங்கினாள், நீண்ட காலமாகப் பயன்படுத்தாத தன் குரலின் கடுமை இவர்களை அச்சுறுத்தும் என்ற கவலையில்.
“பயப்படாதீங்க,” அவர்களிடம் சொன்னாள். “உங்களையும் என்னோட கூட்டிப்போகப் போறேன். வாங்க.” அவர்களிருவரையும் தன் இரு கரங்களில் தூக்கிக் கொண்டாள். மிகவும் எடையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் உண்ண போதுமான அளவு உணவு இருந்ததா?
சிறுவன் தன் கையால் அவளின் வாயை மூடினான், ஆனால் அவள் தன் முகத்தை விலக்கிக் கொண்டாள். “நான் பேசலாம், பரவாயில்லை” அவர்களிடத்தில் சொன்னாள்.
“நம்மைச் சுற்றி வேறு யாரும் இல்லைன்னா பேசலாம், பிரச்சினையில்லை, பயப்படாதீங்க.” அவள் காரின் முன் இருக்கையில் அச்சிறுவனை அமர வைத்தாள், அவன் அவள் கேட்டுக்கொள்ளாமலேயே இருக்கையில் நகர்ந்து சிறுமிக்கான இடத்தை ஒதுக்கித் தந்தான். அவர்கள் காருக்குள் ஏறியதும் ரைய் அவர்களிருவரையும் பார்க்கும் பொருட்டு ஜன்னல் பக்கமாகச் சாய்ந்தாள், அவர்களிடம் பயம் சற்று குறைந்திருப்பதைப் பார்த்தாள், குறைந்தபட்ச பயம் அளவிற்கே அவர்களுக்கு இப்போது ஆர்வம் மேலிட இவளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“என் பெயர் வலேரி ரைய்,” வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சுவைத்து அனுபவித்துச் சொன்னாள். “நீங்க என்னிடம் பேசுவதற்கு பயப்பட வேண்டியதில்லை, நான் ஒன்றும் செய்யமாட்டேன்.!
நரேன்
ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவர் மொழிபெயர்த்த சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” நல்ல கவனம் பெற்றது. மின்னஞ்சல் : Narendiran.m@gmail.com
நரேன் அவர்கள் பாராட்டுக்குரியவர். மூலக் கதைக்கு இணையாக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். கோவிட் தொற்று நோயை எதிர்கொள்ளும் இந்த காலகட்டத்தில் இந்தக் கதை குறிப்பிடும் நோய்களும் வர சாத்தியம் இருக்கிறது. ஆனால் மனிதநேயம் எங்காவது இருந்து கொண்டேதான் இருக்கும்