Saturday, November 16, 2024
Homesliderமனு தர்மம்

மனு தர்மம்

பாரதீ

திருமாவளவன் மனு தர்மத்துக்கு எதிராக ஒரு பெரும் போரைத் தொடங்கியிருக்கிறார். இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அது எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்கிற கேள்வியும் எழுகிறதே! வெளியில் என்ன காரணம் சொல்லப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் அதுபற்றி நமக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

முஸ்லீம்கள் ஷரியாச் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்துக்களில் எவரும் மனு தர்மத்தின் அடிப்படையிலான சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதில்லை. இந்துக்கள் என்பது பார்ப்பன வைதீக மதம் மட்டும் அல்ல என்ற கணக்குப்படியோ பார்ப்பனர்கள் மட்டுமே இந்து மதம் என்ற கணக்குப்படியோ பார்த்தால் கூட, மத வெறி – சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் கூட நடைமுறைக்கு அதை ஏற்க மாட்டார்கள். நாளை முதல் இந்து என்று சொல்கிறவர்களுக்கெல்லாம் மனு தர்மத்தின் அடிப்படையிலான சட்டந்தான் என்று மட்டும் அறிவித்தால் இரவோடு இரவாக இந்து மதம் கூண்டோடு காணாமல் போய்விடும். மனு தர்மத்தின் பெருமையைப் பற்றி பெருமை பொங்கப் பேசுகிறவர்கள் அதன்மீது வைத்திருக்கும் மரியாதையோ நம்பிக்கையோ அவ்வளவுதான். எல்லாம் வெறும் பம்மாத்துக்கும் அதன்மூலம் தம்மை மேலே வைத்துக் கொள்வதற்கும் பேசப்படும் கடைந்தெடுத்த தன்னலப் பேச்சுக்கள் அவை. மதப்பற்றில் கூட மூடத்தனமான மதப்பற்றும் இருக்கிறது, காரியக்கார மதப்பற்றும் இருக்கிறது. காரியக்கார மதப்பற்று மற்றவர்களை மட்டும் மூடர்களாக வைத்துக்கொண்டு தான் விவரமாக இருந்து கொள்ளும்.

இப்படி வழக்கொழிந்து போய்விட்ட – எவரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காத மனு தர்மத்தை ஏன் இந்தச் சூழ்நிலையில் திருமாவளவன் போன்ற ஒருவர் எதிர்க்க வேண்டும்? அதற்கான தேவை இப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது? அல்லது, உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருந்தது இப்போது முட்டிக்கொண்டு வெளியே வந்திருக்கிறதா?

திருமாவளவன் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதி என்பதையும் மறந்து மிக நேர்மறையாகச் சிந்தித்தால், அவர் இந்த நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்கான நியாயம் முற்றிலும் இயல்பானதே என்று தோன்றுகிறது. மொத்த இந்தியாவும் காவித் தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கேள்வி கேட்பது ஒன்று உயிரைக் காவு வாங்குகிறது அல்லது பிழைப்பைக் காலி செய்கிறது. ஆள் அனுப்பிக் கொன்று போடுவார்கள் அல்லது ஆள் அனுப்பி மிரட்டி உள்ளதைப் பிடுங்கிக்கொண்டு விடுவார்கள். அதற்கெல்லாம் அஞ்சாமல் ஓரளவு இதை எதிர்த்து நிற்கும் மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் ஆகக்கேடுகெட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறது என்ற போதும் பொதுமக்கள் மத்தியிலும் அறிஞர் சமூகத்தின் மத்தியிலும் அப்படியான வெளிப்படையான நிலை ஓரளவுக்கு இருக்கிறது. அதுதான் இந்த மண்ணின் இன்னும் மிச்சமிருக்கும் உயிர்.

தமிழகத்தின் அரசியல் ஏன் கேடுகெட்டதாக இருக்கிறது என்கிறோம்? பாஜக ஆளும் மாநிலங்களே செய்யத் தயங்கும் இழிவான வேலைகளைக் கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் இங்கிருக்கிற அடிமை அரசு செய்துமுடித்துக் காட்டிக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் செய்யாத அளவுக்கு இந்து மதத்தைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டது தமிழ்நாடு தான். அதுவும் குறிப்பாகத் திராவிட அரசியல்தான். பெரியாரின் திராவிடர் கழகம் அதை ஒரு சமூக இயக்கமாகச் செய்து கொண்டிருந்தது. அவரின் தம்பி அண்ணா அதிகாரத்துக்கு ஆசைப்பட்டோ அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான் தம் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழி என்று நம்பியோ திமுகவைத் தொடங்கினார். அவர் பெரியார் அளவுக்கு இந்து மறுப்பு – வெறுப்பெல்லாம் செய்யாமல், சுருதியைச் சிறிது குறைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரின் தம்பி கருணாநிதியும் அதே பாணியில் அரசியல் செய்து தம் கொள்கைகளையெல்லாம் பெரிதளவில் நிறைவேற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கருணாநிதியின் அரசியலில், வெளிப்பேச்சுக்கு எதிர்ப்பை நெருப்பாகக் கக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஓரளவு தடவிக்கொண்டு ஓட்டினார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு; வாக்கரசியல் கட்டாயங்களால் வெளியில் வெறுப்பைக் காட்டிக்கொள்ளா விட்டாலும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கமுக்கமாகச் செய்து கொண்டார் என்றும் ஒரு கருத்துண்டு. குறைந்தபட்சம் அவர் இருக்கும் வரை அவ்வப்போதாவது தன் கொள்கை அதுதான் என்பதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பிந்தைய திமுக முற்றிலும் மாறுபட்டதாக உருவெடுத்திருக்கிறது.

“கொள்கைகளோடு அரசியலுக்கு வருகிறோம். அதிகாரம் சிறிது கெடுத்து விடுகிறது. அன்றாடக் கட்டாயங்கள் சிறிது கெடுத்து விடுகின்றன. தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துகொள்ளத்தான் வேண்டும்” என்கிற இடத்தில் இருந்து, அரசியலில் இருப்பதே அதிகாரத்துக்காகவும் அது கொடுக்கும் பணத்துக்காகவுமே என்கிற நிலைக்கு எல்லாக் கட்சிகளுமே போய்க்கொண்டிருக்கின்றன என்றாலும், அந்த வகையில் திமுகவின் வீழ்ச்சி அந்தக் கட்சியை நம்பியிருந்த பல குழுக்களுக்குப் பெரும் இழப்பு. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் அப்படிப் பெரும் இழப்புக்கு உள்ளாகியிருக்கும் குழுக்கள். எல்லாக் காலத்திலும் இவர்களுக்கெல்லாம் முழு உண்மையோடு திமுக இருந்ததா என்றால், அதற்கான விடை இன்றும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினருக்கென்று இருக்கும் கட்சிகளும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுமே. அதே வேளையில், மற்ற மாநிலங்களைப் போலன்றி, பார்ப்பனியத்தையும் பெரும்பான்மை வாதத்தையும் (இந்து இந்தியா) ஒற்றை மொழி மேலாதிக்கத்தையும் (இந்தி இந்தியா) எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் கொடுத்தது இந்தத் திமுகவின் எழுச்சி தான். அவர்கள் எல்லோருமே இப்போது தெருவுக்கு வந்துவிட்டது போன்ற ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

அம்பேத்கரின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு பிழைப்பைப் பார்க்கும் அரசியல்வாதிகள் என்று தலித் கட்சிகளைச் சொல்வது போல், மார்க்ஸை மறந்துவிட்டவர்கள் என்று பொதுவுடைமைக்காரர்களைச் சொல்வது போல், பெயருக்கு மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று திராவிடக் கட்சிகளைச் சொல்லும் ஒரு கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டுதானிருக்கிறது. அதை உண்மையென்னும் விதத்தில்தான் அதிமுக என்கிற கட்சி தொடங்கிய நாள் முதல் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் எவருக்கும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் திமுக என்ற கட்சி மீது ஓரளவு எதிர்பார்ப்புகள் இருந்தன. அவை முற்றிலும் வீணாகிப் போகிற அச்சம் வருகிற போது, இனியும் இவர்களை நம்பிப் பயனில்லை; நாமே களமிறங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவுகட்டித் திருமாவளவன் இறங்கியிருக்கலாம்.

இது ஓரளவு அரசியலையும் திருமாவளவனையும் கவனித்திருப்பவர்களுக்கு முழுமையாகச் சரியென்று படாது. அவரும் பெரியாரின் தம்பி அண்ணா போலவே தேர்தல் அரசியலுக்கு வந்தபின் பல சமரசங்களைச் செய்து பழகிக் கொண்டவர். வீறுகொண்டு சீறிவிட்டுப் பின்னர் காலத்தின் தேவை கருதித் தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டவர். அதுதான் இன்று அவரை இந்த அளவுக்கு மதிக்கத்தக்க தலைவராக உருவாக்கியிருக்கிறது என்பதையும் அறியாதவராக இருக்க மாட்டார் அவர். எனவே அவர் எல்லாவிதமான கூட்டல்-கழித்தல் கணக்குகளையும் போட்டுப் பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

அப்படிப் பார்க்கையில், இன்னும் கொஞ்சம் இறங்கி யோசித்தால், இதுதான் தன் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். எதிர்காலம் என்றால் நீண்டகாலக் கணக்காகவும் இருக்கலாம். குறுகியகாலக் கணக்காகவும் இருக்கலாம். இன்று அதிமுக எனும் பூமாலையைப் பிய்த்து உதறிக் கொண்டிருக்கும் பிறவிகளைப் போல நாளையைப் பற்றிய கவலையே இல்லாத – சுருட்டுவதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட குறுகலை நோக்கி அல்ல திருமாவளவன். தன் கொள்கைகள் ஒரு தலைமுறையைக் கடந்தேனும் நிற்க வேண்டும் என்கிற அளவுக்குச் சிந்திப்பவர் தான். அப்படியானால், இதுதான் தனக்கான பாதை என்று தேர்ந்தெடுத்துவிட்டார் என்றே நம்பலாம்.

திமுக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாலும், அந்தக் கொள்கைகளையும் கனவுகளையும் கொண்ட ஓர் அறிவுக் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதானிருக்கிறது. அவர்களாலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும். அப்படியானால், அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பேச வேண்டும் – நடந்துகொள்ள வேண்டும். அல்லது, அப்படியான ஒரு கூட்டம் அவரைக் கையில் எடுத்திருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. இதுபோன்ற எழுச்சிகளைக் கண்டு எவ்வளவு புல்லரித்தாலும் தேர்தல் அரசியலில் இருப்பவர்களை எவ்வளவு காலத்துக்குத்தான் நம்ப முடியும் என்கிற அச்சமும் நியாயமானதே. ஆனால், ஸ்டாலினையோ முகமேயில்லாத அதிமுகவையோ ராமதாஸையோ நம்புவதைவிடத் திருமாவளவனை நம்புவது மேல் என்பதும் நியாயமாகவேப் படுகிறது.

கடைசியாக, அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தலைவரும் ஒவ்வொரு கணக்குப் போட்டுத் தம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் கொள்கை அடிப்படையில் இணைந்து இயங்குவது போல நடந்து கொண்டதெல்லாம் வெறும் விளையாட்டுக்கு என்பது போல், அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டுத் தம் கீழ்மைகளை இறக்கிவிடத் தயாராகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியிருக்கின்றன. இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறவர் திருமாவளவன் தான் என்கிற கருத்து அவர் காதுகளுக்கும் போகாமலா இருந்திருக்கும்?

“எனக்கா விபூதி அடிக்கப் பார்க்கிறீர்கள்?” என்றும் இறங்கியிருக்கலாம். இப்படியொரு பெரிய போராட்டத்தைக் கையில் எடுக்கும்போது, அதுவும் இப்போதிருக்கும் அரசியல் சூழலில், அவருக்கு நினைத்துப் பார்த்திராத மாதிரியான பல பிரச்சனைகள் வரலாம். அதையும் மீறி இதில் ஓரளவுக்குக் கூட்டம் சேர்த்துவிட்டால் தமிழகத்தில் இன்னும் ‘இந்த’ அரசியலுக்கு இருக்கும் இடத்தை நினைவுபடுத்திக் காட்டுவது மட்டுமில்லாமல், இவரைக் கழற்றி விட்டுவிட்டு ஒரேயிரவில் கூட்டணி மாற்றிக்கொள்ளப் போகிறவர்களையும் அம்பலப்படுத்திவிடுவார். அது அத்தோடு முடியப் போவதில்லை. மூன்றாவது அணி ஒன்றைக் கட்டி, அடுத்த ஆட்சி யாருடையது (அல்லது யாருடையதாக இராது) என்கிற முடிவைத் தீர்மானிக்கும் பலமான இடத்தில் நின்று, சொடக்குப் போட்டுக் கூப்பிடலாம். இதெல்லாம் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய சிக்கலான இடத்தில் நிற்கிறது திமுக இப்போது.

இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதில் திமுகவுக்கு இருக்கும் பிரச்சனைகள் பல :

  1. “நான் பேச வேண்டியது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்ததை நானே பேசாமல் – பேச முடியாமல் – பேசப் பயந்துகொண்டு இருக்கும் போது, நீ வந்து பேசுகிறாயே!” என்கிற ஆத்திரம்.
  2. “நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? நான் கூப்பிட்டா வர்றவன் நீ. நீ கூப்பிடுற இடத்துக்கு நான் வரணும்னு எதிர்பார்க்கிறாயா?” என்கிற ஆணவம்.
  3. “நானே முக்கு முக்குன்னு முக்கி ‘நாங்களும் இந்துக்களின் நண்பர்களே’-ன்னு ஒரு படத்தைப் போட்டுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நீ வேற வந்து ஆட்டையைக் கலைக்கப் பாக்குறியே! ஏன்யா உனக்கு நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?” என்னும் அச்சம்.
  4. ‘இப்போது போய் திருமாவளவனோடு கைகோர்த்து நின்றுவிட்டால், நாளை அவரைக் கழற்றி விட்டுவிட்டுக் கூட்டணியை மாற்றும் போது மக்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்!’ என்கிற கூச்சம்.
  5. “நீ இப்படிப் பேசுவது கூட எங்களுக்கு நல்லதுதான். 80% இந்துக்களின் கோபமும் உன் பக்கம் திரும்பிவிட்டால் அப்படியே அவர்களின் வாக்குகளை எல்லாம் நாங்கள் அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்” என்கிற நப்பாசை.

கடைசியாக, ‘அரசியலுக்குள் வந்துவிட்டால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். சேற்றை வாரி அடிப்போம். சாணியை வாரி அடிப்போம். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும். தெம்பிருந்தால் பதிலுக்கு நீயும் யார் மீது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அடித்துக்கொள்’ என்கிற ரீதியில் பல கதைகள் வலம் வரப்போகின்றன. அதற்கென்றே கொள்ளையடித்த காசில் தொடங்கப்பட்ட இருபெரும் இணையப் பிரிவுகள் இருக்கின்றன.

அப்படி இவ்விஷயத்தில் திருமாவளவன் மீது அடிக்கப்படப் போகும் சேறுகள் இவைதான்:

  1. “தம் மீதான 80% இந்துக்களின் கோபத்தைக் குறைத்துக் கொள்வதற்காக திமுகவே அவரை இப்படி ஆட்டுவிக்கிறது. இவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் அவரே ஒதுங்கிக் கொள்வார். இந்துக்களே! இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே நம் எதிரிகள்!”
  2. “மக்களாட்சியில் கொடுங்கோலர்கள் தம் எதிரி யார் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அப்படித்தான் பாஜக கொஞ்சநஞ்ச இந்து வெறுப்பையும் திமுகவுக்குச் சாதகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதற்காக இவரை இறக்கி விட்டிருக்கிறது. இவர் டெல்லியில் போய் யாருக்கு நண்பனாகி இருக்கிறார் பாருங்கள். எனவே இவரைக் கழற்றி விட்டுவிட்டு மருத்துவர் ஐயாவோடு சேர்ந்து சமூக நீதியை நிலைநிறுத்துவோம் வாருங்கள்!”

இதில் எந்தப் பிரிவு அடுத்த சில மாதங்களுக்கு ஒழுங்காக ஊதியம் பெறுகிறதோ – எந்தப் பிரிவு நம்பத்தக்க வகையில் பொய்களைப் பரப்புகிறதோ அந்தப் பிரிவின் உண்மையே இறுதியில் வெல்லும். ஒருவேளை இரு பிரிவினருமே சொதப்பிவிட்டால் அல்லது இரு பிரிவினருமே சமமாகக் குழப்பினால், மக்கள் வெறுத்துப் போய் திருமாவளவனையே தம் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடும் ‘அபாயமும்’ இருக்கிறது.

***

பாரதீ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular