Saturday, November 16, 2024
Homesliderமூங்கில்

மூங்கில்

சுஷில் குமார்

“மக்ளே, நீத்தண்ணி எடு மக்ளே,” என்று சொல்லியவாறு புறவாசலுக்குச் சென்றார் அப்பா. பழையசோற்றுப் பானையிலிருந்து ஒரு சொம்பு நிறைய நீர்த்தண்ணீர் எடுத்து கொஞ்சம் மோர் விட்டு உப்புப் போட்டு கலக்கி, அன்றைக்கு என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்புடன் அவரது அறைக்குச் செல்லும் வாசலருகே நின்றேன்.

கை, கால் கழுவிக் கொண்டு திரும்பி வந்தவர் நீர்த்தண்ணீரை அண்ணாந்து ஒரே மூச்சில் குடித்தார். “மக்களு சாப்டாச்சா? என்ன கறி வச்சா ஒங்கம்ம?” என்று கேட்டார்.

“சாப்டாச்சுப்பா. கத்ரிக்காத் தீயலும் சேனப்பொரியலும்… ஒங்களுக்கு முட்ட அட தட்டட்டா?” என்று அவர் முகத்தைப் பார்த்தேன்.

“இரி மக்ளே.. இன்னா வாறேன்…” என்றவர் அவரது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டார். நீண்ட நேரத்திற்கு வெளியே வரவேயில்லை.சில நாட்களாகத்தான் அவர் இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தார். கதவைத் தட்டி சாப்பிட அழைத்தாலும், “இரி மக்ளே…இன்னா வாறேன்…” என்று பதில் மட்டுமே வரும்.

அம்மாவும் அக்காவும் மதிய உணவிற்குப் பிறகு தம்புரான் கம்பெனிக்குச் சென்று பின்னி முடித்த கூடைகளையும், மற்ற கைவினைப் பொருட்களையும் கொடுத்துவிட்டு, தேவையான பனை நார், நைலான் ஒயர் மற்றும் இதர பொருட்களை வாங்கி வருவார்கள். வருவதற்கு நான்கு மணி ஆகிவிடும். அந்த இடைவெளியில்தான் அப்பா வழக்கமாக சாப்பிட வருவார். சாப்பிட்டதும் இரண்டு மணி நேரமாவது உறங்குவார். ஆனால்,திடீரென அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டுஅவரது அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருக்க ஆரம்பித்தார். அப்படி என்னதான் செய்கிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.

சில முறை அவர் உள்ளே இருந்தபோது நான் அவரது அறைக்கதவின் அருகே அமைதியாக நின்று ஏதும் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தேன். அப்பா ஒன்றிரண்டு முறை தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டார். என்ன சொன்னார் என்பது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை.

அன்றும் அதைப்போலவே ஒட்டுக் கேட்பதற்காக நின்றேன். கொஞ்ச நேரம் அப்பா அங்குமிங்கும் நடப்பது போலத் தெரிந்தது. பின் தனது பிரஷ்ஷால் அவரது ஓவியப் பலகையில் தட்டிக்கொண்டிருந்தார். அது அவரது பழக்கம். எப்போது படம் வரைய உட்கார்ந்தாலும் கொஞ்ச நேரம் அந்தப் பலகையில் தட்டிக்கொண்டிருப்பார். அதுதான் அவரது ஓவியம் கருக்கொள்ளும் நேரம். சில நாட்கள் மணிக்கணக்கில் கூட அப்படியே உட்கார்ந்திருப்பார். ஒரு கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். சட்டென எழுந்து மூங்கிலாலான மேட்டை எடுத்து பலகையில் பொருத்தி வரைய ஆரம்பிப்பார். அதன் பிறகு அவராக அந்த அறையிலிருந்து வெளிவரும் வரை என்னைத் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் போக முடியாது.

“மக்ளே..கடுங்காப்பி போடு மக்ளே.” என்று சத்தம் வந்தால் அவரது ஓவியம் தயாராகி விட்டதென்று அர்த்தம்.

…….

எனக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வமிருந்தது. நான் கூடை பின்ன உட்கார்ந்திருந்தால் அப்பா “மக்ளே, அம்மைட்ட குடு…போயி அப்பாக்கு பெயிண்டெல்லாம் எடுத்து வை மக்ளே” என்பார். நான் அவரது அறைக்குள் சென்று தேவையானவற்றை எடுத்து வைப்பேன்.

“மக்ளே,ஒனக்குன்னு உள்ள சோலி வேற கேட்டியா?..அது கடவுளுக்க தொட்டடுத்து நின்னு செய்யிற வேலைல்லா…ஞானமாக்கும்…எல்லாரும் செய்ய முடியாது மக்ளே..எனக்குப் பொறவு ஒனக்குத்தான்னு எழுதிருக்கான்லா..நீ அதத்தா செய்யணும் என்ன?”

அப்பா வரைவதைப் பார்த்து நானும் வீட்டுச் சுவரெல்லாம் கிறுக்கி வைப்பேனாம். அம்மா எரிச்சலோடு கத்தினால், “ஏட்டி பிச்சக்காரி…அவ ஆர்டிஸ்ட்டாக்கும்..ஒன்ன மாதி பொழக்கடைல கெடக்கவா? அத நீயும் மூத்தவளும் செய்ங்கோ…எம்புள்ள எப்பிடி வாரான்னு பாரு..” என்று சொல்லி என்னைத் தூக்கி முத்தமிடுவாராம் அப்பா.

ஒருநாள் நான் அப்பாவுடன் வரைந்து கொண்டிருந்தபோது “பொம்பளப் புள்ள, நாலு கறி வைக்கப் படிக்காண்டாமா?எப்பப் பாரு, பெயிண்ட அடிச்சிட்டே இருந்தா எங்க போயி மாப்பிள்ள பாக்கது? ஏட்டி, இங்க வாட்டி, வந்து பாத்திரத்தக் கழுவு..” என்றார் அம்மா.

“ஒங்கம்மயக் கூப்புடு பாத்திரங் கழுவ..பிச்சக்காரி…மூஞ்ச அடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்கோ…பாத்திரங் கழுவல்லா கூப்புடுகா…..வாயி மயிரு………” என்று அம்மாவைக் கத்திவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார் அப்பா.

“மக்ளே, போயி தொட்டில கெடக்க மூங்கில எடுத்து வெளிய வையி..காப்பர் சல்பேட் போட்டேல்லா அன்னிக்கி?…இன்னா வாறேன்..” என்றார். வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர்த்தொட்டியில் ஊற வைத்திருந்த மூங்கில் கட்டைகளை எடுத்து கோரைப் பாயில் போட்டுவிட்டு, மூங்கில் சீவும் சீவுளியை எடுத்து வைத்தேன்.

அப்பா வந்து ஒரு மூங்கிலை எடுத்துப் பார்த்தார். “செரியா இருக்கும் மக்ளே…இதுக்கப் பதமாக்கும் மேட்டு ஒடையாம நிக்கது…மத்தவனுக்க கடைல ஒடஞ்சி ஒடஞ்சி போகுன்னா……அவன் கஞ்சப் பயலாக்கும்….ஒரு கூரயப்போட்டு நெழல்ல காய வையின்னா கேக்கானா…கிறுக்கன்..கட்டயச் சீவி வெயில்ல போட்டா?” என்று சொல்லியவாறே மூங்கில் கட்டையை எடுத்து நுண்ணிய பட்டைகளாகச் சீவ ஆரம்பித்தார்.

அப்பா அளவெடுத்தது போல சீவி வைக்கும் மூங்கில் பட்டைகள் நன்றாக உலர்ந்ததும் அவற்றைக் கொண்டு போய் மேட் நெய்யும் இடத்தில் குடுப்பது என் வேலை. நெய்து முடிக்கும் வரை பக்கத்திலேயே இருந்து கவனமாகப் பார்த்து வாங்கி வருவேன்.மேட்டின் ஒரு ஓரம் சரியில்லாவிட்டால்கூட அப்பா அதில் வரைய மாட்டார்.

…….

அப்பா தனது ஓவியப் பரம்பரையைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அவ்வளவு கம்பீரமாக, பெருமையாக. பத்மநாபபுரம் அரண்மனையில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியம் எங்கள் கொள்ளுத் தாத்தா வரைந்தது தான். பெரிய மகாராஜா இளையவருக்கு யானையேறப் பயிற்சி கொடுக்கும் ஒரு ஓவியம். அந்த யானை யார் சொல்லியும் பணியவில்லை. தாத்தா சென்று ஏதோ மந்திரங்களைச் சொல்லி தனது ஓவியத் தூரிகையால் அதன் துதிக்கையில் தட்டிக்கொடுக்க, அது அவர் சொன்னபடியெல்லாம் நின்றிருக்கிறது. அந்த ஓவியத்திற்காக தாத்தாவிற்குப் பத்து மரக்கா விதைப்பாடு நிலம் பரிசாகக் கிடைத்தது.

அவரது மகன், எங்கள் தாத்தாவும் ஒரு மிகப்பெரிய ஓவியர் தான். வெள்ளைக்கார துரைகளுக்கும் மற்ற சமஸ்தான ராஜ வம்சத்தினருக்கும் பரிசு கொடுப்பதற்காகவே பிரத்தியேகமாக அவரை அழைத்து வரையச் சொல்வார்கள். ஓவியம் வரைந்து முடிக்கும் வரை அரண்மனை வீட்டிலேயே ராஜ கவனிப்பு கிடைக்கும். என் அப்பா கூட தாத்தாவுடன் சில முறை சென்றிருக்கிறார். தாத்தா இறந்தபோது ராஜ குடும்பத்திலிருந்து ஆளுயர ரோஜாப்பூ மாலையும் வெண்கலத்தினாலான ஒரு நடராஜர் சிலையும் குடுத்து விட்டார்கள். அப்பா தினமும் நடராஜரைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வெளியே கிளம்புவார்.

அப்பாவின் தனிச்சிறப்பு மூங்கில் மேட் ஓவியங்கள். கேரளத்தில் மிகப் பிரசித்தி பெற்ற இந்த வகையான ஓவியங்களுக்கு கன்னியாகுமரியிலும் நல்ல மவுசு உண்டு. வருடத்தில் நான்கு மாதங்களுக்கு நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் விற்பனை செய்து சம்பாதிப்பதை வைத்துத்தான் வருடம் முழுவதும் சமாளிக்க வேண்டும். மற்றபடி அம்மாவும் அக்காவும் கூடை பின்னிக் குடுப்பதில் ஓரளவிற்குப் பணம் கிடைப்பதால் சாப்பாட்டிற்குப் பிரச்சினை இல்லாமல் குடும்பம் ஓடும்.

பெரியப்பா, சித்தப்பா இருவரும் சவுதிக்குச் சென்று ஓரளவிற்கு வசதியாகவே இருந்தார்கள். ஆனால்,என்ன நிலைமை வந்தாலும் அப்பா தேவையென்று யாரிடமும் போய் நிற்க மாட்டார்.

எனது சடங்கு முடிந்து கிளம்பும்போது பெரியப்பா அப்பாவைப் பார்த்து “லேய்…பிள்ள தெறண்டுட்டா…கொஞ்சம் பைசா சேக்கப் பாருடே” என்றார். அப்பா அமைதியாக நின்றார்.

“படம் வரையானாம் பைத்தியாரன்…பொழைக்க வழியப் பாருல…குடும்பத்த இழுத்து நடுத்தெருல வுட்டுராத பாத்துக்கோ…” என்றார் பெரியப்பா. எனக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. அப்பாவின் வேலையைப் பற்றிப் புலம்பி என் அம்மா வாங்கிய அடிகளும் உடைந்த பொருட்களும் கொஞ்சமல்ல.

பெரியப்பா தொடர்ந்தார். “நம்ம அப்பாவ கடைசில எவம்ல வந்து பாத்தான்? ஒலகத்துல இல்லாத ஆர்டிஸ்ட்டு..பெரிய மால மயிரத்தான குடுத்து வுட்டானுவோ? பேருக்கு ஒருத்தனாவது வந்தானா டே? பெரிய ராஜ பரம்பர மயிரு…பத்து வருசமா அவர தூக்கிக்கிட்டே அலஞ்சேன்லா? படம் மயிரா வந்து சோறு போட்டு?”

 “நீ நிறுத்து…சும்மா படம் வரஞ்சிற முடியுமா? அது எங்கப்பனுக்க சொத்தாக்கும்…நமக்கு சோறு பெருசில்ல பாத்துக்கோ…இப்ப என்னா? 

ஒன்ட்ட வந்து நிக்கல, போதுமா? பெரிய அக்கற மயிரு…” என்று கத்திவிட்டார் அப்பா.

சென்ற வருடம் பைக்கிலிருந்து கீழே விழுந்து அப்பாவிற்கு முதுகில் பலத்த அடி. அம்மாவுடைய தங்கச் செயினை வைத்துத்தான் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக்கொண்டோம். சித்தப்பா வீட்டிலிருந்தாவது அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். பெரியப்பா குடும்பம் இன்று வரை எட்டிக் கூட பார்க்கவில்லை.

….

இரண்டு மணி நேரம் கழிந்து விட்டது. மறுபடியும் அப்பாவின் அறைக்கதவைத் தட்டி, “எப்பா, சாப்பிட வாங்கப்பா..” என்றேன். இந்த முறை சற்று சத்தமாகவே பதில் வந்தது. “இன்னா வாறேன் மக்களே..” என்றவர் பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்து வெளியே வந்தார். அவர் கை கழுவச் சென்ற போது நான் அவரது அறைக்குள் ஓடி ஓவியப் பலகையைப் பார்த்தேன். ஒரு பெரியமூங்கில் மேட்டில் நீண்ட குறுக்குநெடுக்கான கோடுகளை நேராகவும் வளைத்தும் வரைந்திருந்தார்.ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. என்னவென்று யோசித்தபோது மின்னலென அப்பாவின் இடது கை என் கண்முன் வந்து சென்றது. அறையிலிருந்து அவர் வெளிவந்தபோது அவரது இடது கையில் நிறைய பெயிண்ட் ஒட்டியிருந்தது. குழப்பத்தோடு துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு புறவாசலுக்குச் சென்றேன்.

“ரெவி வர்மன்..மயிரு..எனக்க…….ராசா ரெவி வர்மன்…பாப்போம் ல” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார் அப்பா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் நிற்பது அப்பாவின் கவனத்திலேயே இல்லை.

“சோக்கேடு..மயிரு…பாப்போம்ல……நா ஆர்ட்டிஸ்ட்டுல..பெரிய ராசா ரெவி வர்மன்..மத்தவன்..”

“எப்பா..எப்பா…”

சில நொடிகள் அமைதியாக நின்றவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “என்ன மக்ளே..” என்றார்.

“என்னப்பா? தனியா பேசுகியோ? ரெவி வர்மன்…ரெவி வர்மன்னு சொன்னியோ..யாருக்குப்பா சோக்கேடு?”

“ஒண்ணுல்ல மக்ளே..நா எதயாம் நெனச்சிட்ருப்பேன்…விடு..”

வந்து உட்கார்ந்து சாப்பிட்டவர் எதுவுமே பேசவில்லை. வேறு ஒரு தனி உலகத்தில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். கலைஞர்கள் உலகத்தை விட்டு அவ்வப்போது எங்கோ போய் வந்துகொண்டுதானே இருப்பார்கள்.

…….

அப்பா வியாபாரத்திற்காக வரையும் ஓவியங்களில் பெரும்பாலானவை ராஜா ரவி வர்மனது ஓவியங்கள்தான். அது போக, இயற்கைக் காட்சிகள், விவேகானந்தர் பாறையின் பின்னால் சூரியன் உதிக்கும் காட்சி, சுசீந்திரம் தெப்பக்குளம், திருவட்டார் ஆதிகேசவன் கோவில் போன்றவை நன்றாக விற்பனை ஆகும். ஆனால், சில ஓவியங்களை அவர் விற்கமாட்டார். முகப்படத்துடன் கம்பீரமாக நிற்கும் குருவாயூர் கேசவன் யானையை அடிக்கடி வரைவார். ஒவ்வொரு முறையும் அவர் வரைந்து முடிக்கும்போது என் கண்முன்னால் கேசவன் இறங்கி வந்து நிற்பான். என்னால் அவனது துதிக்கையைத் தொட்டு உணர முடியும். முன்னும் பின்னுமாக அசைந்து மூச்சு விடுவான். அதைப் போலவே குமரி பகவதி அம்மனின் ஓவியமும். எல்லாம் முடித்து கடைசியில் அந்த மூக்குத்தியை ஜொலிக்க விடும்போது ஒவ்வொரு முறையும் அவர் அழுதுவிடுவார். வைர மூக்குத்தி அந்த அறையையே கருவறையாக மாற்றிப் பிரகாசிக்கும்.

“எடுத்து உள்ள மாட்டு மக்களே…” என்று சொல்லிவிட்டுச் செல்வார் அப்பா. அந்த சமயத்தில் மட்டும் அவரது முகம் வேறொன்றாக இருக்கும்.

….

அப்பா தொடர்ந்து தினமும் அப்படி அவரது அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டார். இரண்டு மாதங்கள் இருக்கும். ஒருநாள் இரவு கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்குள் ஏறியவர் அப்படியே சரிந்து விழுந்து விட்டார். அம்மாவும் அக்காவும் அலறியடித்துக்கொண்டு அவரைத் தூக்கினார்கள். எனக்கு ஏனோ சட்டென மேஜையில் வைக்கப்பட்டிருந்த தாத்தாவின் நடராஜர் சிலை மீது பார்வை போனது. பிரமை பிடித்தவள் போல நின்றேன்.

“ஏட்டி, போயி தண்ணி கொண்டா…”அம்மா அழ ஆரம்பித்து விட்டாள். அக்கா அப்பாவின் கால் பாதங்களைத் தேய்த்து விட்டாள்.

தண்ணீர் தெளித்து, கொஞ்சம் குடிக்கக் குடுத்ததும் அப்பா கண் திறந்து எழுந்து அமர்ந்தார். திக்கிக் கொண்டே, “ஒண்ணுல்ல மக்களே…தலயச் சுத்திட்டு பாத்துக்கோ…மக்களு போயி கட்டஞ்சாயா போட்டுக் கொண்டா…” என்றார் அப்பா. அப்பாவின் குரல் எனக்கு வேறு யாருடையதோ போலக் கேட்டது.

..

அடுத்த நாள் மதியம் சாப்பிட வந்தவர் அறைக்குள் சென்று தாழிட்டார். நானும் வழக்கம்போல அவரைச் சாப்பிட அழைத்தேன். பதிலேதும் இல்லை. ஆனால், முன்பை விட சத்தமாக தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். அம்மா வந்ததும் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் அக்காவும் அப்பாவை அழைத்துப் பார்த்தார்கள். எந்த பதிலும் இல்லை.

சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து வந்தவர் கையில் ஒரு பூட்டு வைத்திருந்தார். அறைக் கதவைப் பூட்டிவிட்டு சாவியைத் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்தார்.

“மக்களே, போயி சோறு போடு..” என்று எதுவும் நடக்காத மாதிரி சொல்லிக்கொண்டு புறவாசலிற்குச் சென்றார். நாங்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்.

ஒவ்வொரு முறை அவரது அறையை விட்டு வெளியே வரும்போதும் அப்பா கதவைப் பூட்டி சாவியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தார். அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவரிடம் கேட்பதற்குப் பயம்.

ஒருநாள் அப்பா வந்த போது ,“எப்பா, நாங் கொஞ்சம் வரையணும்..வாங்க..” என்று அழைத்தேன்.

சற்று அமைதியாக இருந்தவர், “மக்ளே..இப்ப வேண்டாம் மக்ளே…கொஞ்ச நாள் போட்டும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

அடுத்த சில நாட்களில் அப்பாவின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அடிக்கடி திக்கினார். வார்த்தைகள் திணறித் திணறி வந்தன. அவரது முகத் தசைகள் தொங்கிக்கொண்டு போவது போலத் தோன்றியது. பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்து மௌனமாகவே இருக்க ஆரம்பித்தார். எங்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதையும் தவிர்த்தார். எப்போதும் அந்த அறைக்குள்ளேயே இருந்தார். அவர் தனக்குத்தானே பேசும் சத்தமும், பிரஷ்ஷைத் தட்டும் சத்தமும் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்.

கடைக்கு பைக்கில் செல்லாமல் பேருந்தில் செல்ல ஆரம்பித்தார். அவரது, ‘மக்ளே’ சத்தம் கேட்டுப் பல மாதங்கள் ஓடி விட்ட மாதிரி இருந்தது.

ஒருநாள் காலை எழுந்து வந்த அப்பாவின் முகத்தைப் பார்த்த நான், “எப்பா..என்னப்பா? என்னாச்சிப்பா?” என்று கத்தினேன்.

அம்மாவும் அக்காவும் ஓடி வந்து திகைத்து நின்றனர். அப்பாவின் வாய் ஒரு புறமாக இழுத்துப் பிடித்தது போல இருந்தது. அப்பா ஏதோ சொல்ல முயன்றார். அவரால் பேச முடியவில்லை. அவரது வலது கை லேசாக வளைந்திருந்தது போலத் தெரிந்தது. நடக்க முயன்றவர் அப்படியே சுவரோடு சாய்ந்து நின்று விட்டார். என் மனதில் தாத்தாவின் முகமும் நடராஜரின் சிலையும் மாறி மாறி வந்தன. இது நடக்கும் என எனக்கு எப்போதோ தெரிந்துதான் இருந்தது.

….

எல்லா பரிசோதனைகளும் முடிந்தன. டாக்டர் அம்மாவிடம், “பக்க வாதம் வந்திருக்கும்மோ..ரெண்டு நாள் இங்க இருக்கட்டும்…பொறவு வீட்டுல வச்சிப் பாக்க வேண்டியதா…”

அம்மா அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள். அக்கா அம்மாவை சமாதானப்படுத்த முடியாமல் அவளும் அழுதாள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. டாக்டர் என்னிடம், “அப்பா என்ன சோலி பாக்கா?” என்று கேட்டார்.

“அப்பா ஆர்டிஸ்ட் டாக்டர்…பேம்பூ மேட் டிராயிங்ஸ் வரைவாங்க.” என்றேன்.

“சே…இப்டி ஆயிப் போச்சேம்மோ…இனி என்ன செய்வியோ? வேற யாரும் சப்போர்ட்டுக்கு உண்டுமா?”

நான் அமைதியாக நின்றேன். நான் இருக்கிறேன் என்று சொல்லத் தோன்றியது. டாக்டர் தலையை ஆட்டி விட்டு, அப்பாவிற்குக் குடுக்க வேண்டிய மருந்துகள் மற்றும் உணவு பற்றியும், எதிர்காலம் பற்றியும் என்னிடம் விளக்கிக் கூறினார்.

அப்பாவின் அருகே சென்று உட்கார்ந்தேன். நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தவர் என்னைப் பார்த்ததும் சிரிக்க முயன்றார். அப்பாவின் கோணல் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டேன். மெல்ல என் கையை அவரது இடது கையால் பிடித்து இழுத்தார். நான் திரும்பி அவரது முகத்தைப் பார்த்தேன். அவரது முகம் ஏதோ சொல்லத் துடித்தது. அப்பா என் கையை மீண்டும் தட்டி என் சுடிதாரைப் பிடித்து இழுத்து ஏதோ சைகை செய்தார்.

“எம்மா..அப்பாக்குள்ள சட்டய எங்க?”

அம்மா ஒரு கூடையிலிருந்து அப்பாவின் சட்டையை எடுத்து என் கையில் குடுத்தார். நான் அதை அப்பாவின் அருகே கொண்டு சென்றேன்.அந்த சட்டைப்பையில் எதையோ தேடியவர் ஒரு சாவியை எடுத்து என் கையில் வைத்தார். என்னைப் பார்த்து மீண்டும் சிரிக்க முயன்றார். பகவதி அம்மன் ஓவியத்தை வரைந்து முடிக்கும்போது அப்பா இப்படித்தான் சிரிப்பார்.

“எம்மா…பாத்துக்கோ..” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடினேன் நான். என்னையே அறியாமல் என் மனதிற்குள் பேரானந்தம் பொங்கிக்கொண்டு வந்தது. வீட்டிற்குப் போய் அப்பாவின் அறையைத் திறந்தேன்.

அந்த நொடி நான் நுழைந்தது திருவிதாங்கூர் அரண்மனைக்குள். ஐந்தடி உயர மூங்கில் மேட்டில் என் கண் முன்னால் தத்ரூபமாக நின்றார் ராஜா ரவி வர்மா. என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அவர் அருகில் சென்று மெல்லத் தொட்டுப் பார்த்தேன். என் அப்பாவின் உடல் சூடு. ஏதோ தோன்ற, சட்டென்று பின்னால் சென்று அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தேன். அது அப்பாவின் முகமே தான்.

அப்பா ராஜ உடையுடன் இடது கையில் ஒரு கைத்தடி வைத்திருந்தார். அவரது கோட்டின் வலது மார்பில் ராஜாங்கப் பதக்கம் மின்னியது. ஓவியத்தின் இடது கீழ்புறத்தில் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

சுஷில்குமார் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு -sushilkumar.gopal@ishavidhya.org

RELATED ARTICLES

3 COMMENTS

  1. மிக நன்று.. நாகர்கோயில் மொழிநடை மிகவும் ஈர்த்தது. கலைஞர்களின் கவரவத்தை கண்முன்னே நிறுத்தும் வண்ணம் இக்கதை இருந்தது.

    வாழ்த்துக்கள் அண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular