Sunday, November 17, 2024
Homeஇலக்கியம்அபுனைவுமெய் திறக்கும் நூல்

மெய் திறக்கும் நூல்

  • ரா.கார்த்திக்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை

தமிழகத்தில் கவனிக்கத்தக்க சிந்தனையாளர்களுள் டி.தருமராஜ் முக்கியமானவர். அவரின் பார்வையும், ஆய்வு அணுகுமுறையும் தமிழ் சூழலுக்கு முற்றிலும் புதியவை. அதற்கு முக்கியமான காரணம் அவரின் குறியியல் சிந்தனை.

அவரின் ‘நான் பூர்வ பௌத்தன்’, ‘கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும்’, ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ ஆகிய நூல்களைக் காட்டிலும் ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ மற்றும் ‘அயோத்திதாசர்’ ஆகிய நூல்கள் அதிக கவனம் பெற்றன. ஏனெனில் இவ்விரு நூல்களும் தலித் அரசியல் மேற்கொண்டுவரும் வழக்கமான விவாதங்களை மறுபரிசீலனைச் செய்கிறது மற்றும் தலித் என்ற அடையாளத்தையும் மறுபரிசீலனைச் செய்கிறது.

“அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை” என்ற நூல் ஒரு கதம்பத்தைப் போல பின்னப்பட்ட தன்னிலை என்பேன். ஏனெனில், நூலின் முதல் பகுதியான ‘நான் பூர்வ பௌத்தன்’ அயோத்திதாசரை தலித் அரசியல் தேடிக்கண்டடைந்த நாயகனைப் போல சித்தரிக்கிறது. கிட்டத்தட்ட முதல் பகுதி ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் அறிமுகத்தைப் போல உள்ளது. அயோத்திதாசர் எவ்வாறு தோன்றினார். அவர் எவ்வாறு பேசுவார். அவர் எப்படி எழுதினார் என்று அவரை கதாநாயகனாக கற்பனை செய்யப்பட்டதே முதல் பகுதி. இங்கு தான் அயோத்திதாசர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அயோத்திதாசர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பறையர் சமூகத்தில் பிறந்தவர். இவர் திண்ணைப்பள்ளியில் கல்வி கற்றவர். இவர் தமிழ், சமஸ்கிருதம், பாழி ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் துவங்கியபோது கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களை ‘இந்து’ என்ற பெயரில் கணக்கெடுத்ததைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் நாட்டுப்புற சமயத்தில் உள்ள வழிபாட்டுக் கூறுகள் பௌத்தத்தைச் சேர்ந்தவை என தொடர்ந்து வாதாடிவர். மேலும், தமிழர் என்ற பொது அடையாளம். திராவிடம் என்ற பதத்தை பயன்படுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

இரண்டாம் பகுதியான ‘இது பௌத்த நிலம்’ சற்று சுவாரஸ்யமாக அயோத்திதாசரைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு தருமராஜ், அவர் எழுதியதை திரும்ப எழுதிப் பார்க்கிறார். மறுவாசிப்பு என்பதை தமிழ் சூழல் அதிகமாக பழகியிருக்கிறது. வேறொரு காலத்தில் எழுதப்பட்ட பிரதியை புதிய சூழலில் வாசித்து பார்க்கும்போது வெவ்வேறு புதிய அர்த்தங்கள் திறக்கப்படும் என்பதே மறுவாசிப்பு. இங்கு மீண்டும் எழுதிப்பார்த்தல் என்பது அயோத்திதாசர் எவ்வாறு யோசனை செய்தார் என்பதைக் கண்டடையும் வழி என்கிறார் தருமராஜ்.

இப்பகுதியில் அயோத்திதாசரின் சிந்தனையை கண்டறிய முயற்சி செய்யும் தருமராஜ் ஸ்லொவேனிய அறிஞர் சீசகின் முறையியலை பயன்படுத்திக் கொள்கிறார். எல்லா இந்து புராணங்களையும் அயோத்திதாசர் மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டிய காரணம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி தருமராஜே பதில் அளிக்கிறார். இப்பகுதியில் உள்ள ‘காலத்தினுள் அசையும் வேம்பு’ என்ற கட்டுரை திரும்பி எழுதிப்பார்த்த கட்டுரைகளில் குறிப்பிடத் தகுந்த சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் அழகியல் இல்லை என்ற வாதத்தை இந்த கட்டுரை சுக்குநூறாக்கியது. இப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த மற்றுமோர் கட்டுரை “மையம், விளிம்பு, அதற்கும் அப்பால் நிற்கும் அயோத்திதாசர்”. அயோத்திதாசர் தன்னை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்வதையோ பறையன் என்ற அழைப்பதையோ ஒருபோதும் விரும்பியதில்லை. ‘பறையன்’ என்று பெயரில் வெளிவந்த பத்திரிக்கையையும் கடுமையாக எதிர்த்தார்.  தன்னை தாழ்த்தப்பட்டவன் என்று ஒத்துக்கொள்வது அதனைக் கொண்டாடுவதும் ஒன்றே என்றார். அதற்கு பதிலாக வேடபிராமணன் என்பதை மொழிந்தார். இதன் வாயிலாக இந்திர தேச சரித்திரத்தில் புராணங்களை மறுவரையறை செய்கிறார். பண்டிகைகளுக்கான தொன்மங்களில் உள்ள இந்து சமய வாதங்களை நீக்கம் செய்து தர்க்கரீதியிலான விளக்கங்களைச் சொல்கிறார்.

இப்பகுதியில் தான் அயோத்திதாசரின் மொழி அறிவை அவரின் மொழி ஞானத்தை நமக்கு காட்டுகிறார். தமிழ் மொழியை ஆராய்ந்த ஜி.யு.போப் போன்ற மேலைநாட்டு அறிஞர்களுக்கு இலக்கணம் தெரியும், இலட்சணம் தெரியாது என்றார். மொழிக்கு இலக்கணம் இருக்கிறது, மொழிக்கு இலக்கியம் இருக்கிறது அது என்ன இலட்சணம்? என்ற கேள்விக்கு தர்மராஜ் பதில் அளிக்கிறார். சமஸ்கிருதமும் தமிழும் எதிரும் புதிருமான மொழி என மேலைநாட்டு அறிஞர் சொல்வது போல அயோத்திதாசர் கருதவில்லை இவ்விரு மொழிக்கும் ஒத்த தன்மைகள் உள்ளன. அவை இலட்சணத்தால் ஒன்றுபட்டுள்ளன. பஞ்ச இலட்சணங்களைக் குறிப்பிடுகிறார். இலக்கணத்தைப் போல் வெளிப்பார்வைக்குப் புலப்படாதது இலட்சணம். உள்ளே மறைந்து கிடப்பது. பண்பாட்டு செயல்பாடுகளில் வெளிப்படக்கூடியது. இலக்கணத்தை மேலோட்டமாகவே கற்றுக்கொண்டு விட முடியும். ஆனால் இலட்சணத்தைக் கற்றுக் கொள்வது கடினம் என்கிறார் தருமராஜ்.

மூன்றாம் பகுதியான ‘பூர்வ பௌத்தனின் கல்லறை’ தருமராஜின் மேதமையை பறைசாற்றும் பகுதி. அயோத்திதாசரை கதாநாயகனைப் போலவும், தன்னையே அயோத்திதாசராக பாவித்துக் கொள்வது போலவும் எழுதியவர். அவற்றை எல்லாம் கடந்து அயோத்திதாசரை ஒரு நிகழ்வாக மாற்றிக் கொள்கிறார். இந்த யுக்தியை சமகால தத்துவ அறிஞரான ஆலன் பேத்யோவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். அயோத்திதாசரைக் கொண்டாடி, அயோத்திதாசராக வாழ்ந்து, இறுதியாக அயோத்திதாசரை கடந்து செல்ல உதவுகிறார் தருமராஜ்.

ஞாபகத்திற்கு ஞாபகம் வந்த ஞாபகம் பற்றி பேசுவது அற்புதமானது. அயோத்திதாசரின் எழுத்துக்களை 90 களில் கண்டுபிடிக்கும் போது நாம் அயோத்திதாசரை கண்டறிந்தோம். ஆனால் அவர் தன் காலத்தில் பூர்வ பௌத்தன் என்ற யோசனையைக் கண்டறிந்தார். இதைத்தான் தருமராஜ் ஞாபகத்திற்கு ஞாபகம் வந்த ஞாபகம் என்கிறார். இங்குதான் அயோத்திதாசர் எவ்வாறு கண்டடையப்பட்டார், அவரின் சாக்கிய பௌத்த சங்கம் எவ்வாறு திராவிட இயக்கங்களுக்கு அடித்தளமாக விளங்கியது குறிப்பிடப்படுகிறது.

மறதி, மொழியின் கனத்த மௌனம். மற்றமையின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி. மறதி என்பது ஞாபகத்தின் வெற்றிடமல்ல புதிய ஞாபகத்தின் வருகை என்கிறார். அயோத்திதாசர் கண்டறிந்த பூர்வ பௌத்தன் என்ற ஞாபகம் பறையர் என்ற தன்னிலையை கேள்வி கேட்கிறது. அயோத்திதாசரின் ஒட்டுமொத்த அரசியல் சொல்லாடலையும் ‘பறையன்-பௌத்தன்’ என்ற தன்னிலைகளுக்கு இடையிலான மோதல் என்று சொல்ல முடியும் என்கிறார்.

அயோத்திதாசர் நிகழ்த்திய மூன்று முக்கிய செயல்பாடுகள் இந்து என்று ஞாபகப்படுத்தும் பனுவல்களை மறுவாசிப்பு செய்தல், காலனிய அரசுச் செயல்பாட்டைக் கண்காணித்தல், இந்திய தேச இயக்கத்தை விமர்சித்தல். இம்மூன்றையும் எதிர்ப்பதற்கு அயோத்திதாசரிடம் இருந்த ஒரே ஆயுதம், ‘சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயம்’ என்ற நியாயம் மட்டுமே என தருமராஜ் குறிப்பிடுகிறார்.

மேலும், அயோத்திதாசரின் மொழியறிவை வளர்த்தெடுக்கும் தருமராஜ் புதிய திறப்புக்களை நமக்கு அளிக்கிறார். அயோத்திதாசர் தமிழ் சொற்களின் பின் உள்ள ‘மை’ விகுதிக்கு பதில் ‘மெய்’ என்று பயன்படுத்தும் பழக்கத்தை திட்டமிட்டு செய்தார். இவ்வாறே தான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். எழுத்துக்களை அமுதெழுத்து, நச்செழுத்து என வகைப்படுத்தினார். மொழியின் இயல்பு அறம் என்றார் அயோத்திதாசர்.

அயோத்திதாசரின் மொழியறிவில் தருமராஜ் வளர்த்தெடுக்கும் மெய் எழுதுக்கள் பற்றிய யோசனை தமிழ் சிந்தனை உலகிற்கு புதிய வெளிச்சங்களை பாய்ச்சக்கூடியது. தமிழ் ஆய்வுகளுக்கு புதிய பார்வைகளைத் தரக்கூடியது. ஓசையற்ற பதினெண் மெய் எழுத்துக்கள் என்பன தமிழ் மொழிக்கே இருக்கக்கூடிய தனித்துவம் என்கிறார். இலக்கணம் என்ற எல்லையையும் கடந்து, அதனை தத்துவார்த்த உரையாடலாக வளர்த்தெடுக்கும் சாத்தியங்களை ‘மெய்’ என்ற சொல்லே நமக்கு ஏற்படுத்துகிறது என்கிறார்.

இவ்வாறாக வெவ்வேறு புதிய சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இதனை அயோத்திதாசரை முன்வைத்து சாத்தியப்படுத்தியுள்ளார். தமிழ் சூழலில் பெயரளவில் அறிமுகமாகியுள்ள டெல்யூஸ், பாத்யோ, லாக்லவ், சீசன் போன்ற தத்துவ அறிஞர்களின் கருத்துக்களை தமிழ் சூழலில் பொருத்திப் பார்த்தும், தமிழ் சூழலில் வேறொன்றாக அதனை வடிவமைத்தும் அளித்துள்ளார்.

மேலும், 326 பக்கங்கள் கொண்டும் கடுமையான தத்துவ ஆய்வுகளையும் கொண்ட இந்நூலை வாசிப்பதற்கு மிக எளிமையானது என்றால் ஆச்சரியமடையச் செய்யும். ஆம், உண்மையிலேயே எழுத்தின் நுட்பமானது நூலை வாசகனின் மனநிலையில் அணுகி, எளிமையாக வாசிக்கும் வண்ணம் படைத்துள்ளார். முதல் இரண்டு பகுதிகள் துப்பறியும்  நாவலைப் போல விறுவிறுப்பாக செல்லக் கூடியது. கடைசிப்பகுதி ஒரு புதிய உலகில் நிகழும் சாகசக்கதை போன்றது. ஓர் ஆய்வுப் புத்தகம் கலைப்படைப்பு போல வாசிக்கக் கிடைப்பது புதிய அனுபவம். அந்த அனுபவத்தை இந்த நூல் தமிழ் சூழலுக்கு வழங்கியிருக்கிறது.

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
ஆசிரியர்: டி. தருமராஜ்
கிழக்கு பதிப்பகம்

  • ரா.கார்த்திக்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular