Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது........ -01 நடை பயிற்சி 1

யாளி பேசுகிறது…….. -01 நடை பயிற்சி 1

யாளி பேசுகிறது -01 (புதியத் தொடர்)

– ஆயிரங்கால் மண்டபத்தின் வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து.

ஓவியம் பற்றியத் தொடர் ஒன்றினை ஆரம்பிக்கத் தூண்டியது எது?

இது தான் என் முதல் கேள்வி, பல கதை சொல்லிகளுக்கு மத்தியிலே புரண்டு கிடந்தும், சொல்லத் தெரிந்து நிறையக் கதைகள் இருந்தும் சொல்ல முடியாமல் , எங்கெங்கோ  சிக்கித் தவிக்கும் என் கதைகளை தனியே விட்டு விட்டு நான் மட்டும் பிரயாணம் செய்கின்றேன்.

ஒரு குரல் கேட்கிறது, அது ஒரு அறிவியல் ஞானியின் குரல். அக்குரலில் வரும் ரிச்சர்ட் ஃபெய்மெனின் (Richard Feymann)அறிவியல் கோட்பாடாக மட்டும் கீழே வரும் வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சுருங்கி வாழ முடியாது. அவர் சொன்னது பிரபஞ்சத்திற்கே பொதுவான உண்மை என்பது மிகை.

“There’s A Plenty of a Room at the Bottom” எனும் சொல்லாடல் தான் அது.

குறிப்பாக ஓவியம் பற்றி பேசுவதற்கு மிகவும் குறைவான ஆட்களே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் பட்டியல் – வான்கோ, பிகாசோ, காகின், கிளிம்ட்,வாஸில்லி கண்டின்ஸ்கி, வில்லியம் பிளேக் என்று தான் பெரும்பாலும் ஆரம்பிக்கிறது. விக்கீபிடியா போன்ற தகவல் களஞ்சியங்களில் கூட நமது தென்னிந்திய ஓவியர்களைப் பற்றிய குறிப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  இது நிராகரிப்பா யதார்த்தமா?

அசரீரி: கலையின் உபபொருள் ரசனையா? அல்லது நிராகரிப்பா?

இன்றைக்கு இருக்கும் நவீன ஓவியச் சூழலில், நல்ல தொழில்நுட்பங்களுடன் கூடிய ஓவியப் படிப்பு ஒரு தொழிற்கல்வியாக மாறும் அளவிற்கு கணிசமான வேலை வாய்ப்பை பல்வேறு துறைகளில் உருவாக்கித் தருகிறது. ஆனால் பல ஓவியர்கள் பொருளீட்டும் உலகில் இருந்து தனித்தே இருக்கிறார்கள்.

இக்கட்டுரை, ஓவியங்களோடு  நமது ஓவியர்கள், இன்றைய ஓவியங்களுக்கான உலகச் சந்தை, ஓவியம் மூலமாக உலக அரசியல், ஓவியங்களைப் பற்றிய விளக்கங்கள், நிர்வாணம் முதல் கார்ட்டூன் அரசியல் என உரையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

பிற நம் கட்டுரையில் வலம் வந்த பின்னர்:

*****

தொழிற்நுட்பத்தின் காரணமாக அது உருவாக்கப்படும் பிரதேசத்தின் சாயல்களை அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் படைப்பில் பிரதிபலிப்பார்கள். அப்படித் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டு இருப்பதால் சொந்த மண்ணின் தொன்மைகள் மறக்கடிக்கப் பட்டுவிடும்.  இதை சமீபத்திய உதாரணமாக, சீன, கொரிய மற்றும் சில மேற்கத்திய கார்ட்டூன்கள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக (Ranger, Ben10, Transformers) பழைய Disney, Mickey mouse போன்ற கதைகள் மறைந்து விட்டன.

இது நேரடியாக நமது நாட்டிலுள்ள பொம்மைகள் சந்தையினை முற்றிலுமாக பாதித்தது. பிறகு நமது பூர்வீகமான புராணங்களில் இருந்து உருவான பாலகிருஷ்ணா, சோட்டா பீம் போன்ற கதைகள் மறுவுருவாக்கம் செய்யப்பட இந்திய பொம்மைச் சந்தைக்கு திரும்பவும் உற்பத்தி செய்யும் வாய்ப்பு கிட்டியது.

இந்திய நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான KCS Panickar-ன் படைப்புகளை நான் கண்ணுறும் போது இது போன்ற சந்தை மாற்றம் பற்றிய பின்புலம் பற்றியும் யோசிக்க இடமிருந்தது. ஏனெனில், அவரும் இத்தகைய ஒரு பெரிய மாற்றத்திற்கான ஒரு முன்னோடியாக செயல் புரிந்தார்.

(இளையாராஜாவை நாம் போற்றிப் பாடுவதன் பின்னணியிலும் இத்தகைய காரணம் தான் அடித்தளம்.)

KCS பனிக்கரை நாம் முக்கியமான ஓவியராக ஒரு புறமும்,  நவீனச் சூழலில் ஒரு புதிய களம் ஏற்படுத்திக் கொடுத்த பிதாமகராகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைஞனாக அவரைப் பார்ப்பதைக் காட்டிலும் அவர் அமைத்துக் கொடுத்த சோழமண்டல அமைப்பின் நிறுவனராகவே பல இடங்களில் கவனிக்கப்படுகிறார். அதன் காரணமாகவே அவரைப் பற்றியே நான்  முதலில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஆனால் முதலில் பேசப்போவது அவர் ஓவியங்களைப் பற்றியே.

சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை நவீன ஓவியர்களில், இவர் படைப்புகள் நுட்பமான உரையாடலையும் (Narrative) வைத்திருந்தது.

இவரது சொந்த ஊரான, கேரள மாநிலத்தின் ஒரு கிராமத்துக் காட்சி அப்படிப்பட்டவை இல்லையென்றாலும் அதன் பின்னர் வரைந்தவை இந்த வண்ணங்களிலிருந்து மிகவும் வேறு பட்டவை. மிகக் கடினமான பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு புறம் இருந்தாலும், இவரது கோடுகள் மிகச் சாதாரணமான வடிவங்களையே திட்டமிட்டு உருவாக்கின. அவர் வரைந்திருக்கும் மனிதர்களின் வடிவம் மிக எளிமையான (Fruit seller) குழந்தைகளின் முயற்சியைப் போன்ற தோற்றமளித்தன. பிற புராணங்களைத் தழுவிய ஓவியங்களிலும் இவர் வரைந்திருக்கும் மனிதர்களின் தோற்றம் வித்தியாசமானவையே. அவை தம் கண்களைக் கொண்டு உரையாடுவதைப் பார்க்கலாம்.

வாழ்க்கை, மரணம், பிறப்பு குறித்த இவரது ஓவியங்களையும், சில narrative ஓவியங்களையும் தொடர்ந்து  இக்கட்டுரையில்  பார்த்து வருவோம்.

அசரீரி: கலைஞன், கட்டுவிக்கும் அதே அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்தாலும் கூட ஒரு ரசிகன் உணர்ந்து வடிக்கும் கோபுரங்கள் அது போல இருப்பதில்லை. அது ரசிகனின் தேவைக்கேற்ற அல்லது புரிதலுக்கேற்ற கட்டுமானம், அதில் தவறில்லை. வெறும் அடித்தளத்தைத் தொட்டு வணங்கிவிட்டு செல்லும் பீடமாக மட்டும் இருப்பது தான், பழிக்கு ஆளாகும் நிலை.

அடுத்து அவரது ஓவியம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்:

கே.சி.எஸ்.பனிக்கர்
கே.சி.எஸ்.பனிக்கர்

Genesis எனும் ஓவியம். இது ஒரு கோட்டுச் சித்திரம். 1957-ல் வரையப்பட்டது.

இதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மொத்தம் நான்கு காட்சிகள். அவை காதல் , கற்பம், கரு, பேறுகாலம் என கோடுகளாகத் தீட்டப் பட்டிருக்கும்.

இவர் வரைந்திருக்கும் மனித உருவங்கள் பிரத்தியோகமானவை. கருவை அவர் வரையும் பொழுது கருவறையைச் சுற்றி ஒரு ஜுவாலை இருப்பது ஒரு மரபுச் சார்ந்த படிமம்.

ஓவ்வொரு காட்சிகளில் இருக்கும் கண்களின் வித்தியாசத்தைப் பாருங்கள். அதில் காதல், பூரிப்பு/வெட்கம், வலி – அதோடு கருவில் இருக்கும் குழந்தையின் கண்கள் கவலைகளுக்கு இடமேயில்லாத உலகில் இருப்பது போல் தோற்றமளிக்கும். இவரது கோடுகள் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், அவற்றை ஆழ்ந்து நோக்குவதற்கு முன்பே இவை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடும்.

நவீன உலகில் நமது மரபுகளை / நம்பிக்கைகளை, ஆன்மீகத்தை குறிப்பிடும்படியான எந்த பரிட்சார்த்தமும் செய்துப் பார்க்காத போதிலும் அவற்றை அழகியலுடனும், மிக நுண்ணியக் குறியீடுகளுடனும் வெளி உலகிற்கு எடுத்துச் செல்லவும், சமகாலத்தின்/சமூகத்தின் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் சில திரைகளை விலக்குவதற்கும் அவை பயன்படும்.

இன்னும் சில ஓவியங்களோடு அடுத்தப் பகுதியில்…

– ஜீவ.கரிகாலன்

************************************************************

ஜீவ.கரிகாலன் –   www.kalidasanj.blogspot.in , kaalidossan@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular