Saturday, November 16, 2024
Homesliderரமேஷ் பிரேதன் நேர்காணல்

ரமேஷ் பிரேதன் நேர்காணல்

சித்ரன்: “உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனிநாடு பூமியில் தானே மலரும்.” – ஒரு பின்காலனியக் கவிஞன் கற்பனாவாதக் கவிஞனாய் உருமாறிவிட்டான் என இதை எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை. ஐந்தவித்தான் என்ற நாவலில் மாதவன் என்ற கதாபாத்திரம் சொல்லும் கூற்று இது. இதற்கும் இப்பனுவலாசிரியனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. தமிழறிவின் தெளிந்த வடிவம் ஐயாயிரமாண்டுகள் என்கிறோம். தொல்காப்பியத்தின் வயது மூவாயிரமாண்டுகள் என்கிறோம். திருவள்ளுவரே என்னைவிட இரண்டாயிரமாண்டுகள் மூத்தவர் என்று பெருமைபட்டுக்கொள்கிறேன். எல்லாமிருந்தும் என்ன செய்வது? செம்மொழியோருக்கு ஒரு தற்கால நாவலை வாசிக்கத் தெரியவில்லையே. ஏனென்றால், பார்த்தல், கேட்டல் மூலமே ஒன்றைப் புரிந்து ரசிக்கத்தெரிந்த நமக்குப் படித்துப் புரிந்து ரசிக்க இன்னும் பழக்கப்படவில்லை. போகப்போக, வைகைப்புயல் வடிவேலுவை ரசிப்பதுபோல மாதவனின் இக்கூற்றின் நகையைப் புரிந்து ரசிப்பீர். தமிழர் தனிநாடு என்பது இன்று தமிழர் பொதுபுத்திக்கு நக்கல் நகைச்சுவையாகிவிட்டது. இந்தித் திணிப்பு மட்டுமில்லை, ழகரத் திரிபும் தமிழை அழிக்கும் சதிவேலையாகும். மொழியரசியல் என்பதைச் சொந்த நாவிலிருந்துத் தொடங்கவேண்டும். உலகில் புலி இனம்போல ழகரத்தை உச்சரிக்கும் தமிழர் எண்ணிக்கையும் அருகிவருகிறது. தனது தாய்மொழியின் பெயரைப் பிழையாக உச்சரிக்கும் ஏதேனுமோர் இனம் உலகிலுண்டா?

சபரிநாதன்: தமிழ்ச் சமூகத்தில் கவிதை என்பதற்கு பொதுக்கற்பனையிலும் பாரம்பரியத்திலும் பெரிய இடம் இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் கவிதை ஒரு விளிம்புநிலை வடிவமாகவே உலவுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

பொதுச் சமூகத்திற்கான பொதுவான அறிவு என்பது அச்சமூகத்தின் வழக்கில் விளைந்த மொழி மற்றும் மதம்; இவை தவிர, எல்லாருக்கும் எல்லாமாகி நிற்கும் வேறொன்றில்லை. தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமில்லை; பிற எந்தவொரு சமூகத்திற்கும் கலை இலக்கியம் என்பது பொதுபுத்திக்கானவை இல்லை  முகநூல் நட்பில் எனக்கு ஐயாயிரம்பேர் இருக்கிறார்கள்; இருபினும், எனது பதினான்காம் கவிதை நூல் ஐம்பது படிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அடுத்த ஐம்பதாண்டில் என்னை கல்வியாளர் வட்டத்தில் ஐந்துபேர் தெரிந்துவைத்திருப்பார்கள்; அதில் ஓரிருவர் என்னைப் படித்தவராக இருக்கலாம். இது இப்படியே இருக்கட்டும். இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் பொதுச் சமூகத்திற்கு வந்தது. அப்பனுவல் இன்னும் தமிழ்ப் பொது அறிவில் ஓர் அங்கமாகவில்லையே.

சனாதன அடிமைத் தளைகளை நொறுக்கி வெளியேறிய விடுதலை இறையியலாளர்களான; நவீனகாலத் தமிழ்த் தேசத்தின் முப்பெரும் ஆளுமைகளான ஐயா வைகுண்டர், அருட்பிரகாச வள்ளலார், பண்டிதர் அயோத்திதாசர்  முதலானோர் தமிழ்நாட்டில் அந்தந்த நிலம், இனம், சாதி வட்டார அளவிலேயே முதன்மை பெற்றிருக்கிறார்கள். சனாதனத்தால் கட்டமைந்த தமிழர் பொதுபுத்தி இவர்களை மதம் கடந்த இறையியலாளர்களாக முழுமையாக ஏற்கவில்லை. வடக்கிலிருந்து நேற்றுவந்த சாய்பாபா தமிழ் நிலத்தில் ஒவ்வொரு வீட்டின் பூசையறையிலும் இடம்பிடித்துவிட்டார்.   கலை இலக்கியம் தத்துவம் விடுதலை இறையியல் என்பன பொதுச்சமூகத்திற்கானவை இல்லை. 

சபரிநாதன்: பெரும்பாலும் நடப்பது என்ன? ஒரு கவிதைக்கருவில் இருந்து மொழிப்பரப்பிற்குள் நுழைவீர்களா? மொழிவெளியில் இருந்து புறப்பட்டு கவிதையைக் கண்டுபிடிப்பீர்களா? உங்கள் கவிதையாக்க அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா? ஒரு வாசகனாக கவிதையில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒன்றைச் சிறந்த கவிதையாக நீங்கள் கருதுவதற்கான காரணிகள் என்னென்ன? கவிதையில் சிந்தனையின் இடம் என்ன? உணர்ச்சியும் அறிவும் எதிரெதிரானவை என்ற தமிழ்ச்சூழலின் பொதுவான நம்பிக்கையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? சொற்தேர்விலும் வளத்திலும் அதீத மொழிப்பிரக்ஞை செயல்படும் கவிதைகள் உங்களது. மொழியுடனான உங்கள் உறவு எத்தன்மையது? கவிதையில் மொழி எப்படி வந்தமையவேண்டுமென விழைகிறீர்கள்?

சபரி, நீங்கள் தனித்தனியாக எழுப்பிய கேள்விகளை ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு; எனக்கான விவாதப் புள்ளிகளை வரிசைப்படுத்திக்கொள்கிறேன். மொழியிலிருந்து புறப்பட்டு கவிதையைக் கண்டடையமுடியாது. ஒரு கருவிலிருந்தே கவிதையை நான் வளர்த்தெடுக்கிறேன். அக்கரு ஒரு சொல்லாகவோ காட்சிப் படிமமாகவோ திட திரவ காற்று நிலையில் ஒரு பொருளாகவோ இருக்கலாம். வெறும் உணர்ச்சி நிலையை மட்டும் பிடித்துக்கொண்டு கவிதை மட்டுமில்லை நம்மால் அழக்கூட முடியாது; ஒரு காரியத்துக்குக் காரணம் தேவை. எனது கவிதைகள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டவை; சிம்பொனி இசைக் கட்டமைப்பைப்போல சல்வதோர் தலியின் ஓவிபப் படலம்போல சிற்பத்தின் நடனத்தின் முன்கூட்டிய திட்டமிடல்போல நாவல், திரைப்படம் இவற்றின் ஒழுங்கமைப்பைப்போல திட்டமிட்டே கலைத்தொழில்நுட்பத்தை வரையறுக்கிறேன். கவிதை மட்டுமில்லை, அனைத்துக் கலைவடிவங்களும் செயற்கையானவையே. இயற்கைக்கு வெளியில் நிற்பவை எல்லாம் செயற்கையே. மரம் இயற்கை; போன்சாய் செயற்கை. கந்தசாமி இயற்கை, கடவுள் செயற்கை; இது புதுமைப்பித்தனுக்குத் தெரியும்.

மீசை அரும்பும் காலத்திலேயே அணி இலக்கணம் கற்றுத் தேர்ந்து பாப்புனைந்தேன். தளைத்தட்டாமல் அசை பிரித்து சொற்களைத் தேர்ந்து பாவகைமையில் கவிதைகளைக் கட்டமைத்த பழக்கம் இன்றுவரை துணைநிற்கிறது. உடம்புறவில் கட்டமையும் கவிதையியல் தொழில்நுட்பத்தை எனது பிரதியாக்கங்களில் படித்துத் தெளியலாம். நான் தேர்ந்த கவியாக இல்லாமலிருக்கலாம், அது உங்கள் பிரச்சினை; ஆனால், என்னளவில் அறுதியிட்டுச் சொல்வேன், நானொரு தேர்ந்த வாசகன். கவிதையொன்றில் எழுதியிருப்பேன்; நட்சத்திரம் என்றால் அதுவொரு சொல், விண்மீன் என்றால் அதுவொரு படிமம். மொழி என்பது எனக்கொரு கலைப்பொருள், அது பேசவும் எழுதப்படிக்கவும் மட்டுமன்று.

சிறந்த கவிதை என்று எப்படித் தேர்வது? பிரதி ஒன்று; வாசிப்பு நூறு. எழுதப்பட்டதை மறுகட்டமைப்பு செய்வது வாசகர் மூளையே. வாசிப்பில் அடைபடும் பிரதியும், முன்முடிபுகளை முன்மொழியும் பிரதியும் எனக்கு ஒவ்வாதவை. பன்முகப்பிரதி வாசிப்பைப் பன்முகப்படுத்தும். பிரதியை ஒருமுகப்படுத்துவதே வாசிப்பின் அரசியல்; அது விமர்சனப் பாசிசத்தை உருவாக்கும். மதச் சித்தாந்திகளுக்கும் அரசியல் சித்தாந்திகளுக்கும் எனது பனுவல்களுக்குள் அனுமதியில்லை; அவை, அவர்களை வெளித்தள்ளிவிடும்.

உணர்ச்சியும் அறிவும் எதிரெதிரானவை இல்லை; உணர்ச்சியை அறிவு வழிநடத்தவேண்டும்; கலையின் இயங்கியல் அதைச் செய்யும். உள்ளம் என்பது தொகுப்பறிவு, அது தொகுப்புணர்ச்சி அன்று. அறிவைப் பொருண்மை செய்தல்வேண்டும். அறிவும் கலையும் சேர்ந்த பொருண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, திருக்குறள்; இதை எழுதியவனே, தமிழின் மூத்தத் தலைமுறையின் முதன்மைக் கவிஞன்.

இருப்பதை நகலெடுப்பது கலைச்செயல் இல்லை; இருப்பதை வேறொன்றாக ஆக்குவதே படைப்பின் ரசவாதம். தமிழ்மொழி இயல்பிலேயே கவித்துவமானது. தாய்மொழி ஒரு சமூகத்தின் இயற்கை விளைவு. நானொரு மொழிவழி கலைஞன்; எந்த வழியிலும் பாசிசம் அண்டாத உள்ளத்தின் ஒளி பிரதியில் துலங்கவேண்டும்.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்களது அனேக புனைவுலகில் (சமீபத்தில் வெளியான நல்லபாம்பு உட்பட) பெருங்கதையாடல்களுக்கு மாறாக சிறுதெய்வ வழிபாட்டையே நீங்கள் பிரதானப்படுத்துகிறீர்கள். இதை ஓர் அரசியல் செயல்பாடாக எடுத்துக்கொள்ளலாமா?

உலகப் பெருமதங்கள் யாவும் அரசியல் செயல்பாட்டுக் களங்களே. இந்தத் துணைக்கண்டத்தில் ஒவ்வொரு கடவுளும் அரசியல்வாதிகளே. கடவுளரை எதிரிடையாகவைத்து விளைந்த சமயப் போர்கள் இந்த நூற்றாண்டிலும் ஓய்ந்தபாடில்லை. மனிதவுறவுகள் இல்லாமல் ஒரு சமூகத் தன்னிலையால் வாழமுடியும்; ஆனால், கடவுளில்லாமல் இயலாது. தமக்கென்று ஒரு கடவுள் இல்லாமல் இவ்வுலகில் எந்தவொரு மூலையிலும் ஓர் இனக்குழு இல்லை. மதம் என்னும் கருத்தியல் சட்டகமே, சமூகத்தின் முதல் அரசியல் அமைப்பு; அதுவே பன்னாட்டு அரசியல் அமைப்புகளைப் பின்னின்று இயக்குகிறது. இத்துணைக்கண்டத்தில் ஐம்பூதகங்களும் கல், மண், மரம் செடி கொடி, மலை, கடல், மீன், பன்றி, குரங்கு, யானை பானை, பாம்பு என உயிருள்ளவை உயிரில்லாதவை யாவும் தெய்வங்களே. சாமியாடும் பெண்கள் நரம்பு நோயாளிகளில்லை; அவர்கள் மாரியாயி கூடுபாய்ந்த அந்நேரத்திற்கான தெய்வங்கள். நடுகற்கள், சுமைதாங்கிக் கல் அமைப்புகள், உயிர்க் குடித்த பாழுங்கிணறுகள், தொழிற் கருவிகள், வேட்டைக் கருவிகள், போர்க் கொலைக்கருவிகள், பனையோலை, எழுத்தாணி, பாடபுத்தகம், பேனா பென்சில் எல்லாமே சிறுதெய்வங்கள்தாம். தெய்வம் என்பது சமூகமனநிலை; நாத்திகம் என்பது சமூக அறிவுநிலை. பெருதெய்வங்களை முன்வைத்து கட்டமையும் சமூக மேலாதிக்கப் பாசிசத்தை வலுவிழக்கச்செய்ய சிறுதெய்வ வழிபாடுகளை முன்னெடுக்கவேண்டும். மூத்தப் பனுவலான சிலப்பதிகாரமே இதைத் தொடங்கிவைக்கிறது. ஒளவை, புனிதவதி, திருவள்ளுவர், திருமூலர், பதிணெண் சித்தர்கள் தொடங்கி வள்ளலார் வரையிலான கவிஞானியர்கள் கடவுளாகவே வழிபடப்படுகிறார்கள். திருவதிகை வீரட்டானேசுவரர் பெருங்கோவிலுக்கு வெளியே வெட்டவெளி மண்தரையில் மூக்குடைக்கப்பட்டு வீற்றிருக்கும் புத்தரும் ஒரு சிறுதெய்வமாகத்தான் வழிபடப்படுகிறது. மதம்சார் பெருந்தெய்வம் புதிதாகத் தோன்றாது; சிறுதெய்வம் காலந்தோரும் தோன்றிக்கொண்டேயிருக்கும். நானொரு தமிழ் நாகன்; நாகத்தை வழிபடுபவன். நாகத்தைக்கூடி குட்டி நாகத்திற்குத் தந்தையானவன். நல்லபாம்பு: நீல அணங்கின் கதையில் அவளை நீங்கள் வழிபடலாம். ஆம், கார்பரேட் கடவுளருக்கு எதிராக நான் நாட்டுக்குடித் தெய்வங்களை முன்னிறுத்துகிறேன். இத்துணைக்கண்டத்துக்குள் வெளியிலிருந்து வந்தவர்கள் மண்ணின் மக்களின் மொழி, நிலம், தெய்வம், கலை, கதை என அனைத்தையும் களவாடி தமதாக்கிக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து நமது நாட்டார் தெய்வங்களையேனும் பறிகொடுத்துவிடாமல் பாதுகாக்கவேண்டும்.

லக்ஷ்மி சரவணகுமார்: சொல் என்றொரு சொல் நாவலிலும் உங்களின் அனேக கவிதைகளிலும் பெளத்தம் குறித்த ஆழ்ந்த புரிதல்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அதே சமயம் 2009 இலங்கை யுத்த காலகட்டத்தில் நீங்கள் உங்களை ஈழ ஆதரவாகவேதான் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலானோர் குறிப்பாக பெளத்தத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாய்த் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறவர்களும்கூட சிங்கள பெளத்த பேரினவாதத்தை கண்டிக்கவில்லையே இந்த மனநிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நான் பெளத்தத்தின் வழியாகத்தான்  அயோத்திதாசரையும் அம்பேத்கரையும் வந்தடைந்தேன். பெளத்தம் என்பது சிந்தனைப் பள்ளி; அது மதமாகத் திரிந்து பல கிளைகளாகப் பிரிந்து உலகப் பெருமதங்களில் ஒன்றாக பாசிசக் கட்டமைப்போடு செயல்படுகிறது. இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் மதப்பெரும்பண்மையினர் மதத்தின் பெயரால் மதச்சிறுபாண்மையினரை ஒடுக்கவில்லை; அவர்கள் இனம் என்ற உயிரியல்/ இனக்குழு வரையரையை முன்வைத்தே இனச்சிறுபாண்மையினரை ஒடுக்கவும் கொன்றொழிக்கவும் செய்கிறார்கள். பெளத்தப் பெரும்பாண்மையினர் சிங்களர்களாகவும்  இந்துச் சிறுபாண்மையினர் தமிழர்களாகவும் இருப்பதுதான் பிரச்சினை; இங்கு இருவேறு மதங்களை எதிரிடையாக முன்வைப்பது ஓர் அரசியல் கபடம். இந்தியாவில் இந்துக்களானத் தமிழர்கள் தனித்துவம் பேணும் தேசிய இனம் என்பதாலேயே இந்திய ஆரியப் பேரரசால் ஒடுக்கப்படுகிறது. இந்து என்ற மத அடையாளம் தமிழர் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கி தனித்துவம் அழித்து முடக்கப்பார்க்கிறது. இதேபோல இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பெளத்தர்களாக இருந்திருந்தாலும் இந்த இன அழித்தொழிப்பு நடந்திருக்கும். கிறித்துவ, இஸ்லாமிய மதப்பிரிவுகள் ஒன்றையொன்று பகைமைப்பாரட்டுவதைப் போன்றதன்று; இது, ஒரு நிலத்தில் வாழும் இருவேறு இனக்குழுக்களின் சுயநிர்ணய அரசியல் பிரச்சினை. இந்து தேசியத்தைக் கட்டமைக்க முனைந்துவரும் இந்திய அரசின்          (காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டிற்கும் ஒரே நோக்கம்தான்) பேருதவியோடுதான் இரண்டுலட்சம் ஈழ இந்துக்கள் கொன்றழிக்கப்பட்டனர். இந்தத் துணைக்கண்டத்தில் ராமாயணம் காலந்தொட்டு ஆரியர்கள் தமிழர்களை அழித்துவருகின்றனர். இந்தியா என்ற கட்டமைப்புக் குலைந்தால்தான் இப்போர் வரலாற்றில் ஒரு முடிவுக்கு வரும். பாவம், புத்தர் என்ற அறிவுஜீவி என்ன செய்வார்? அவரே ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் சாக்கியர், கோலியர் என்ற இரு இனக்குழுக்களிடையே சிக்கிச் சின்னாபின்னப்பட்டுத் தன்னை சமூக விளக்கம் செய்துகொண்டவர்தானே.

லக்ஷ்மி சரவணகுமார்: இந்தியத் தமிழர்க்குத் தனிநாடு அமையாதவரை ஈழத் தமிழர்க்குத் தனிநாடு சாத்தியமில்லை. தனி ஈழத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கும் தமிழர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஈ.வெ.ரா. சொன்னதைத்தான் அன்று பாரிசில் பேசினேன்; ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படிக் குரல்கொடுப்பான்?’ [பக். 126] ஐந்தவித்தான். நாவலில் கதாப்பாத்திரம் சொல்லும் இந்த வரிகளை உங்களின் அரசியல் நிலைப்பாடாக கொள்ளலாமா? எனில், பின் நவீனத்துவத்தில் தேசிய சிந்தனைகளுக்கான உரையாடல்களின் இடத்தை நாம் எவ்வாறு வரையறுப்பது?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பு தனித்தனி குடியரசுகளாகப் பிரிந்த பிறகுதான் அதுவரை ஒற்றைக் கூண்டுக்குள் அடைபட்டிருந்த வேறுபட்ட தேசிய இனங்கள் விடுதலை வானில் பறக்கலாயின. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சோவியத் கண்காணிப்பின் கீழ் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பட்டபாடுகளை அறிவோம். இனம், மொழி, பண்பாடு என அனைத்திலும் வேறுபட்ட தேசிய இனங்களை ஓர் அரசியல் கோட்பாட்டால் அமைந்த அரசின்மூலம் ஒற்றைக் குடையின் கீழ் நிறுத்துவதை, விடுதலையை அவாவும் எந்தவொரு கோட்பாடும் ஏற்காது. பொதுவுடமைக் கட்டமைப்பு என்பதும் தேசிய இனங்களின் ஒருங்கிணைவு என்பதும் வேறுவேறு. ஒரு மதப்பிணைப்பைக்கொண்டு இத்துணைக்கண்டத்தின் வேறுபட்ட தேசிய இனங்களை அடாவடியாக ஒன்றுகூட்டி வைத்திருக்கும் இன்றைய இந்திய நிலைமைக்கு ஒப்பானதே அது. இன்றைய ஆளும் அரசின் உச்ச அழுத்தத்தில் இந்திய ஒன்றியத்தின் பிணைப்புகள் தெறித்து; மொழிவழி மாநிலங்கள் யாவும் தனித்தனியாகப் பிரிந்து மொழிவழி தேசங்களாக உருத்திரளும். மதம், முதலாளித்துவம், பொதுவுடைமை என எதுவும் புதிய தேசங்களுக்கு முன்நிபந்தனையாக இருக்காது. அப்போது, சுயலாபங்களுக்காக இந்திய ஒன்றியத்தைத் தாங்கிப்பிடிக்கும் பாசிச சக்திகள் விரட்டியடிக்கப்படும். இது இந்நூற்றாண்டில் நிகழும். இது இலங்கைக்கும் பொருந்தும்; அங்கு, இரு தேசங்கள் மலரும். சுழலும் நிலம் நிற்கும்வரை வரலாறு தேங்காது.

சபரிநாதன்: நீங்கள் கூர்மையான கருத்தியல் மற்றும் விமர்சனச் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர். அந்த விவாதங்களும் அது சார்ந்த தேர்வுகளும் கவிதையாக்கத்தில் இடையீடு செய்துள்ளதாக எண்ணுகிறீர்களா?

கவிதைகள், புனைகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் வழியாகவே நான் அறியப்படுகிறேன். எனது அரசியல் செயல்பாடுகள் யாவும் கோட்பாடு சார்ந்த விவாதங்களாகவே இருந்தன. என்னை ஒரு கம்யூனிஸ்ட் எனச் சொன்னால், முறைப்பார்கள், அம்பேத்கரிஸ்ட் எனச் சொன்னால், ஏறயிறங்கப் பார்ப்பார்கள், தமிழ்த்தேசியவாதி எனச் சொன்னால், உதைக்கவருவார்கள். ஏனெனில், நான் அரசியல் கோட்பாடுகளுக்குள் நின்று படைப்பிலக்கியம் செய்வதில்லை. நானொரு நாடோடி கவிஞன்; எந்தவொரு சமூக அமைப்பிலும் எனக்கு இடமில்லை. என்னைப் பின்நவீனத்துவவாதி என்கிறார்கள்; சிரிப்பதைத் தவிர எனக்கு வேறேதும் செய்யத்தோணவில்லை. இரும்பைத் தங்கமாக்க அதன் இயல் தன்மையை மாற்றும் ரசவாதியைப்போல; ஆண் + பெண் = ஆபெண் என உயிரியல் ரீதியாக அன்றி கவிதையியல் ரீதியாக தனித்த பாலைத் திரிக்கும் ரசவாதவேலையில் ஈடுபட்டுள்ளேன். பாலில் தேங்கும் உடம்பும் கோட்பாட்டில் தேங்கும் அறிவும் மேலாதிக்கமாய் உருத்திரளும்.

சபரிநாதன்: உங்கள் கவிதைகளில் அறிவுநிலையிலோ உணர்ச்சிகரத்திலோ ஒருவித வன்தன்மை அல்லது ஒருவகை மூர்க்கம் இருப்பதாக தோன்றுவதுண்டு. அப்படியான தோற்றத்திற்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறீர்களா?

ஆசனவாயில் சொருகப்பட்ட கழுமர உச்சிலிருந்து புவியீர்ப்பு விசையில் கீழ்நோக்கி இறங்கியபடி சுற்றி நிற்பவரை வேடிக்கைப் பார்க்கிறேன். என்னிடமுள்ள உச்சபட்ச ஆயுதப் பயன்பாடு எனில்; வாயில் உமிழ்நீரைக் கூட்டிக் காறித்துப்புவதுதான். நானோர் உள்ளோட்டை மனிதன்; ஒரு முத்தத்தால் என்னைக் கொன்றுவிடலாம். என்னை வாசித்தத் திளைப்பில் ஒருவர் செத்தால் அவருடன் உடன்கட்டை ஏறுவேன் அல்லது சேர்ந்துப் புதைவேன். திருவள்ளுவரில் தொடங்கி இராமலிங்கரிடம் அடைக்கலமானவன். அருட்பெருஞ் சோதி, தனிப்பெரும் கருணை.

சபரிநாதன்: நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யாவர்? (தமிழ் மற்றும் அயல்மொழிகளில்)

பிரெஞ்சு மொழியில் ஷார்ல் பொத்லேர், அர்துய்ர் ரெம்போ, போல் எலுவார், ழாக் ப்ரெவெர். ஆங்கிலம் வழியில் ரவீந்திரநாத் தாகூர், அக்தோவியோ பாஸ், பாப்லோ நெருதா, லூயிஸ் போர்கஸ், தமிழில் திருவள்ளுவர், திருமூலர், சுப்ரமணிய பாரதி.

சூர்யதேவ்: தற்காலத் தமிழ் இலக்கியவாதிகளில் யாருடைய எழுத்து தங்களுக்கு நம்பிக்கை தருவதாக உணர்கிறீர்கள்?

ஜெயமோகன் தனது அரைநூற்றாண்டு வாழ்க்கையிலேயே உச்சத்தைத் தொட்டுவிட்டார்; இருபத்திநான்கு மணிநேரமும் நிலைக்கண்ணாடி முன்னின்று தன்னைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணன் ஒரு தன்னிறைவுகொண்ட பேராசிரியர். கோணங்கி ஒரு maverick; இவரையொத்தவர்களையே என் மனம் அவாவுகிறது. கவிதையில் என்.டி. ராஜ்குமார், ரியாஸ் குரானா, யவனிகா ஶ்ரீராம். இளங்கோ கிருஷ்ணன், எஸ். கயல், வெயில், சங்கரராம சுப்ரமணியன் இவர்களை வாசிக்கத் தவறுவதில்லை. இசையைத் தேர்ந்தெடுப்பதைப்போலத்தான் இலக்கியப் பனுவல்களைத் தேர்கிறேன். வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் உலக அரங்கில் உச்சத்தைத் தொடும் ஆற்றல்கொண்ட ஆளுமை எஸ். முருகபூபதி. லக்‌ஷ்மி சரவணகுமாரிடமிருந்து அரிதினும் பெரியதாக எதிர்பார்க்கிறேன். சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை என்ற நாவலை ஓர் ஆண் எழுதியிருந்தால் இச்சமூகம் கொண்டாடியிருக்கும்; folk classic என்று பத்தாண்டுகளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். இவர்,  எட்டு நாவல்களை எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார். இந்த இலக்கியச் சூழலின் கயமை எனக்கு அயற்சியைத் தருகிறது. தமிழ்க்குடியின் மதிப்பும் மரியாதையும் இலக்கியத்தின் மூலமே வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறது.   நூறு பூக்கள் மலரட்டும்.

சபரிநாதன்: உங்கள் அனுபவத்தில் கவிஞனாக வாழ்வதென்றால் என்ன?

தமிழ்க் கவிஞனாக வாழ்வது என்று திருத்திக்கொள்கிறேன்; அராக்கிரி.

சூர்யதேவ்: வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான இடைவெளியை என்றேனும் உணர்ந்ததுண்டா?

இதுவரை இல்லை.

சூர்யதேவ்: பிரேம்/ரமேஷ் பிரிவிற்குப் பிறகான தங்கள் எழுத்து பற்றிய சுயமதிப்பீடு என்ன?

இது இந்தியா – பாக்கிஸ்தான் பிரிவினையா? அரசு வேலையை முன்வைத்து பாதுகாப்பாக, சுய தணிக்கையோடு எழுதவேண்டியிருந்த நெருக்கடி இப்போது இல்லை. பிரேமிடமிருந்துப் பிரித்து, மாலதி மைத்ரி அவர்கள் என்னை விடுதலை செய்தார்; அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சித்ரன்: கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் கதையில் இசையாசிரியை பெர்னாதேத் தன் முழுவாழ்வையும் குழந்தை இசைக் கலைஞனான ழீலிற்காய் அர்ப்பணித்திருப்பாள். ஆனால் அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது மனச்சிதைவுற்றுத் திரியும் ழீலிற்கு பெர்னாதேத் பின்வருமாறு எழுதுவாள் “அழுதால் மயக்கம் வருகிறது. தனிமையில் மயக்கம் வந்தால் தண்ணீர் தர யார் இருக்கிறார்கள் ழீல்”. தமிழ் இலக்கியப்பரப்பின் எல்லைகளை விரிவாக்கிய ரமேஷ் பிரேதன் இன்று தன்னைச் சூழ்ந்துள்ள தனிமையை எப்படி எதிர்கொள்கிறார்?

வேணாம். வேணாம். வலிக்குது. அழுதுருவேன்.

நேர்காணல் பகுதி முடிந்தது

நன்றி சித்ரன் & நண்பர்கள்

(

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular