Saturday, November 16, 2024
Homesliderலத்தி

லத்தி

மணி எம் கே மணி

பையன்கள் மூன்று பேர். வாசலில் நின்று தயங்குகிறார்கள். ஸ்டேஷனுக்கு உள்ளே இருந்தவாறு அவர்களை உள்ளே வரச் சொன்ன போலீசின் கையில் லத்தி இருந்தது. பையன்கள் என்று சொல்லப்பட்டோர் சிறுவர் என்கிற நிலையைக் கடந்தவர்கள், அவ்வளவுதான். நண்பனின் காதலுக்கு உதவி செய்து விட்டார்கள். அவர்கள் தமது நண்பனுடன் அனுப்பி வைத்த அந்தப் பெண் இன்னும் மேஜர் ஆகவில்லை. ஆகியிருந்தாலும் இதே வைபவம் நடந்திருக்கும். பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளது உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோரோடு பெற்றோரும் பல கார்களில் வந்து இறங்கி சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். வான்கோழி பிரியாணி உட்பட கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் உறுமவே முதலில் ஒருத்தன் உள்ளே வந்தான். ’வலது காலை எடுத்து வைத்து வர இது உன் மாமியார் வீடா’ என்று கேட்டு கால்களில் அடி விழுந்தது. அடுத்தவன் மிக யோசனையுடன் இடது காலை எடுத்து வைத்து வந்தான். ’இந்த இடம் நாசமாக போகட்டும் என்று பீச்சக் காலை வைத்தாயா’ என்று மறுபடி வீச்சு. அம்மா என்று கூச்சலிட்டுக் கொண்டு அவன் உள்ளே சென்று விழுந்தான். மூன்றாமவனுக்கு இருப்பது வலது, இடது என்று இரண்டு கால்கள் மட்டுமே அல்லவா? போலீஸ் கூச்சலிடவே அவன் இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு படியை தாண்டிக் குதிக்க ’என்னடா தவளை மாதிரி குதித்து வருகிறாய்’ என்று அவனது முட்டியையும் பதம் பார்த்தார் அந்தப் போலீஸ்.

உள்ளே இருந்த அத்தனை போலீசாரும் சிரிக்க பாஷாவும் சிரித்து வைத்தான். அப்படி அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதால் தனக்கு அடி விழாமல் இருக்கலாம் என்கிற நப்பாசை தான். மற்றபடி சிரிப்பதற்கு மிகவும் சிரமமிருந்தது. அவர்களோடு சேர்ந்து சிரித்ததை அவர்கள் கவனித்திருக்க வேண்டும் அல்லவா? எனவே சிரிக்கத் திறந்த வாயை பாஷா மூடாமல் இருந்தான். நெடுநெடுவென்று இருந்த பீதாம்பரம் பார்த்து விட்டார். இலேசாக ஒரு ஓரத்தில் அவருடைய கருணையை எதிர்நோக்கி மனம் இறைஞ்சுவதற்குள் அவர் எல்லா துணிகளையும் கழட்டி வைத்து உட்காரச் சொன்னதை எதிர்பார்க்கவில்லை. தயக்கத்துடன் அவிழ்த்துக் கொண்டு ஜட்டியுடன் உட்கார்ந்தான். பையன்களைக் கூட்டிக் கொண்டு எல்லோரும் படியேறிப் போனார்கள். சற்று நேரத்தில் அலறல்கள் கேட்டன. எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் ஒரு சிகரெட்டை தேடி எடுத்துக் கொண்டு வெளியே போனார். யாருமில்லை, ஓடி விட்டால் என்ன? எங்கே ஓடுவது? இப்போதுதான் வேலைக்கு வருகிற ஒருவர் இவனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். கொண்டு வந்த பையை வைக்கிறார். பானையில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு மூலையில் இருக்கிற லத்தியை எடுக்க பாஷாவின் மனம் திடுக்கிட்டது. எந்த திட்டமும் நோக்கமும் இல்லாமல் அவனை வீசித் தள்ளினார். பாஷா தன்னை அறியாமல் கத்தின கத்தல்களுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. கடைசியாக அவருக்கு மூச்சு வாங்கியது. சோர்வுடன் அமர்ந்து கொண்டார். பக்கத்தில் இருந்து கிடைத்த ஒரு பைலால் விசிறிக் கொண்டு மெதுவாக ஓடுகிற மின் விசிறியை ஒருமுறை பார்த்துக் கொண்டார். மெதுவாக எழுந்து சென்று முகத்தைக் கழுவி, சீருடைக்கு மாறினார். அவருக்கு இன்னும் ஒரு பாலன்ஸ் கிடைக்கவில்லை. அவன் யாராக இருப்பான் என்கிற யோசனை வந்தது. ஏதாவது திருட்டுக் கேசாகத்தான் இருக்கும். மயக்கம் அடைந்திருந்த அவனது முகத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு சப்தங்கள் வீறிட்டவாறு இருந்த மாடிக்குப் படியேறினார்.

மயக்கம் தெளிந்த போது பிரியாணியைக் காட்டி சாப்பிடச் சொன்னார்கள்.

அவன் அதை வேண்டாமென்று சொல்ல நினைக்கும்போதே அவன் அதை தானாகவே அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எலும்பை இரண்டாக உடைத்து உறிஞ்சும்போது பீதாம்பரம் அவனை நெருக்கத்தில் வந்து பார்த்தார். “ மோகன் சார் போணி பண்ணிட்டாரா? “ என்று சிரித்தார். “உனக்கு தக்காளி புடிக்குமா, உருளக் கெழங்கு புடிக்குமா ? “ என்று கேட்டார். தக்காளி என்பது வெளிக்காயம். உருளைக் கிழங்கு என்பது உள்காயம். அந்தக் கணத்தில் நினைவு வந்து விட்ட ஆயிஷாவின் புன்னகையைக் கேவியவாறு எச்சில் வாயுடன் “ என் அம்மா மேல சத்தியமா, என் பொண்டாட்டி புள்ள மேல சத்தியமா நான் அந்தக் கேமராவை எடுக்கல சார் ! “ என்றான்.

மெல்ல அழுதான்.

“ வயித்துக்கு வஞ்சம் பண்ணாத. அத ஒழுங்கா சாப்ட்டு முடி. நான் இப்ப உன்ன கேமரா பத்திக் கேட்டேன்?  “

இரவு வந்த போது அவர் தான் வந்து கேட்டார். யாரிடம் விற்றாய் அல்லது யாரிடம் கொடுத்து வைத்திருக்கிறாய். அவன் திக்கித் திக்கி சொன்னது முழுக்க உண்மைகள் தான். நான் எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பது என் முதலாளிக்கே தெரியும் என்று சொல்ல வேண்டி வந்தபோது எல்லோருமே சிரித்தார்கள். முதலில் பீதாம்பரம் அவனது வாயை தான் நொறுக்கினார். உள்ளங்கைகளை பஞ்சு பஞ்சாக்கினார். மோகனின் துணையுடன் ஏரோபிளேன் கட்டிப் புட்டங்களைப் பழுக்க வைத்தார். ஸ்டுடியோ முதலாளி ரெண்டு தட்டு தட்டினால் உண்மையைக் கக்கி விடுவான் என்று கொடுத்த நம்பிக்கை தள்ளிச் சென்று கொண்டே இருந்தது அவருக்கு வெறியைக் கூட்டியது. இதோ இதோ என்று மேலும் மேலும் அவனை சில்லு சில்லாக்க அவன் வலி தாங்காமல் பல பெயர்களைச் சொன்னான். அவைகள் எல்லாம் பொய்த்தன. மிகுந்த சோர்வுடன் வெளியே நின்று சிகரெட்டு குடித்துக் கொண்டிருந்தவர் வேறு ஒருவரிடம் மோகன் எங்கே என்று கேட்டார். ரவுண்ட் போயிருப்பதாகச் சொன்னார்கள். பல யோசனைகளுடன் நின்றிருந்து சட்டென அங்கிருந்து உள்ளே ஓடிய பீதாம்பரம் பாஷாவை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். அந்த நிமிடம் தான் அவனது உயிர் போயிற்று. எல்லோரும் கூடி ஒரு கயிற்றில் மாட்டித் தொங்க விட்டு அவருக்கு தைரியம் கொடுத்தார்கள். மனதை விட்டுவிடக் கூடாது என்கிற நம்பிக்கையையும் கொடுத்தார்கள். எல்லோரும் எந்த நேரத்திலும் சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவான ஒரு வகுப்பு நடந்தது.

அன்றெல்லாம் இந்த லாக்கப் கொலைகள் அல்லது தற்கொலைகள் என்பதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. மதியம் வீட்டில் இருந்து கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு பாக்கு போடுவதற்காக பாஷா கீழே இறங்கியிருக்கிறான். அங்கே கடைக்காரன் பாக்கி சில்லறை தருவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்திருக்கிறது. அந்த இடைவெளியில் கேமிராவைக் கழட்டிக் கொண்டு போனது அந்தக்கடை ஓனரின் நண்பர் ஒருவர் தான். அவரைப் பிடித்து பொருளை பறிமுதல் செய்தாலும் கேஸ் பதியப்படவில்லை. விட்டு விட்டார்கள். இந்தக் கதையை எனக்குச் சொன்னவர் பீதாம்பரம் தான். அவருக்கு அதில் வருத்தம் இருந்ததாகக் கூட சொல்ல முடியாது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  என்ன செய்வது, அந்தப் பயலுக்கு நேரம் சரியில்லை என்பதற்கு மேலே அவர் எதுவும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

ஆனால் ஒன்று நடந்தது.

ஒரு தலை முக்காடிட்ட பெண்மணியும் அவளோடு ஒரு இளம்பெண்ணும் ஒரு சிறுவனும் வந்தார்கள். என்னிடம் தான் பீதாம்பரத்தின் வீடு எது என்று கேட்டார்கள்.

நான் காட்டினேன்.

தெரியாமல் இல்லை, அவர்கள் இறந்து போன பாஷாவின் குடும்பத்து ஆட்கள் தான். அவள் பெயர் ஆயிஷா அல்லவா? அப்படி இருந்தாள். ஒரு பார்வையில் எனது வயிறே கலங்குவது போலிருந்தது. பீதாம்பரம் திகைத்தார். என்ன, என்ன, என்ன என்று இடைவெளியில்லாமல் சத்தம் போட்டார். அவரை மீறி அவரது மனைவி துடப்பக்கட்டையை எடுத்துக் கொண்டு விட்டாள்.

“ ஒண்ணும் இல்ல, ஒண்ணும் இல்ல ! “ ஆயிஷாவின் குரலில் அவ்வளவு சமாதானம் இருந்தது.

அவளை வெளியே தள்ள முந்துபவர்களிடம், “ சும்மா உங்க குடும்பத்த பாத்துட்டுப் போலாம்னு வந்தேன் ! “ என்றாள். “ எல்லாரும் நல்லா இருங்கன்னு சொல்லிட்டு போவத்தான் வந்தேன் ! “

என்ன சொல்வது அதை, அப்போதுதான் வெளியே வந்து நின்று பராக்கு பார்த்த பீதாம்பரத்தின் மகள் மஞ்சுவின் மீது அவள் பார்வை படிந்தது. ஆயிஷா அவளைப் பார்த்தவாறே நின்றாள். யாருடைய கூச்சலையும் அவள் பொருட்படுத்தவே இல்லை. தனது கூட வந்தோரை அழைத்துக் கொண்டு போனாள். திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் அவளது பார்வை மஞ்சு மீது தான் இருந்தது. அந்தக் குழந்தையும் அதற்கு பின்னடைந்தவாறே இருந்தாள்.

பீதாம்பரத்தின் முகத்தில் மட்டும் என்னவோ சரியில்லை என்பதை கண்டிப்பாக நான் பார்த்தேன். அவள் மூக்கை உறிஞ்சினால் அவர் பயந்தார். காய்ச்சல் வந்தால் வேலையைக் கடாசி எறிந்து விட்டு ஓடி வந்து ஆஸ்பிட்டலுக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். அவர் பயந்த மாதிரி ஒருபோதும் மஞ்சுவிற்கு எதுவும் நேரவில்லை. அவளது உடல்நலம் எப்போதும் ஆரோக்கியமாகவே இருந்தது. நான்கு பேர் மெச்சிக் கொள்ளுவது போல நன்றாகவே படித்தாள். நல்லபடி பூப்பெய்தினாள். பட்டம் வாங்கினாள். ஒரு காதல், ஒரு கசமுசா ? இயல்பாக ஒரு வயது வந்த பெண்ணுக்கு இருக்க வேண்டிய கொஞ்சம் தந்திரம்? அல்லது சற்றேனும் திருட்டுத்தனம்? எதுவும் இல்லை. இத்தனைக்கும் அவளது அம்மாவிற்கும் மோகனுக்கும் இருந்த தொடுப்பு வெளியே வந்து சுற்றியிருந்தோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். மோகன் கல்யாணம் பண்ணிக் கொண்டு மாற்றல் வாங்கிக் கொண்டு போக இந்தப் பெண்மணி கொஞ்ச நாள் சீக்கு வந்து படுத்தாள். என்ன நடந்தாலும் மஞ்சு எப்படியோ தன்னைப் பொட்டலம் பிரியாமல் காப்பாற்றிக் கொண்டு ஒரு தேவதை என்றெல்லாம் பெயர் வாங்கிக் கொண்டு தனது வீட்டைத் தாங்கினாள்.

நான் பல ஊர்களை சுற்றிக் கொண்டு வந்து தொழில் செய்கிறவன். என்னுடைய பயணத்தில் நான் தெற்குப் பக்கம் ஆயிஷாவைக் கூட சந்தித்தேன். எல்லாம் மறந்து அவர்கள் தங்களுடைய பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம். பாஷாவின் மகன் படிப்பு முடித்து சுமாரான ஒரு வேலையில் இருந்தான். எனக்குத் தேவையாக இருந்த கொஞ்சம் சரக்குகளை வாங்கிக் கொடுத்தான்.

மஞ்சுவின் திருமணப் பத்திரிகை கையில் கிடைத்தது.

சென்னைக்கு வந்தேன்.

நல்லபடியாக திருமணம் நடந்து முடிவு பெற்றது.

மாப்பிள்ளை மிகவும் நல்ல மாதிரி. கனடாவில் இருக்கிறான் என்றார்கள். வெளிநாட்டில் புழங்கி அளவுக்கு அதிகமாகவே பண்பாடு கலாச்சாரத்தைப் பேணினான். பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய காலில் விழுவது அவனுடைய பிடிவாதமாக இருந்தது. அதனாலேயே அவன் தனது மாமனாரின் ஆசீர்வாதத்தை வாங்க விரும்பினான்.

நாங்கள் பத்து பேர் ஒரு கோஷ்டியாக அந்த தனியார் மன நல மருத்துவமனைக்குப் போனோம். பீதாம்பரத்துக்கு மஞ்சுவை அடையாளம் தெரியாது. அதில்லை மனைவியைக் கூட அறிய மாட்டார். அவர்கள் அவரைக் கொண்டு வந்தார்கள். ஒரு சோம்பலான இயந்திரம் நடந்து வருவது போலிருந்தது. வீட்டார் பார்க்க வருகிறார்கள் என்றால் அவர்கள் இன்று அவருக்கு மேலும் ஒரு ஊசியை அடித்திருப்பார்கள். கண்களில் தூக்கம் சொக்கியது. மஞ்சு தனது கணவனுடன் அந்த மரத்த கால்களில் விழுந்து எழுந்தாள். யார் என்ன சொன்னாலும் அவர் விழித்துக் கொண்டு தான் இருந்தார். ஒரு லட்டை உடைத்து மஞ்சு அவருக்கு ஊட்டினபோது அது பாதிக்கு மேல் கீழே விழுந்தது. அவளது அப்பா, அப்பா, அப்பா அவருக்கு உறைக்கவே இல்லை. அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே கிளம்பும்போது அவர் ஒருமுறை திடுக்கிட்ட மாதிரி இருந்தது. அது தனது மகளை நினைத்து தான். ஆனால் அந்த மஞ்சு ஒரு சிறுமி. ஆயிஷாவின் பார்வைக்குப் பின்னடைந்த சிறுமி.

இரண்டு நர்சுகள் அவரை அழைத்துக் கொண்டு போகிறபோது அவர்களுக்குப் பின்னால் ஒரு காவல்கார தடியன் நகர்ந்து கொண்டே சென்றான். அவன் கையில் ஒரு லத்தி இருந்தது. மேலும் அவன் அதை இலேசாகத் தரையில் தட்டிக் கொண்டே சென்றான்.

***

மணி எம்.கே மணி

RELATED ARTICLES

1 COMMENT

  1. முற்பகள் பகலில் செய்வது பிற்பகலில் விளையும் என்னும் இயற்கைநியதியை வெளிப்படுத்தும் லத்தி கதை குற்றமிழைத் தவனின் மனசாட்சியே அவனைத் தண்டிக்கும் உளவியல் உறுத்தலை ச் சொல்கிறது.சாத்தான்குளம் லாக்கப் கொலை போன்ற சம்பவங்கள் நினைவுக்கு வரவே செய்கின்றன .இதுபோன்ற கதைகள் சமூகு உளவியலை தாட்டி எழுப்பும். படைப்பாளி மணிக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular