இல.சுபத்ரா
லக்ஷ்மி சரவணகுமாரின் நீலப்படம், கொமோரா மற்றும் ரூஹ் நாவல்களில் நிகழும் பயணம்..
“அவன் காத்திருப்பது ஓர் அற்புதம் நிகழ்வதற்காக”- ரூஹ்
வஞ்சிக்கப்பட்ட பால்யம்:
இந்த உலகம் பெரியவர்களுக்கானதாக இருக்கிறது. ‘சீக்கிரம் பெரியவனா/ளாகு, எனது பிரச்சனைகளைப் புரிந்து நடந்துகொள்’ எனச் சிறுவர்களை வெவ்வேறு வடிவங்களில் வற்புறுத்திக் கொண்டே இருக்கும் குடும்ப அமைப்பினால் அது ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை. ஆனால் இதையும் விடக் கொடுமையாக, உளவியல் ரீதியாக, பாலியல் ரீதியாக, உழைப்பு ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்பட்டு சுரண்டப்படுகிறபோது அங்கே ஓர் அழகிய உலகம் சிதைவதோடு மட்டுமில்லாமல் வாழ்வின் மீதான நம்பிக்கையையே அவர்களிடமிருந்து அது பறித்துக் கொள்கிறது.
எந்தவிதப் பகுத்தறிவினாலும் வாதங்களாலும் நியாயப்படுத்தவும் ஆற்றுப்படுத்தவும் முடியாத வன்முறைகளை எதிர்கொள்ளும் சிறுவர்களும் சிறுமிகளும் லக்ஷ்மி சரவணகுமாரின் படைப்புகள் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். அத்தகைய சூழலில் அவர்கள் சிக்கிக் கொள்வதற்கு ஏழ்மை மிக முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.
நீலப்படம் நாவலில் பாலியல் தொழிலாளியின் மகளான ஆனந்தி பதிமூன்று வயதிற்குள் 10-க்கும் மேற்பட்டோரை அப்பா என அழைத்து விட்டதாகக் கூறுகிறாள். தன் அன்னை புணர்ச்சியில் ஈடுபடும்போது அதே அறைக்குள் இருக்க நேரிடும் பதின்ம வயதே அவளுக்கு வாய்க்கிறது. வெகு சீக்கிரமே ஒரே துணையாக இருந்த அந்த அன்னையையும் இழக்கிறாள். அதன்பிறகு பி-கிரேடு படங்களின் நாயகியாக புகழ்பெறும் அவள் அதிலிருந்து வெளியேறி தானே ஒரு திரைப்படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். அவளுடைய ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்திலிருந்து வெளியேற்றி அவளுடைய வேறொரு பரிமாணத்தை உலகிற்கு நிரூபிக்கும் இந்த முக்கியமான முயற்சிக்குத் துணை நிற்கிறான் நண்பன் பாபு. ஆனால் அவன் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் வழக்கம் உடையவன் என அறிகிறபோது அது அவளுக்கு பெருத்த அதிர்ச்சியைத் தருகிறது. அவனை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகக் கடுமையாகத் துன்புறுத்தி நினைவிழக்கச் செய்து ஊரை விட்டே வெளியேற்றுகிறாள். குழந்தைகளைத் துன்புறுத்துபவர் மீதான அவளது கசப்பும் கோபமும் வெறியும் மிகத் தீவிரமாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கப்பட்டிருக்கிற அத்தியாயங்களே சிறுவயதில் அவள் அடைந்த துயரின் அதீதத்தை நமக்கு விளக்கிவிடும்.
கொமொரா நாவலின் கதிர் சிறுவயதிலேயே விடுதிக்கு அனுப்பப்படுகிறவனாக, அங்கே தரும் உணவு போதாமல் பனங்கருப்பட்டியுடன் உப்பு சேர்த்து உண்டு உடல் நலம் சீர்குலைபவனாக, அப்பா செய்யும் வன்கொலையை அருகிருந்து காண்பவனாக, பிரியமான இடங்களில் நிலைத்திருக்க முடியாமல் இடப்பெயர்வுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பவனாக இருக்கிறான். உணவின் பொருட்டும், பாதுகாப்பின் பொருட்டும் அம்மாவால் விட்டுச் செல்லப்படும் விடுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறான். அங்கே இருக்கும் காமாட்சி உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கும் அது நிகழ்கிறது. அவனது அப்பா அழகர்சாமியின் பால்யமும்கூட பசியும் அச்சமும் மிகுந்த போர்காலத் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவே இருக்கிறது. தன் பால்யத்தையும் வாழ்க்கையையும் சிதைத்த அப்பாவைக் கொலை செய்வதே கதிரின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது. அந்தப் பழிவாங்குதல் மட்டுமே தன்னை ஆற்றுப்படுத்தும் என நம்புகிறான்.
ரூஹ் நாவலின் ஜோதிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இல்லாவிடினும் “ஏழ்மையும் வறுமையும் நஞ்சுக் கொடியைப் போல அவனது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருக்கின்றன”. 300 ரூபாய்க்காக மலை உச்சிக்கு காஸ் சிலிண்டரைத் தூக்கிச் செல்லும் பணி செய்கிறாள் அவனது அம்மா. செருப்பு ஆடம்பரமாய் இருக்கிறது அவனுக்கு. சற்றே பெண் தன்மை கொண்ட அவனுக்கு தந்தையின் தோல்பாவைக் கூத்தினை கையிலெடுத்து முன்செல்லும் ஆர்வமும் தோன்றவில்லை. துயர்மிகுந்த இவ்வாழ்விலிருந்து அவனை விடுவிக்கும்படியாக ஏதேனும் அதிசயம் நிகழக் காத்திருக்கும் அவன் அது அன்புமிகு ராபியாவின் மூலமாக நிகழக்கூடும் என நம்புகிறான்.
விடுதியில் விடப்பட்ட இரவில் கொமோராவின் கதிர் உணர்கிறபடி இந்தக் குழந்தைகளின் வாழ்வில் “நட்சத்திரங்களே இல்லை. நிலவு இல்லை. வானம் இல்லை.” “ஆதரவற்ற நிலையில் ஒரு குழந்தையின் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு இணையான துயரம் இந்த உலகில் வேறென்ன இருக்க முடியும்?” எனத் தவிக்கிறது கதாசிரியரின் குரல்.
விடுபடும் எத்தனம்
ஆனால் எத்தனைத் துயரங்களுக்குப் பிறகும் இந்தக் குழந்தைகள் நம்பிக்கை இழப்பதில்லை. எதன் மூலமாவது வாழ்வினைப் பற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள். பெரியவர்களாகிவிட்டால் தங்களால் இந்தத் துயரங்களிலிருந்து விடுபட்டுவிட முடியும் என நம்புகிறார்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்தும் அது தரும் வடுக்கள் நிறைந்த நினைவுகளிலிருந்தும் விடுபட, விடாது எத்தனித்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். பெண்ணின் அன்பு, தெய்வ நம்பிக்கை, இடப்பெயர்வு, பழிவாங்குதல் போன்ற பௌதீக முயற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது இந்த உலகின் வாதைகளொன்றும் தீண்ட முடியாத உச்சியை நோக்கி தன்னால் உயரப் பறந்துவிட முடியுமென்கிற கற்பனைகளையும் அவர்கள் வரித்துக் கொள்கிறார்கள்.
விதிக்கப்பட்ட வாழ்வின் சாபங்களிலிருந்து விடுபடும் எத்தனமானது இவரது படைப்புகளில், சப்தமாகத் துடிக்கும் இதயத்தின் ஓசை போல் நம் செவிகளில் மோதிக்கொண்டே இருக்கிறது.
நீலப்படம் நாவலில் ஆனந்தியிடம் வந்து சேரும் சத்யா என்கிற சிறுமி, கதையின் இறுதியில் பூப்பெய்துகிற போது ஆனந்தியிடம் கதை சொல்லும்படி கேட்கிறாள். அப்போது அவள் சொல்லும் கதையில் “தனக்கு இறக்கைகள் முளைப்பதாகக் கனவு கண்ட ஒரு சிறுமி நிஜமாகவே இறக்கைககள் முளைத்து கடலின் மேல் உயரப் பறந்து கொண்டிருக்கும்போது பூப்பெய்துகிறாள்”. “என்றால் நானும் பறந்து விடுவேனா” எனக் கேட்கிறாள் சத்யா. சரி எது தவறு எது எனத்தெரிந்து கொள்ளவும், தனக்கு நிகழ்கிற சரி தவறுக்கு ஏற்ப வினையாற்றவும் முடிகிற தெளிவு வாய்க்கிற முதிர்ச்சியை, விடுபட்டுப் பறப்பதற்கான வாய்ப்பு என உருவகம் செய்கிறாள் அவள்.
கொமோரா நாவலின் கதிர் தன் ஒட்டுமொத்த வாழ்வின் துயரத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருந்த அப்பா அழகர்சாமியைக் கொலை செய்த பிறகு, பறந்து கடல்கடந்து கம்போடியா செல்கிறான். பழிவாங்குதல் மூலமாகவும் இடப்பெயர்வு மூலமாகவும் விடுபடலை நோக்கி நகர்கிற அவன் அங்கேயும் சென்று நிம்மதியுற முடியவில்லை. அந்த ஊரில் தன் முன்னோர் எதிர்கொண்ட வன்முறையையும் அனுபவித்த துயரத்தையும் பற்றி அறிய நேர்கிறவனுக்கு மிகுந்த மன உளைச்சலே எஞ்சுகிறது. ஆறுதல் வேண்டி மீகாங் ஆற்றில் பயணிக்கும் அவன் அது அப்படியே மேலெழுந்து தன்னைச் சுருட்டிக் கொண்டு விடுதலை அளிக்கக்கூடாதா என பிரயாசைப்படுகிறான். ஆனால் அது அவனை ஸ்வீகரித்துக் கொள்ள மறுக்கிறது. இறுதியில் தன் காலடியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் மீனொன்றை மிதித்துக் கொல்லும் வன்மத்திடமே அவன் தன்னைத் தோற்க நேர்கிறது.
ரூஹ் நாவலின் ஜோதி ராபியாவைப் பற்றிக் கொள்கிறான். அவளிடமிருந்து வெளியேறும்படியாக வாழ்க்கை நிர்ப்பந்திக்கிற போது, அவளையே அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிற நிலையை எட்டும்படியாக பக்கீர் ஆகிவிடுகிறான். நன்மையை நோக்கிச் செல்கிறவர்களுக்கு ஒளியாக இருக்கப் போகிறான் அவன் என்கிற ஆசிரியருக்கு அதுவும் முழுமையான விடுபடலாய் திருப்தி அளிக்கவில்லை. அடுத்த கட்டமாக இறுதி அத்தியாயத்தில் அந்த ஒளியை கடலோடு கலக்கச் செய்துவிடுகிறார். “இனி அவன் தாகம் கொண்டவர்கள் அருந்தும் நீராக……. ஒளிதரும் வெளிச்சமாக இந்தப் பூமியோடு என்றென்றுமிருப்பான். வசந்த காலத்தில் பூக்கத் துவங்கும் செடிகளில் அவன் உதிரத்தின் ஒவ்வொரு துளிகளும் வசீகரமான மலர்களாய்ப் பூக்கத் துவங்கும்.” என்னும் படியாக முடிகிறது நாவல்.
கால வரிசைப்படி அடுத்தடுத்து எழுதப்பட்டிருக்கும் நீலப்படம், கொமோரா, ரூஹ் நாவல்களில் வரும் இந்தத் துயருறும் ஆன்மாக்களின் விடுபடும் எத்தனத்தில் ஒரு தொடர்ச்சி இருப்பதாகவே எனக்குப் படுகிறது. தனக்குத் துயரம் தரும் சுற்றத்திலிருந்து காணாமல் போய்விடுகிற விடுபடுதலை எண்ணி ஏங்கி இறுதியில் பறப்பதாய் கற்பனை செய்கிறாள் ஆனந்தி, பழிவாங்குதல் மூலம் தன்னை ஆற்றுப்படுத்த முயலும் கதிர் நிஜமாகவே தன் நிலத்தை விட்டு நீங்கி கம்போடியாவிற்குப் பறக்கிறான். ஜோதியோ லௌகீக வாழ்வை விட்டு நீங்கி பக்கீரான பிறகும் அதில் திருப்தியுறாமல், இவ்வுலகை விட்டும் தன் பிறவியை விட்டும் நீங்கி இறுதியில் கடலோடு கலக்கிறான். ஒளியாக, உயிராக நிரம்புகிறான்.
இத்தனைத் துயர் மிகுந்த வாழ்வில் உழன்ற இந்தக் கதாப்பாத்திரங்கள் விரும்பிய இறுதி விடுபடல் ஜோதியின் மூலம் நிகழ்ந்திருக்கிறதோ? எனில் அவை அங்கனமே நிம்மதியுறட்டும்.
மீட்பு
ஆனால் கொமோராவின் கதிர் வாசிக்கும் பைபிள் வசனம் ஒன்று பின்வருமாறு சொல்கிறது, “எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடி திரும்பும்” என.
கடலில் ஒளியாய் கலந்த அந்த ஜீவன் லக்ஷ்மி சரவணகுமாரின் இன்னொரு நாவலின் வழியாக இப்பூமிக்குத் திரும்பட்டும். அங்கே அது துயரங்கள் அற்ற ஒரு பால்யத்திலும் வாழ்விலும் மகிழ்ந்திருக்கட்டும்.
இல. சுபத்ரா
subathralakshmanan@gmail.com