பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
விழிப்புடனிருக்கும் ஒரு துப்பாக்கியோ அல்லது ஒரு மழைத்துளியோ
அழகே ஒளிர்கிறது மஞ்சள் முகத்தில்
சூரியன் வீடு திரும்பினாலும்
கம்பளம் விரிக்கும் இரவில் நிலவை உலவ அனுமதித்தாலும்
பொய்கையின் முகத்தில் தாமரை மலர்ந்தேயிருக்கிறது
விளிம்பில் நிற்கிறது ஒவ்வொரு இதழின் துடிப்பும்
மீதி முத்தங்களை ஒளித்து வைத்திருக்கும் உதடுகளின் இடைவெளியில்
உயிர் தத்தளிக்கிறது
பிரிவின் நொடிகள் உலர்ந்த சருகுகளாக காற்றில் அலைகின்றன
காற்று சருகுகளை முகர்கிறது
வெய்யில் சுரக்கும் நிலத்தின் இருண்ட ரேகைகளைக் கடக்கிறது
அழகோ அசைவின்றி பாறையாக நிற்கிறது
இடைவெளியில் தொலைவில் கால நகர்வில்
மெளனத்தின் அலையடிப்பில்
பிணைத்துக் கொள்ள முடியாத விரல்கள் காதலை நெய்கின்றன
வெம்மையடைந்த இரவின் அணுக்களில் அழகோ மின்மினி அகல்
அதன் ஒளியில் இரவின் மலர்களில் வெளிச்சத்தின் வண்ணம் படிகிறது
ஒரு பாடல் முடிவை எட்டியதும் மறுபாடல் அனுமதி கேட்கிறது
பரிதவிப்போ இழப்பின் துயரமோ பாடலில் சொற்களாகவும்
இசை ஒலிகளில் நினைவாகவும் ஒலிக்கிறது
விலகியிருத்தலின் புனலைக் கடக்கவொரு படகும்
நம்பிக்கையின் மரத்தாலான துடுப்பும் கரையில் கிடக்கின்றன
கண்ணீர் வடிக்கும் சொற்கள் நிரம்பிய கவிதை படகில் அமர்கிறது
விலங்குகள் வனத்தில் இலைகள் அற்ற மரங்கள்
காலத்தின் ரேகைகளாக கிளைகளைக் கோர்த்திருக்கின்றன
சோர்வடைந்த தாவர உண்ணிகள் இலைகளின் நினைப்பில் கிறங்குகின்றன
சலிமும் காண வராத மஜ்னு வெளிறிய விரல்களால் அவற்றைத் தடவுகிறான்
அவனேதான் முடிவுறாக் காலங்களுக்கும் பிரிவின் ஓவியம்
மஞ்சள் நிற மகரந்தங்கள் நீலத்தில் அலைகின்றன
அழகின் கண்களாக காற்றின் மீது நடனமாடுகின்றன
இரவில் விளக்கேற்றும் ஒவ்வொரு பளிங்குத் துளியிலும் ஒரே முகம்
இளவேனிலின் பசிய மஞ்சள் தளிர்களில் புத்துயிர்ப்பின் நம்பிக்கை
அரச இலைகள் காற்றில் சிலிர்க்கும் போதோ
கடைசி பழுப்பு இலைகளை வேம்பு நீங்கி விட முயலும் போதோ
மழைத்துளிகள் நனைத்த பாதையில்
கோடையின் பொன் சிலை பல்லக்கில் ஊர்வலம் வருகிறது
அருகிப் போன சந்திப்பின் பழைய காலங்கள் சோர்வூட்டுகின்றன
உடைந்த கப்பலின் இரும்பு நங்கூரம் கடலில் மூழ்குகிறது
நினைவைத் தோண்டியெடுத்த ஒரு நிமிடமோ ஒரு மணிநேரமோ
அல்லது ஒரு நாளோ
அழகின் ஒளியை நாணிலேற்றி விண்ணில் எய்கிறது
ஒளிக்கோடு கிழிக்கும் வெளியில் பறவைகள் சிதறுகின்றன
சலனம் அடங்கவே ஒரு நூற்றாண்டாகிறது
ஜன்னல் சுவற்றில் இளைப்பாறும் சாம்பல்நிறப் புறாக்கள்
மிதக்கும் நுண் தானியங்களைக் கொத்துகின்றன
அழகின் முகமோ புறாக்களின் குரலால் பூரிக்கிறது
நிலவின் தடம் மறைந்த நேற்றின் இரவு
அதிகாலையில் ஹார்ன் ஒலிக்கும் பேருந்தின் கலைந்திராத துயில்
மின்விசிறிக் காற்றில் அசையும் திரைகள்
நீள்-விரல்கள் திசைகாட்டிகள் கடற்பயணங்கள் துயர முகங்கள்
விதானமில்லாக் கூடாரத்தில் கூடுகின்றன
பார்க்க முடியாதவொரு முகம் அழகைத் திரையிட்டுக் கொள்ள அனுமதிக்கிறது
காவியப் பத்திகள் நிறைந்த கடிதமோ
காதலின் இசைக்குறிப்புகள் நிறைந்த ஆர்க்கெஸ்ட்ராவோ
உதடுகளின் அச்சுப் பதிந்த வாழ்த்து அட்டைகளோ
வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதியோடு உலகைக் கோர்க்கின்றன
மெளனத்தின் விதைகளைத் தூவும் மஞ்சள் முகம்
ஒரு வனத்தின் வேர்களில் அமிலமூற்றுகிறது
காதலோ ஓர் இறகொடிந்த விமானம்
பிரிவின் அதரங்களில் காலத்தின் முலைகள் பாலூட்டுகின்றன
ஒவ்வொரு நாளும் இறுதி நாளின் ஆடைகளை அணிகிறது
அரைக் கூண்டுகள் சுழலும் இராட்சத சக்கரத்தின் மேல் முனையில்
பறப்பதற்கோ தடைகளற்ற பாதைகள் திறந்திருக்கின்றன
ஒரு முத்தத்தால் இறகு முளைப்பதும் புறக்கணிப்பால் முதுகெலும்பு முறிவதும்
கூர்நகத்தை விரலில் பூட்டிய இடைவெளி
அழகிற்கும் பறத்தலுக்கும் இடையே கோடு கிழிக்கிறது
எவ்வோசை பறவைகளை இரவில் எழுப்பியதோ
அதன் தொடர்பில் அநித்தியம் ஒட்டி உறங்குகிறது
காலத்தின் மூன்று அறைகளிலும் ஒளிர்கிறது மஞ்சள் முகம்
உலகின் முதல் ஒலிகள் ஒலித்த நாட்களிலிருந்தே
உடைந்த இசைக்கருவிகள் காதலின் சங்கீதத்தை இசைக்க முயல்கின்றன
மின்கிதாரின் பிளிறல் பழைய டிராகன்களின் இறகசைப்பை ஒத்திருக்கிறது
நாம் பிரிந்தோமா!
இறங்கி வருவதற்கு முன்பாக தேவதைகளுக்கோ இறக்கைகள் இருந்தன
பிறகோ உடன் நடக்கும் கால்கள் மட்டுமே
பள்ளத்தாக்கை நிரப்பி விசும்பு வரை உயர்கிறது வெண் பனி
அதன் உடலில் ரேகை விடும் இலையுதிர்த்த மரமோ
இரவிலெல்லாம் கனவில் தலைசுற்றி ஆடுகிறது
முடிவுறாக் காலங்களுக்கு உதிரும் இலைகளோ
பறத்தலின் களிப்பில் சேர்ந்திசைக்கின்றன
காதலின் பாடலில் தற்கொலையின் வசீகரம் சொற்களாகிறது
இந்நோய் அறிந்தவன் மஜ்னு மட்டுமே
ஆயினும் அவன் வைத்தியனல்லன்
காதலின் இரண்டு ரோகிகள் எதிரெதிரே மெளனத்தை விற்கின்றனர்
அநித்திய மலரின் மாறா ஒளியில் முகங்களைக் காண்கின்றனர்
ரோகம் பன்மடங்கு உயர்கிறது
ரப்பர்-பொம்மைகள் சுவடுகள் சிப்பிகள்
நீருற்று, குரல் ஒலிக்காத பாலை
உன்மத்தமேறிய வெய்யில் இடைவெளியற்ற மலர்மாலை
அழகின் பல்லுருவங்களிலும் ஒரே மஞ்சள் முகம்
ஆழத்தின் குரலோ தவளைகளின் வரவேற்பிசையோ
பின்னரவில் புல்-மேயும் மட்டக் குதிரைகளின் அநாதை நிலைமையோ
நீள் விரல்களால் தீண்டப்படாத
அகப் பாதைகளைத் திறக்கும் உடலின் கருவிகளோ
துர்மரணமடைந்த நதியாக
காதலின் வெம்மையை கானலாக அசைக்கின்றன
எலும்புக்-கூடுகள் நீரற்று மடியும் நன்னீர் மீன்கள்
குழந்தைகள் விளையாடும் சர்ப்பங்களின் தோல்
புகைபோக்கியின் இருட்டு முகம்
நீர் திரளும் பிரிவின் கண்களில் இருள் சூழ்கிறது
நாம் பிரிந்தோமா!
மஞ்சள் முகத்தில் ஓர் உறைந்த முறுவல்
கையசைத்து விடைகொடுக்கிறது
நூறு நூறு விமானங்கள் பறப்பதற்காக ஓடுதளத்தில் நகர்கின்றன
இடைவெளியில் அழகைப் புதைத்தவர்களான நாமோ
முதுகில் படரும் நிலவின் ஒளியில் திசைகளாகப் பிரிகிறோம்
***
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – tweet2bala@gmail.com