1. கடல் நினைவு
செக்கச் சிவந்த கருநீலம்
இளமஞ்சள் நெளி கானலுடன்
உடல் தழுவும்
உப்புக் கரிப்பில்
நின்றுவிடுகிறேன்
அணியாத சேலை மடிக்கும் அலைகள்
பறிக்கவியலா வெண்பூ விளிம்புகள்
எனை தீண்டியபடி.
கடல் வானம்
இணை கோட்டை
தேடும் கண்களுக்கு
ஒரு விள்ளல் போதும்
நிலையாய் நிற்க.
நிரந்தரமாய் வியாபித்திருக்கும்
கடலெனும் வானம் கடலெனும் இரவு
கடலெனும் நிலம் கடலெனும் அமைதி
கடலெனும் காற்று கடலெனும் தவிப்பு
கடலெனும் பெருமரம் கடலெனும் சிற்றிலை
கடலெனும் தனிமை
கடலெனும் நான்.
2. மலை தரிசனம்
கூழாங்கற்கள்
விளைந்தேங்கிய
பள்ள நீரில் கிடந்தது
பெருமலை.
–
மழைத் தூறல்
அடிவாரத்து அடர்வற்ற
செடியிடம் ஒதுங்கினேன்..
ஒடுங்கிச் சிறிதாக முயல்வதை
வேடிக்கை பார்த்து
துளியும் கருணையற்ற
கோவர்த்தன கிரி.
–
தன்னிடத்தில்
மறையத் தொடங்கிய
சூரியனை
நிலவாக்கியது
உள்வாங்கிய கரடு.
–
பெரிய கனிவாக
உயர்ந்த தாய்மையாக
இன்னும் வேறு வேறாக
தள்ளி நின்று
அண்மையில்
சற்று தொலைவில்
அற்புதக் காட்சி அளித்த
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
என்னுள் இருக்கிறது மலை.
–
சுள்ளிகளைச் சேகரிக்க
வெறுங்காலுடன்
மலையேறிக் கொண்டிருக்கிறது
முது நிழல்.
3. மாயக் கனவு
இன்றும்
நீட்டி முழங்கி
எழுந்திருக்க வேண்டியதாகிறது
மனசில்லாவிடினும்.
மறந்துபோன கனவுகளுடன்
என்றேனும் நிகழும் விடியலுக்குள்
தீர்ந்து போன
மது போத்தல் நசுக்கப்படும்
சத்தம்.
நாள் முழுமையும்
துர்கனவு பாறைகளின் இடறலில்
உன் கை நீளும்
மாயக் கனவை
பற்றிக் கொள்கிறேன்
எப்போதும்
உறக்கமென்பது
நினைவுகளின் விழிப்பு
***
வேல் கண்ணன் – இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவுநிலம் தொகுப்புகளின் ஆசிரியர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். மின்னஞ்சல் முகவரி: velkannanr@gmail.com