Saturday, November 16, 2024
Homesliderவைரஸ் குறுங்கதைகள்

வைரஸ் குறுங்கதைகள்

சுனில் கிருஷ்ணன்

1. நஞ்சு

அதுவரையிலான தன் வாழ்நாளில் அவன் ஒருபோதும் அந்த  நகரத்து புறநகர் சாலை இப்படி ஆளரவமற்று வெறித்து இருந்து பார்த்ததில்லை. நியான் விளக்குகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த நள்ளிரவு குளிருக்கு இதமூட்டிக் கொண்டிருந்தன. முழங்கையிலும் காலிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளில் இருந்து குருதி சொட்டிக் கொண்டிருந்தது. உரக்கச் சிரித்தான். முஷ்டி மடக்கி நடுவிரலை நீட்டி ஓலமெழுப்பினான்.

பிராகிருதிஸ்தான்வாசிகளின் மொழியில் அவனொரு ‘வீடற்றவன்’. உயர்ந்து செறிந்த கட்டிடங்களுக்கு இடையே இருக்கும் இருண்ட மூலை முடுக்குகள், சந்துகள், இடுக்குகள், கைவிடப்பட்ட பாலங்கள், இடிபட்ட கட்டுமானங்கள் கட்டி முடிக்கபடாத அடுக்குமாடி கட்டிடங்கள் இவைதான் அவர்களின் வசிப்பிடம். மூன்று நாட்களுக்கு முன் அவனிருந்த முடுக்கிற்குள் பிராகிருதிஸ்தானின் ராணுவ கறுப்பு வண்டி வந்து நின்றது. முழு போதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்றவர்களை கவச வீரர்கள் வண்டியில் அடைத்து கொண்டு சென்றார்கள். வெளிச்சத்தில் நிற்கவைத்து அவர்களின் ஆடைகளை களைந்தார்கள். துவண்ட குறியை தலைகவிழ்ந்து பார்த்தபோது இயல்பாக அவன் கண்கள் அருகாமையில் இருப்பவனின்  இடுப்பை நோக்கி கவிந்தது. தனக்குள்ளாக சிரித்துக் கொண்டான். நீலநிற சட்டையும் காற்சட்டையும் அணிவிக்கப்பட்டது. வரிசையில் நின்ற அவர்களிடமிருந்து சோதனைக்கான குருதி உறியப்பட்டது. “

முகமூடி அணிந்த வெள்ளையாடை மனிதன் அமர்ந்தபடி கேட்டான்.

“பேரென்ன?”

“ஜான்”

அங்கே சிரிப்பொலி எழுந்தது.

“என்ன ஜான்?” மீண்டும் சிரித்தார்கள்.

கண்கூசச் செய்யும் வெளிச்சம். எவரையும் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. எதிரே அமர்ந்திருப்பவனின் மூக்கை குத்த வேண்டும். ஆனால் உடலில் ஆற்றல் வற்றி கரங்களையும் கால்களையும் வெறும் நிழலென உணர்ந்தான்.

கையை மெல்ல பக்கவாட்டில் விரித்து

“செயின்ட் ஜான் தி ஹோம்லெஸ்” என சொன்னபோது சிரிக்க முயன்றான்.

அப்போது அவர்கள் சிரிக்கவில்லை. சில நொடிகள் நீண்ட அசௌகரியமான மௌனத்திற்கு பிறகு..

“வருக ஜான் தி 798. வீடற்றவர்கள் எல்லோரும் ஜான்களே. கடவுளின் பிள்ளைகள். கடவுள் பொழிந்த விந்து மழையில் உதித்த காளான்கள்  போலும்.” என்றது மற்றொரு குரல். மீண்டும் வெடித்து சிரித்தார்கள். குரல் வந்த திசையை நோக்கி திரும்பக்கூட அவனால் இயலவில்லை. அவனுடைய  உடற்சூடு பரிசோதிக்கப்பட்டது. ரத்த மாதிரியில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவனை அங்கிருந்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள்.

கவசவீரன் முணுமுணுப்பது அவனுக்கு கேட்டது. “முட்டாள் அரசு. இதற்கு இவர்களை கொன்றுவிடலாம். ஒரேயொரு தோட்டா செலவு”. நகரத்தில் தொற்று பரவத் தொடங்கிய காலம் அது. திக்கு திசை தெரியாமல் இறப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது மக்கள் அது வீடற்றவர்களிடம் இருந்து பரவுவதாக செய்திகளை பரப்பினர். அவர்களை சோதித்து அப்புறப்படுத்தக் கூறி நகரசபையின் முன் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு அளித்த உத்திரவாதத்தின் பேரில் இவர்களை சோதனைக்கு அழைத்து வந்தனர்.   

அவனுக்கு மூன்று வேளையும் கனவினிலும் எண்ணியிராத உணவை அளித்தார்கள். பழச்சாறுகள் கொடுத்தார்கள். மாத்திரைகளை விழுங்கச் செய்தார்கள்.. மணிக்கொரு முறை அவனை சோதனை செய்ய மருத்துவர்கள் செவிலிகள் என எவரேனும் வந்தபடி இருந்தார்கள். அவனுக்கு உண்மையில் எதுவுமே செய்யவில்லை. தொண்டையில் லேசாக நெருடியதற்கு அப்பால். ஒரு சின்ன கோலிக்குண்டு அல்லது எதையும் மரிக்காத மீன் முள் ஒன்று தொண்டையில் கிடப்பது போல. உணவு உண்ணும் முன் தனக்கு இந்த கிருமியை அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். முதல்நாள் இரவு அவனுடைய அன்னை கனவினில் வந்தாள். அவனுடைய வாழ்க்கையை எண்ணி பெருமித கண்ணீர் உகுத்தாள். சிறுவனாக இருந்த அவனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள். அவளுடைய உதடுகளில் இருந்து வரும் புளித்த வாடையை அணுக்கமாக உணர்ந்தான். குளிரோ அச்சமோ இல்லாமல் அமைதியாக உறங்கினான். மறுநாள் காலை உணவு கொண்டு வந்து அளித்தார்கள். மீண்டும் சோதனைகள், மருத்துவர்கள், செவிலிகள். கூண்டுப்புலி போல சுற்றி வரத் தொடங்கினான். அவனுக்கு உணவளிக்க வந்த கவசவீரனிடம் “எனக்கு ஒன்றுமில்லை, எப்போது என்னை வெளியே விடுவீர்கள்?” எனக் கேட்டான். சற்று நேரத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ள என்று தொடுதிரை டேப்லெட் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்கு அதை என்ன செய்வதென்று தெரிந்திருக்கவில்லை. போராடி அதன் காமெராவை இயக்க கற்றுக் கொண்டான். மழிக்கப்பட்ட தன் முகத்தை விதவிதமாக தற்படம் எடுத்துக் கொண்டான்.

அன்றிரவு அவன் கனவில் கறைபடிந்த பற்கள் உடைய கறுப்பு கிழவன் அவருடைய கிதாருடன் வந்தார். உறக்கமின்றி தவித்த அவனை உறங்க வைக்க சிறுவயதில் கதை சொல்லி இசைத்த அதே பாடலை அன்றிரவும் இசைத்தார். அது ஆஸ்கர் பீட்டர்சனின் பாடல். “ஒவ்வொரு இதயமும் ஒவ்வொரு இதயத்துடனும் சேர்ந்து ஒன்றாக விடுதலையை கோரினால் மட்டுமே நாம் விடுதலை அடைவோம்.”. இனம் புரியாத கண்ணீரை அந்தக் கிழவனின் குரல் கொணரும். கரைந்து அழுதபடி உறங்கிப் போனான். பிராகிருதிஸ்தான் நகரத்து ஓடையில் புழுத்துக் கிடந்த கிழவனின் சடலத்தை சிறுவனாக தான் கண்டது மனதில் உதித்ததும் திடுக்கிட்டு எழுந்தான். அவனால் ஒருகணமும் அங்கு தரித்திருக்க முடியவில்லை. வெளியேற வழியின்றி அவன் மனம் தவித்தது. உயரே தெரிந்த சிறிய சாளரத்தில் நீல வெளிச்சம் ஊடுருவியது. உணவு கொண்டு வந்த கவச வீரனிடம் “என்னை எப்போது வெளியே விடுவீர்கள்?” என்று உரக்க கேட்டான். பதிலேதும் சொல்லாமல் வெளியேறினான். மருத்துவரிடமும் செவிலியிடமும் அதையே கேட்டான். எவரும் அவனை பொருட்படுத்தவில்லை. அன்றைய இரவை எண்ணியதும் அவனுக்குள் அச்சம் மேலெழுந்தது. மாலை அவனை நோக்கி வந்த செவிலியைப் பார்த்தான். கண்கள் மட்டுமே தெரிந்தது. “சட்டென தலையை மறைத்திருந்த பாதுகாப்பு ஆடையை விலக்கிவிட்டு மன்னிக்க வேண்டும்” என சொல்லி அவள் கண்ணை நோக்கி நேராக காறி உமிழ்ந்தான். நிலைகுலைந்த அவளை தள்ளிவிட்டு வெளியேறினான். பதுங்கிப் பாய்ந்து பிடிபடாமல் பெரும் அமளி துமளிக்கு இடையே தப்பித்து வெளியேறினான். மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்குமே நடமாட்டம் இல்லை என்பதை கவனித்தான்.  

அந்த சாலையில் அங்குமிங்கும் ஓடினான். சாலையோரங்களில் புதர் மண்டிக் கிடந்தது. நகரத்தை ஒருநாளும் அவன் அப்படிக் கண்டதில்லை. சாலையின் நாற்திசையை நோக்கியும் காறி உமிழ்ந்தான். நடுச்சாலையில் காற்சட்டையை இறக்கி விட்டு சிறுநீரால் எழுதினான். மருத்துவமனை சட்டையையும் கிழித்து எறிந்தான். சாலையோர புதருக்கு சென்று கரத்தை அடிவயிற்றுக்கு கீழே கொண்டு சென்றபோது உடலில் ஆவேசம் பற்றிக் கொண்டது. சில கணங்களுக்கு பின் உடல் தளர்ந்து எடை குறைந்து மிதப்பதாக தோன்றியது. ஆழ்ந்த அமைதியை உணர்ந்தான். அப்போது கணுக்கால் அருகே சுரீர் என ஒரு உணர்வு ஏற்பட்டது. புதருக்குள் ஒரு பாம்பு சரசரப்பதை அவனால் காண முடிந்தது. வலி கால்முழுக்கப் பரவி தசைகளை இறுக்குவதை உணர்ந்தான். மீண்டும் மருத்துவமனை திசை நோக்கி சில அடிகள் ஓடினான். ஓட ஓட வலி அவனை இறுக்குவதை உணர்ந்தான். அசைய முடியாத அளவிற்கு உடல் இறுகியதும் அவன் நின்று கொண்டிருந்த நடுச்சாலையில் கைவிரித்து கால் பிணைந்து தலை சாய்த்து படுத்தான். அது ஒரு நாற்சந்தி. சிக்னல் விளக்குகள் மினுங்கி அணைந்தபடி இருந்தன. நட்சத்திரங்களில் இருந்து அவனுடைய அன்னை இப்போது அவனை நோக்கினால் அவளுக்கு தான் என்னவாக தென்படுவேன் என கற்பனை செய்து பார்த்தான். லேசாக சிரித்தான்.

காலை தொலைக்காட்சி செய்திகளில்,  மரித்து  பல மணிநேரங்கள் நாற்சந்தியில் கிடந்த ஆண் பிணம் அழுகாததற்கு காரணம் என்னவாக இருக்கும் என விஞ்ஞானிகளும் அறிஞர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்..

***

2. தலையாட்டி

தன் எதிரே போடப்பட்டிருந்த யாருமற்ற மடக்கு நாற்காலியை வெறித்திருந்தான். நல்ல வெளிச்சம் மட்டும் இல்லையென்றால் அது ஒரு ராணுவ விசாரணை அறையை ஒத்திருக்கும் என தோன்றியபோது அவன் உடல் சிலிர்த்து அடங்கியது. அவனிருப்பது தலைநகரின் தலைமை மருத்துவமனையில் என்பதை பதட்டமடையும் தோறும் மீண்டும் மீண்டும் தனக்குள்ளாக சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ஆனால் அவன் ஏன் அங்கு அழைத்து வரப்பட்டான் என்று தான் அவனுக்கு விளங்கவில்லை. நோய் தொற்றுக்கான பரிசோதனைகள் எதிலும் சிக்கலில்லை என்றான பின்னரே அவனுக்கு பயண ஒப்புதல் அளித்திருந்தார்கள். அந்த தேசத்தின் மறு எல்லைக்கு அவன் பயணிக்க வேண்டி இருந்தது. கிளம்ப இருந்தவனை தான் கவசவீரர்கள் வண்டியில் ஏற்றி இங்கு அழைத்து வந்துவிட்டார்கள். அவனுடைய பயண அனுமதி இனி செல்லாது. திரும்பவும் செல்வதாக இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்து அனுமதி பெற வேண்டும். பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட பனிரெண்டு மணிநேரத்திற்குள் பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும்.

நாளை காலை நடக்க திட்டமிடப்பட்டிருந்த தன்னுடைய திருமணத்திற்கு தன்னால் இப்போது செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்டதும் நெஞ்செலும்புகள் சுருங்கி இதயத்தை நசுக்குவதாக உணர்ந்தான். நாற்காலியில் நன்றாக சாய்ந்து கொண்டான். அவனுக்காக காத்திருக்கும் செல்வியை எண்ணிக் கொண்டான். அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில், உணவு விடுதிகளில், பேருந்துகளில் என மக்கள் கூட்டம் கூட்டமாக காலையிலும் மாலையிலும் அலைந்து கொண்டு தான் இருந்தனர். உலகம் இயல்பானதாகத்தான் இருந்தது. இடைக்காலத்தில் தான் இத்தனை சிக்கல்களும். அவனுள் ஊறியிருந்த உற்சாகம் வற்றியிருந்தது. நான்கு மணிநேரமாக வெறுமே அந்த அறையில் அமர்ந்திருந்தான்.

அவனொரு அகதி. சொந்த நாட்டில் இனச்சண்டையில் வீடிழந்து உறவிழந்து கள்ளத்தோணியில் அந்த நாட்டில் கரையொதுங்கியவன். விடுதலை இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரமாக நடந்து வந்த காலத்தில் இவனுடைய பகுதி இயக்கத்தால் கைவிடப்பட்டு ராணுவத்தின் ஆளுகைக்கு சென்றது. அதற்கு பின்பான தீவிர கண்காணிப்பு நாட்களில் ஒருமுறை அவர்கள் தெருவோரத்தில் ஒரு வெள்ளை சிற்றுந்து வந்து நின்றது.

ராணுவத்தினர் அத்தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று, கதவைத் தட்டி அனைவரையும் வெளியே வரச் செய்தனர். வெள்ளை வண்டியில் வெள்ளை சாக்கை முகமூடியாக தரித்த ஒரு உருவம் அமர்ந்திருந்தது. இரு துளைகள் வழியாக கண்கள் மட்டும் தென்பட்டன. வரிசையில் ஒவ்வொருவராக அதன் முன் சென்றார்கள். அது ஒவ்வொருவரையும் கண்டு இல்லை என தலையாட்டியது. அவனுக்கு முன் மூவர் நின்றிருந்தனர். நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. உடல் கூசியது. அவனுடைய வாய்ப்பு வந்ததும் உற்று நோக்கிய அவ்வுருவம் ஆம் என தலையசைத்தது. அந்த கண்களில் ஏதேனும் தெரிகிறதா என நோக்கினான். அவனால் அதை எவரென கண்டுகொள்ள முடியவில்லை. “ஐயா எனக்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை” என கெஞ்சினான். அவ்வுருவத்தை நோக்கி மன்றாடினான். அது தலையை திருப்பிக் கொண்டது. அவனை ஏற்றிக் கொண்டு வெள்ளை வண்டி கிளம்பியது.

அதற்கு பின் அந்த தீவு தேசத்தில் பல சிறைகள், விதவிதமான சித்திரவதைகள். அந்தக் கண்களில் விதவிதமான உணர்வுகளை ஏற்றி காலம் தள்ளினான். அவற்றில் ஒரு மன்றாட்டு இருந்ததாக எண்ணிக் கொண்டபோது தன்னை ஒரு தியாகியாக எண்ணினான். இரண்டு மூன்று நாட்கள் அந்த உணர்வு எல்லா வலியையும் கடக்க உதவியது. பின்னர் அதுவும் சலித்தது. அந்தக் கண்களில் விரோதத்தை கற்பனை செய்தபோது வெளியே சென்று அவர்களை பழி தீர்க்கும் உணர்வுகள் அவனை சிலநாட்கள் உயிர்த்துடிப்புடன் வைத்திருந்தன. விதவிதமான எதிரிகளை கற்பனை செய்தான். கணக்கு வாத்தியார், ட்யுஷன் வாத்தியார், எதிரணி ஆட்டக்காரன் என பலரையும் கொடூரமாக பழி தீர்த்தான். பலநாட்கள் கையறு நிலையில் வெறுமே உழன்று கொண்டிருந்தான். உயிருக்கு இறைஞ்சுவதை தவிர வேறு உணர்வுகள் ஏதுமில்லை.

போர் முடிந்தது. ராணுவம் அறுதி வெற்றியை நாட்டிய பின் எப்போதும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டான். எஞ்சியிருந்த சொத்துக்களை விற்று ஏஜெண்டிடம் பணம் செலுத்தி அந்த நாட்டில் குடியேறினான்.

நாற்காலியில் இருந்து எழுந்து சாளரத்தின் அருகே சென்றான். கண்ணாடி கதவிற்கு அப்பால் நகரத்தின் எந்த சலனமும் கேட்கவில்லை. தாவாங்கட்டை அரித்தது. அணிந்திருந்த முகமூடியை இறக்கிவிட்டு சொரிந்து கொண்டான். இப்படிச் செய்வது குற்றமா என்றொரு குழப்பம் அவனுக்கு எழுந்தது. பையில் வைத்திருந்த கை சுத்திகரிப்பு திரவத்தை எடுத்து துடைத்துக் கொண்டான். அறையின் கண்ணாடி இழு கதவுகளை பிளந்து கொண்டு வெள்ளையுடை நபர் ஒருவர் வந்தார். அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது. நாற்காலியில் அமர்ந்தார்.

“பெயரென்ன?”

“நந்தன்’

“நல்லது திரு நந்தன். நீங்கள் இங்கே எதற்கு வரவைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தெரியுமா?”

“தெரியவில்லை”

“இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு இன்று காலை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவரளித்த தகவலின் பேரில் உங்களை இங்கே அழைத்து வந்தோம்.”

“ஐயா நான் நேற்றுதான் பயண அனுமதி பெற்றேன். எந்த சிக்கலும் இல்லை என்றால் தானே அனுமதிப்பார்கள்.” எனச்சொல்லி அனுமதி சீட்டுகளை நீட்டினான்.

“தயவு செய்து அதை உள்ளேயே வைத்திருங்கள்.” என சைகையால் வேகவேகமாக மறுத்தார். “மேலும் அது இப்போது பயனில்லை.”

“இப்போது என்னதான் தீர்வு? எனக்கு நாளை காலை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது”

“மன்னிக்க வேண்டும் நந்தன், அரசின் சட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். நாங்கள் அவர்களுக்கு உங்களை பற்றி தெரியப்படுத்தி விடுகிறோம். பதினான்கு நாட்கள் நீங்கள் தனிமையில் கண்காணிக்கப்படுவீர்கள். நோய் நிலையை பொருத்து அடுத்த முடிவு எடுக்கப்படும். உங்களின் நன்மை பொருட்டும் மக்களின் நன்மை பொருட்டும் இதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோருகிறோம். நன்றி”

என சொல்லி கோப்பை மூடி எழுந்தார்.

திகைப்புடன் அவர் கிளம்பி செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான். அறையை விட்டு வெளியேற இருந்தவரை நோக்கி.

”ஒரேயொரு நிமிடம், என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சொன்னவர் யாரென கூற முடியுமா? எனக்கு அப்படி எவரையும் நினைவில் இல்லை.”

சிலநொடிகள் அவனை உற்று நோக்கிய பின் கோப்பை திறந்தார். “மிஸ். தீபா” என்றார். “உங்களுடைய ரகசியங்களில் அரசு குறுக்கிடுவதாக எண்ணக் கூடாது, மன்னிக்க வேண்டும், இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடன் உறவு கொண்டதாக அவர் அளித்த தகவலின் பேரிலேயே நீங்கள் தனிமைபடுத்தப் பட்டிருக்கிறீர்கள்.” என்றார்.

சாத்தியமே இல்லை என அதை மறுத்து வாதாட ஆவேசமாக எழுந்தான். ஆனால் அது வியர்த்தம் என்றுணர்ந்த போது மெளனமாக மீண்டும் இருக்கையில் அமர்ந்தான். அவனை கவச வீரர்கள் அங்கிருந்து மற்றொரு அறைக்கு கொண்டு சென்றார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன் அவனுடனான உறவை முறித்துக் கொண்ட தீபா அவனுடைய திருமணச் செய்தியை அறிந்து கொண்டதாகவும் அதற்காக இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். கண்ணை ஒரு கணம் மூடித்திறந்த போது தீபா அவனை நோக்கி சிரிப்பதை காண முடிந்தது. காலை ஓங்கி தரையில் உதைத்தான். கவசவீரர்கள் அவனை நின்று நோக்கினார்கள். ஒன்றுமில்லை என தலையாட்டி விட்டு தலைகுனிந்து தொடர்ந்து நடந்தான். மீண்டும் கண்மூடி திறந்தபோது துலங்கிய தீபாவின் முகத்தை பார்த்து அப்போது அவனும் புன்னகைத்தான்.

***

3. வசுதைவ குடும்பகம்

“சிவன் ராத்திரியோட குளிரு சிவசிவான்னு போயிரும்னு சொல்வாய்ங்க. என்னத்த போவுது. வெய்யில் மண்டைய பொளக்குது ஆனா ஒரே கூதலா இருக்கு.” பெருமாள் காதை மறைத்து கட்டியிருந்த அரக்குநிற கம்பளித்துண்டை இறுக்கிக் கொண்டு பெஞ்சில் அமர்ந்தார். “துளிக்கூண்டு இஞ்சி சேத்து டீயை போடு. ரவையிலேந்து தொண்ட கவ்வுது.” என செருமினார். வையாபுரிபட்டியில் மொத்தமே இரண்டு கடைகள். ஒன்று அந்த டீ மற்றும் பலகாரக்கடை மற்றொன்று பலசரக்கு கடை.

காமாட்சி சுந்தரம் (தற்போது சிங்கப்பூர் சுந்தரம்) சொந்தமாக மாடு வைத்திருப்பவர். ஊரிலிருந்து திரும்பியவர் பாலை என்ன செய்வதென்று தெரியாமல், ஊருக்கு வந்து செல்லும் ஒரே சிற்றுந்து நிற்கும் மருதமர நிழலிலேயே பொழுதை போக்க கடை போட்டார்.

பேரனோடு கட்டிட வேலைக்கு புறப்பட்டு வந்த மருதாயி பேரனுக்கு குக்கீஸ் வாங்கி கொடுத்தார். “வானொலியில் அன்றைய நாளுக்கான ஆன்மீக நற்செய்தியை சுவாமி சார்வ பௌமர் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். “வசுதைவ குடும்பகம்.. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும், புல்லும் புழுவும், எலியும் பூனையும், நாயும் நானும் நீங்களும், ஆம் நாமெல்லாம் ஒரு குடும்பம், இந்த உலகமே ஒரு குடும்பம்.” அந்த சொல்லை நினைவுகூர முயன்றார். வாசுதேவன் குடும்பம் என உதடுகள் உச்சரித்தபோது அதில் ஏதோ ஒரு பிழை என தோன்றியது. .

வயசாளிகள் வழக்கம்போல் கண்ணாடி லோட்டாவில் தேநீரை அவ்வப்போது உறிஞ்சியபடி தினத்தந்தியை விரித்துகொண்டு உலக நிலவரங்கள் குறித்தும், உள்ளூர் தொடுப்புகள் குறித்தும் பேச தொடங்கினார்கள். “சுந்தரம், இந்த வைரஸ் காச்ச பத்தி ஒரே அமளிதுமளியா இருக்கே, எந்த பக்கத்த திருப்புனாலும், டிவிய பாத்தாலும் அதையே பேசுறாய்ங்க” என்றார் பெருமாள்

கடையில் தொங்கிக்கொண்டிருந்த லேஸ் பாக்கெட்டை வாங்கிக்கொடுத்து அழுது கண்ணை கசக்கிய சிறுமியை ஆற்றுப்படுத்தினார் ஒரு தந்தை. எதிரே அமர்ந்திருந்த சுப்பையா“ஆமா, சாதா காச்ச சளி மாரிதான் இருக்குமாம். ரெம்ப சனம் செத்துருச்சுன்னு சொல்றாய்ங்க.” எனச்சொல்லி பையில் வைத்திருந்த கைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த ‘வாழநினைத்தால் வாழலாம்’ பாடலை நிறுத்திவிட்டு ஒரு காணொளியை காட்டினார் “பெருமாளு என்ன கருமாந்திரத்தையோ இந்த சப்ப மூக்கனுங்க திங்குராய்ங்க” என்றார். பெருமாள் அந்த கைபேசியை பார்த்துவிட்டு “இது எம்புட்டு ரூவா? முந்தானா ஊருலேந்து வந்த கோவால பாக்க காரைக்குடி போனோம்ல, நீ வெச்சுக்க மாமான்னு இந்தமாதிரி ஒன்ன கொண்டாந்து கொடுத்தான். நமக்கு ஒரு இழவும் வெளங்கல. சின்ன குட்டிக்கு கொடுத்துட்டேன்” என்றார். “வெலை என்னத்த கண்டேன், மருமவன் வாங்கியாந்து கொடுத்தான், அப்புடியே பழகிகிட வேண்டியதுதான்”.என்றார் சுப்பையா.

சாலையில் விரைந்து கொண்டிருந்த செல்லத்தை கவனித்த சுந்தரம் “அக்கோவ், உனக்கொரு பொட்டி வந்துருக்கு. நேத்தே வந்துருச்சு” என்றபடி டேப் ஒட்டியிருந்த பெட்டியை அளித்தார்.

பட்டுச்சீலையுடன் வந்த பாலாயி கழுத்தில் மின்னிய புதிய சங்கிலியை பார்த்து என்னவென்று விசாரித்தார் மருதாயி. “இதுவாக்கா தம்பி அனுப்பிச்சது. ரெண்டு பவுனு.” என்றாள். கட்டிட வேலைக்கு அழைத்து செல்ல வந்த சின்ன யானையில் மருதாயியும் பேரனும் ஏறிக்கொண்டார்கள். “நாளைக்கு வேலைக்கு வாறன் மேஸ்திரியாண்ட சொல்லிட்டேன்.. ஏம்பல்ல கல்யாணம்” என்று முன்னிருக்கையில் சொல்லிவிட்டு பேருந்துக்காக நின்றாள். வடை மாஸ்டர் கையை அவனுடைய ஜீன்ஸ் கால் சட்டையில் துடைத்துக் கொண்டு இரு வயசாளிகளுக்கும் இரண்டு தட்டில் வடை சட்னி வைத்துக் கொடுத்தான். “பச்ச தவளைய திங்கிரானுவ மனுஷனுவலா இவனுவ”. “நம்மூரு சாம்பார் ரசம் எல்லாம் அப்படி விக்குதாம், வாங்கி வாங்கி குடிக்கிறானுவ” “நம்மளை எல்லாம் ஒரு நோயும் அண்டாது, நம்ம சாப்பாடு அப்புடி|” “அப்புறம் இந்த வெயிலுக்கு எந்த வைரசு மைரசு ஒன்னும் வராது இருவரும் சிரித்தார்கள். சுந்தரமும் சேர்ந்து கொண்டார்.

சின்ன யானையில் இருந்து அரைலிட்டர் செவன்-அப் போத்தல்களை இறக்கினார்கள். “காஞ்சிவரத்துல யாருக்கோ வந்துருக்காம், அப்புறம் கோயம்புத்தூர்ல வந்துச்சுன்னு சொன்னாய்ங்க”

“வையாவுரிபட்டிக்கு வரணும்னா புதுப்பட்டில இறங்கி, பஸ்சு மாறி ‘பவானிய பிடிச்சு வாரதுக்குள்ள வைரசுக்கு அந்து போயிரும்” என்றதும் பேருந்துக்கு நின்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

பவானி மினி பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் கண்ணில் அந்த வெள்ளை வாகனம் தென்பட்டது. மருதமர நிழலில் நின்ற வெள்ளைநிற ஜிப்சி வண்டியில் அரசு சுகாதாரத்துறை என ஒட்டியிருந்தது. பச்சை நிற முகமூடி அணிந்த மூவர் அதில் அமர்ந்திருந்தனர். மடியிலிருந்த தாளை சரிபார்த்துக் கொண்டு ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி நேரே சுந்தரத்தை பார்த்து முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர் கேட்டார். “இங்க ராமதுரை வீடு எங்க இருக்கு?” சுந்தரம் பவ்யமாக எழுந்து வந்தார் முகமூடிக்குள் இருந்து அவர் குரல் கம்மலாக கேட்பதாக தோன்றியது சுந்தரத்திற்கு. “தெக்கால ஒரு எட்டு போனப்பொறவு திடலுக்கு அந்தாண்ட இருக்கும் சார். அய்யாவோட மவள கட்டுனவர் தான் அவரு, இவரும் அங்கனதான் இருக்கார்” என பெருமாளை கைக்காட்டினார் சுந்தரம். பெருமாள் பீதியில் எழுந்து நின்றார் “அய்யா, என்ன விஷயமுங்க, எந்த தப்பு தன்டாவுக்கும் போறது இல்லைங்க” என்றார். “ஃபோன் அடிச்சு அடிச்சு பாத்தோம் எடுக்கவே இல்ல. முந்தாநாள் மதுரைக்கு ஷார்ஜாலேந்து வந்த கோபால பாக்க போனீங்களா?”

“ஆமாங்கையா..நானும் பொண்ணு மருமவன், பேரன் பேத்தி எல்லோருமே போனோம்”

“ஒன்னுமில்ல அவரு வந்த பிளேனுல மூனு பேருக்கு காச்ச கண்டுருக்கு. அவருக்கும் நேத்துலேந்து ஒடம்பு சுகமில்ல. டெஸ்டுக்கு போயிருக்கு அதான் இங்க சோதிச்சுட்டு போலாம்னு வந்தோம்” என்றார். பெருமாள் உடல் நடுங்கியபடி வழிகாட்ட முன்னே நடந்து சென்றார். அவருடைய சிந்தனைகள் எங்கெங்கோ சென்றன. ‘விளங்கியம்மா இன்னும் ஒரேயொரு தொப்பம் பாக்க விடு’ என மனமுருக வேண்டிக் கொண்டார்.

வண்டி கிளம்பியதும் சுந்தரம் சாமான்களை உள்ளே வைத்துவிட்டு படலை இறக்கிவிட்டு “பனையூர் காமட்சியாத்தா” என முனகியபடி நேராக கோவிலிருக்கும் திசையில் விரைந்தார். மனமுருக வேண்டிக்கொண்டு மதியத்திற்கு மேல் கடைக்கு திரும்பியபோது மருத மரத்தைச் சுற்றியும் கடையை சுற்றியும் வெள்ளை தூள் தூவப்பட்டிருந்தது. மருதமர நிழலில் முகக்கவசமும் கையுறையும் அணிந்து காவலர்கள் தடுப்பரண் அமைத்து அமர்ந்திருந்தார்கள். அவர்களை கடந்து செல்லும்போது பொத்துக்கொண்டு வந்த புகைச்சல், இருமலை சுந்தரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் அடக்க வேண்டியிருந்தது. ஊரின் இரண்டு வழிகளிலும் தடுப்பரண் போடப்பட்டதும் சுந்தரத்திற்கு தன்னுடைய ஊர் தக்குனூன்டாக சிறுத்து விட்டதாக தோன்றியது.

***

சுனில் கிருஷ்ணன் – ஒரு ஆயுர்வேத மருத்துவரும் கூட. யுவபுரஸ்கார் விருதாளர் மூன்று கட்டுரைத்தொகுப்புகள், தொகுப்பு நூல்கள், சிறுகதைத் தொகுப்பு, அண்மையில் இவரது நாவல் நீலகண்டம் வெளியானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular