காமத்தின் பின் தொடரல்
அவள் நடந்துவரும் போதெல்லாம்
வீதி அயரும் நாய்குட்டியென படுத்துவிடுகிறது
அவளைப் பின்தொடரும் பள்ளிச் சிருவர்களின் கண்களும்
பாதத்து விரலில் விழுந்து ,எரும்பென ஊர்ந்து
தேக்கிய தமது ஆசைகளை
சுவர்கத்தின் அறைக்குள் உடைத்துவிட துடிக்கின்றன
அவள் நகரத்தை
காற்று புல்லாங்குழலுக்குள் பயணப்படுவது போல் கடக்கிறாள்
எதிர்படும் யாவரும் இவளை கனவில் முத்தமிட்ட தருணத்தை
மதுவோடு அருந்தி அலைகிறார்கள்
அவளுக்கு காதலனோ ,கணவனோ கூட இருக்கக் கூடும்
அவளது வாழ்வோ
வழிப்போக்கன் தன் கற்பனையை எச்சில் தொட்டு
அழித்து எழுதும் கருப்பலகையென கட்டமிடப்பட்டுள்ளது
ஊறுற்றுக் கண்கள் கொண்ட ஸ்தனங்களின் ஒளி
அவளது கழுத்தின் மேல் பொன்னையும் மிஞ்சத்தக்க
ஆபரணமாய் விழுகிறது
யாருடனும் பேசாத மொளனம்
யாருக்காகவோ அதிகமாக காத்திருக்கிறது
இந்நேரம் இவளது உள்ளாடையை திருடிச் சென்றவனின் காமம்
ஒற்றைத் திரியில் ஏற்றப்பட்டு நெய்யின்றி அணைந்திருக்கும்
இவளோ தன்னைப் பின் தொடர்ந்து வந்த
இச்சைகளை காலணியென விட்டுவிட்டு
தனது வீட்டின் கதவை அது போர்த்தியிருந்த
இரும்பு தண்டுகளால் தாழிடுகிறாள்
தனிமையை பரிமளத் தைலமெனப் பூசி
தன்னை கண்ணாடி முன் திறக்கிறாள்
வெண்குதிரையொத்த தேகத்தை அணைத்து
பனியின் தூய்மையில்
அவள் ஆன்மா இருப்பதை அது காட்டுகிறது
வீட்டுத் துவாரம் வழியாக ஊடுறுவிய மிருகங்களின் கண்கள்
அவமானத்தின் படுகுழிக்குள் திரவமாகின்றன.
5.11.2011 .3.14 am
எனக்குள்ளே தான் வாழ்கிறது
தனிமையின் வலிமை மிக்க சக்தியின் எல்லா விளிம்புகளிலும்
அதன் அணல் பறவிக் கொண்டேயிருக்கிறது
என் பாதங்கள் விரும்பும் பயணத்தை
எலும்புகளுக்குள் பூட்டுகிறது
அவற்றை தாங்கயியலாது தவிக்கிறேன்
(சிலநேரம் சபிக்கிறேன் )
என்னை நசுக்கி பிடறி பிடித்து
இருளின் வசம் ஒப்படைத்தாலும்
அதன் விசும்பல் பகலுக்கு கேட்ப்பதில்லை
என் கைகளில் கறைபடவிடாமல் முடிச்சிட்டிருக்கிறது
உனக்கென தோய்ந்த ஆன்மா
விழித்துக் கொண்டிருக்கையில்
விடியும் துயரம் வந்துகொண்டே இருக்கிறது
பதிலற்ற கேள்வி
இறந்த காலத்தை விட எதிர்காலத்தை குறிவைத்தே
குறுகுகிறது
மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினை விட
குரல்களே அதிகம் கேட்கின்றன
15.02.2010
மின்னல்கள் இருக்கிறேன் என செல்லுகின்றன
ஒளியின் வீச்சில் ஒரு ஓரம் எனது தண்டனையை
முடிந்து விடுகிறேன்
எங்கோ பூமியில் பேரதிர்ச்சியுடன் வீழும் அவை
யாதொரு சலனத்தையும் உனக்கு நிகழ்த்தாது
உனக்கான எனது தண்டனைகள்
சில நட்சத்திரங்களைக் கூட வழிநடத்தலாம்
மேகங்கள் தொங்கும் வெளியில் கண்களாய் காத்து நிற்கலாம்
இவை ஏதும் அறியாமல் நீ யாரிடமாவது
வெளிச்சம் பரவுவதற்கும் ,இருள் மூடுவதற்கும் இடையே
நியாயங்கள் ஏதுமில்லை என பேசிக் கொண்டிருக்கலாம்
சுட்டு முத்திரையிடப்பட்ட களிமண்ணாய்
மனதை உன்னிடம் தந்ததை
நினைவில் கௌ¢வாயா
மின்னல்களில் தொங்கும் தண்டனைகளை அவிழ்க்கிறேன்
அப்போது
தெற்கிலிருந்து காற்றும்,வடக்கிலிருந்து மழையும்
மேற்கிலிருந்து குளிரும்,கிழக்கிருந்து இருளும் வரத்துவங்கின
தண்டனைகள் சருகுகளோடு நடந்தன
அவ்வழியே நீ வராதிருக்க வேண்டும்
11.10.2011 02.03 am
தனிமையிடம் கையளிக்கப்பட்ட இவ்விரவு
நிலவின் பின் மெல்ல நகர்கிறது
மழையின் ஆரவாரம் பள்ளத்தாக்குகளின் அடியில்
மரிப்பதைப் பார்க்கிறேன்
எனக்குள் நிறைந்திருந்த வார்த்தைகளை
நித்திரையில் அதிகம் தொலைத்திருக்கிறேன்
குற்ற உணர்வை கொல்த்தெரிந்தவர்களை
சந்தித்ததில்லை
எனது அபிப்ராயங்களுக்கு மருதாணி பூசிவிட்டது
காலமன்றி வேரில்லை
உறைந்த இரத்தத்தில் உப்பை இடத்தெரிந்தது காலம்
இமைப்பதற்குள் அடங்கும் மின்னலாய் எவ்வளவோ
தொலைந்து விடுகின்றன வாழ்வில்
உணர்வுகளும் ஆகாயத்தில் அலையும் தண்ணீரும் ஒன்றே
தென்றலை ஆடையாக அணிந்த போது
நிலவுக்கு சாம்பலின் அங்கம் எனக் கண்டேன்
எனது பாதங்களை சாம்பலுடனும்
எனது உடலை மேகத்தின் இருட்டிலும்
புதைக்கிறேன்
பூமியின் உச்சியில் இட்ட முத்தம்
பகலாகிப் போகிறது
15.09.2011 11.08 pm
என் படுக்கையிலிருந்து அப்பாம்பு சென்றபின்
மூன்று முட்டைகள் கிடக்கக் கண்டேன்
ஒரு கணம் முடியும் முன்
அவைகள் நீர்க்குமிழியெனப் பெருகி வெளியில் உயர்ந்த போது
ஒன்றினுள் சிங்கத்தின் உருவம் பெறுகக் கண்டேன்
தனது வீரியமிக்க கால்களினால் குமிழியை உடைத்தது
மற்றொன்றில் குதிரை காற்றால் அக் குமிழியை நிறைத்தபடியே ஓடத்துவங்கியது
பிரிதொன்றில் இரண்டு மான்குட்டிகள் தன் கொம்புகளால்
விளையாடிக்கொண்டிருந்தன
எல்லாவற்றிகும் மனித சாயலும் மத்தியானத்தில் ஒளியும் சூழ்ந்திருக்கக் கண்டேன்
மான் குட்டிகளின் மேல் என் கனிவு பனிபோல் இறங்கியது
தழுவத்துவங்கும் முன் குமிழிகள் பறக்க
எட்டுத்திசைகளிலும் எட்டுவகைக் காற்றை உணர்ந்தேன்
காந்த மண்டலம் அச் சிங்கத்திற்கு திறவுண்டதையும்
தீர்க்கரேகை வழியாய் அக் குதிரை கடந்ததையும்
சுழலும் பூமியின் கரிய நிழல் ஸவுந்தர்யம் மிக்க மான்குட்டிகளை
வானத்திற்குள் வளைத்துக் கொண்டதையும் கண்டேன்
வேற்றொரு கிரகத்திற்கு அருகே சிங்கம் கடக்கையில்
அதற்கு சிறகுகள் முளைக்கக் கண்டேன்
அப்போது எனக்குள் பல பள்ளத்தாக்குகள் நகர்வதையும்
மழையுண்ட வேர்கள் மூளையின் தாழ்வாரம் வரை நுழைவதையும் உணர்ந்தேன்
சிங்கத்தின் சிறகுகள் என்னை அழைத்தன
மலைகள் மண்டிய வனாந்தரமும் பறவையாய் என்னை ஏந்திக் கொண்டு பறந்தது
மான் குட்டிகளின் கால்கள் சில நதிகளை எனக்கென நகர்த்தி வைத்தன
சிங்கத்தின் கண்களில் தேநீரைப் போன்ற கடல் அசைவதைக் கண்டேன்
அக் கண்களை மீண்டும் மீண்டும் பார்த்ததில்
குமிழிகள் எங்கோ மீண்டும் உருவானதையும்
குதிரையையும் மான் குட்டிகளையும் எங்கோ அவை எடுத்துச்சென்றதையும்
நான் காணவில்லை
சிங்கத்தின் கண்கள் என்னை கண்டு கொண்டேயிருந்தன.
5.11.2011 … 4.18 am
Edited again 22.10.2013 exactly at 4am to 4.18am