லஷ்மி சரவணகுமாரின் கதைகள் ஒரு பார்வை – ஷாலினி பிரியதர்ஷினி
“கதை சொல்லிகள் ஆபத்தனாவர்கள். அடக்குமுறையின் அம்சங்களை எதிர்ப்பவர்கள். விடுதலைக்கான உரிமையை களவாடுபவர்களை எதிர்த்து நிற்கும் போராளிகள்.”
– சினுவ அச்சிபி
மனிதனின் கலை சார்ந்த யாதொரு வெளிப்பாட்டையும் அந்தக் கலையின் வாயிலாக அணுக முற்படாமல், அதைப் படைத்த அவனது மனநிலையின் வாயிலாக அணுகும் பொழுது அவன் படைத்த கலைக்கு அதுவே சிறந்த அடையாளமாக அமையும் என்று தாகூர் தனது ஓர் உரையில் கூறியிருப்பார்.
லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளை உணர்வு தளத்திலிருந்து அணுகியவள் என்பதால் அவரது எழுத்தில் சித்தரிக்கப்படும் மனித மனத்தின் இருளும் ஒளியும் கலந்த அறைகளுக்குள் அவருடனேயே பயணிப்பது போன்ற அனுபவம் பலமுறை எனக்கு வாய்த்ததுண்டு.
அவரது புதினங்களைக் குறித்து அநேகர் சிலாகித்து எழுதியிருப்பதை வாசித்திருக்கிறேன். என்னளவில் அவரது சிறுகதைகளை வாசிப்பது ஒரு அலாதியான அனுபவம். ஒரு துண்டு வானம், ஒரு துளிக்கடல், ஒரு கீற்று வானவில், ஒரு கொடிய மரணம் அதைவிட கொடிதானவொரு துரோகம் என்று அவரது சிறுகதைகள் உலவும் களங்களும் அவை நமக்கு அறிமுகப்படுத்தும் மனிதர்களும் நேற்றோ இன்றோ நாளையோ நாம் சந்தித்த அல்லது இனி சந்திக்கப் போகும் களமும் மனிதர்களுமாகவே தெரிவர்.
வெற்றுக் கற்பனை உலக வார்ப்புகளாக மட்டுமே அவரது கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை. யதார்த்தமான மனிதர்களும், அன்றாட அயர்ச்சிகளினிடையே காதலித்துக் கொள்ளும் சாமானியர்களும் நமதருகே அமர்ந்து கதைப்பது போன்ற உணர்வை அவரது சிறுகதைகளில் பெற முடியும். மகத்தான அனுபவங்களிலிருந்து பிறக்கும் உயிருள்ள சொற்களுக்கு காலம் முடிவுரை எழுதுவதில்லை என்று எங்கோ படித்த நினைவு. லஷ்மியின் சிறுகதைகளில் அத்தகைய உயிருள்ள வரிகளை நிரம்பச் சுட்ட இயலும்.
“என் இருப்பிற்கான அவசியம் இருப்பதை எவரேனும் உணர நேர்ந்தால் சந்தோசம். உண்மையில் எனக்கு இருப்பு என்பதன் இருப்பே போலியானதோ என்று தோன்றுகிறது. இது என்ன வாழ்க்கை என்கிற எண்ணம் ஒருபோதும் தோன்றுவதில்லை, ஏனெனில் வாழ்வதான ஓர் அனுமானம் தோன்றுகிற மனிதனால் மட்டுமே இதென்ன வாழ்க்கை என்கிற தவிப்பை உணர முடியும், அப்படியேதும் எனக்கில்லை“
– மரணத்திற்கான காத்திருப்பில் (சிறுகதை)
“சிறுகதை கதாபாத்திரம் சார்ந்து அமைவதாகும். சிறுகதையைப் படைக்கும் பொழுது ஒரு எழுத்தாளன் எழுதுகோலும் கையுமாக அவனது கதாபாத்திரங்களைப் பின்தொடர்கிறான். அவர்களது ஒவ்வொரு அசைவையும், சொல்லையும் குறிப்பெடுத்துக் கொண்டு பின்பு அக்குறிப்புகளைத் தன் சொற்களில் வார்த்தெடுக்கிறான்” என்று வில்லியம் ஃபாக்னர் கூறியிருக்கிறார். புதினம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி என்றால் சிறுகதையை வாழ்க்கையின் சாளரம் எனலாம். சாளரத்தின் வழியாகக் காணும் காட்சி பல நேரங்களில் பிரதிபலிப்பை விட ஆழமானதாக அமைவது போல், லசகு–வின் சிறுகதைகளில் காணக் கிடைக்கும் மனிதர்கள் நிஜத்திற்கு மிக நெருக்கமானவர்களாக இருப்பதை உணரலாம். கதைமாந்தர்களுடன் கைக்கோர்த்து உலவும் அரூப கதாபாத்திரம் போல் எழுதுபவரின் குரலும் இருக்க வேண்டும் என்று புதுமைப்பித்தன் தனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் எழுதியிருப்பார். லசகு–வின் சிறுகதைகளில் பல இடங்களில் அக்குரல் சற்று ஓங்கி ஒலிப்பது போல தெரிவதுண்டு. ஆனால் அது கதையின் ஆன்மாவோடு இசைந்து கரைசேர்ந்து விடுவதையும் பார்க்க முடியும்.
மனிதனின் சிறுமைகள் தப்பிதங்கள், மன்னிப்பின் வழி சரணடைதலின் மேன்மை என்று அவனது மீட்சியை நோக்கியே அவரது கதைகள் பயணிப்பதை காணக் கூடும். What is Art that leads not the human mind towards salvation?
பேராற்றலின் நிழலாக பெருந்துயரொன்று இருக்கும் பொழுது அத்துயரமே அவ்வாற்றலுக்கான உந்துசக்தியாக மாறிவிடும். லஷ்மி சரவணகுமார் சந்தித்த குழந்தைப் பருவ இன்னல்களும், தயாராகுமுன்னரே வாழ்க்கை அவரை விரட்டிய வேகமுமே அவரது எழுத்தின் வீரியத்தைத் தீர்மானித்த காரணிகளாக மாறின.
“நான் கடந்து வந்த பாதையை நீயும் கடந்து வர நேர்ந்திருந்தால் வன்மமும் கருணையும் ஒரே வண்ணத்தின் சாயல்களே என்பதை உணர்ந்திருப்பாய்” என்கிறார் காலித் ஹுசைனி.
லசகுவின் கதைகளில் வரும் பெண்கள் எப்படி தனித்தன்மை பொருந்தியவர்களோ அதேபோல் அவரது கதைகளின் சிறுவர்களும் தனித்துவமானவர்களே. ‘ஆவாரம்பூ‘ கதையில் வரும் சிறுவன் அப்பு, ‘அஜ்ஜி‘ கதையில் ராமு, ‘அத்தை‘ கதையில் வரும் மஞ்சள் நிற சர்பத் விரும்பியான அழகர் என்று அவரது சிறுவர்கள் எந்த மிகையான குணாதிசயங்களையும் வெளிப்படுத்தாமல் அவர்களது பருவத்திற்கேயுரிய அப்பாவித்தனத்தோடு உலவுவதைக் காண முடியும்.
அவரது சிறுவர்கள் மகன்களாக, பதின்பருவச் சிக்கல்களுடன் தவிக்கும் இளைஞர்களாக மாற்றம் பெறும்பொழுது அவர்களது பாத்திரப் படைப்பை லசகு கூர்தீட்டும் பாணியில் இருக்கும் நேர்மையை அண்மை காலத்தில் வேறெந்த படைப்பாளரிடத்திலும் கண்டதில்லையெனக் குறிப்பிடத் தோன்றுகிறது.
இயற்கையையும் பெண்மையையும் அதனதன் உண்மையுருவில் எழுதுவதென்பது பல சமயங்களில் இருமுனைகளும் கூர் தீட்டப்பட்ட கத்தியை கையாளுவதற்கு ஒப்பான செயல். இரண்டுமே தீவிரத்தன்மையில் நிஜமானவை. அப்படி எழுதினால் மட்டுமே அவற்றுக்குரிய நியாயத்தை ஒருவனால் வழங்க இயலும். அதை விடுத்து மென்மை, இனிமை போன்ற அழகியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே இயற்கையையும் பெண்மையையும் வருணிக்க முற்படுபவன் சொற்களை விரயமாக்குகிறான். உணர்வுகளுக்கு பொய் கொண்டு வண்ணம் தீட்டுபவனாகிறான். லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளிலிருந்து அவர் ஒரு myriad minded writer என்பது விளங்கும். குறிப்பாக அவர் பெண்களை எழுதும் பொழுது மனதின் அடைக்கப்பட்ட எல்லாக் கதவுகளையும் அடித்து நொறுக்கி விட்டு அவரது பெண்கள் சுதந்திரமான வெளியில் உலவுவதையே அவர் விரும்புவதாக எனக்கு பல நேரங்களில் தோன்றும். அவரது பெண்களுக்கு நிச்சயம் ஆளுமை இருக்கும்.
எதிர்மறைக்காரிகளாகவும், சாட்டையைச் சுழற்றும் சூத்திரதாரிகளாகவும், பாவைத்தனங்களற்ற மிருகச் சாயல்களோடு வலம் வருபவர்கள். தாய்மை, காமம் எனும் உணர்வுகளுக்கு இவர் புனிதமெனும் முலாம் பூசுவதில்லை. பெண்களை இவர் வருணிப்பதில்லை, மாறாக உணர்கிறார். உணர்ந்த பின் எழுதுகிறார். அவ்வுணர்தலில் தெய்வீகமும் கீழ்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்ளாக இருக்கின்றன அவ்வளவே.
“அந்த அறையைக் கடக்கிற போது மிக மோசமான முனகல்களும், சர்ப்பத்தின் நீண்ட மூச்சுகளுமாய் அறை அதிர்ந்தது. உறக்கம் பிடிக்காமல் ஜன்னல் வழியே தொலைந்து போன நிலவைத் தேடித் துழாவினான். நீண்ட நேரத்திற்குப் பிறகு மெல்லிய இருள் வெளிச்சத்தில் வீட்டின் பின்புறச் சுவரைப் பற்றியபடி அம்மா மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். ஆடையைக் கூட சரி செய்யாமல் நின்றிருந்த அவளைப் பார்க்க சகிக்கவில்லை“
– எஸ். திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து வயதானபோது (சிறுகதை)
வங்காளம் மற்றும் மலையாள மொழி இலக்கியங்களில் பெண் முகத்திற்கு வழங்கப்படும் வலிமையும் சுதந்திரமும் போல் தமிழ் படைப்புலகில் அரிதாகவே காணக்கூடும். அதற்கு காரணங்களாக பல கலாச்சாரக் கூறுகளைச் சுட்டிக் காட்டி நியாயம் பகர்ந்தாலும் அவை பெண்ணினத்திடம் வரவேற்பைப் பெறப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் பெண்களை எழுதுவதில் எல்லைக் கோடுகளைத் மீற யாரும் முற்படுவதில்லை. ஆனால் லசகு–வின் எழுத்து அவற்றிலிருந்து விலகி பெண்மையைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு பிரதிபலிப்பதைக் காணலாம். பெண்மையின் மறைக்கப்பட்ட முகம் லசகு–வின் பல கதைகளில் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில் பெருவனமொன்று தனது இரகசியங்களோடு வெளிச்சம் பெறுவது போல் வெளிச்சம் பெறுகின்றன. நிஜம் பழகும் பெண்களுக்கு இவரது கதைகள் பிரியமாகிப் போவதில் வியப்பேதுமில்லை.
“என் கதைகளை உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் இச்சமூகம் அவ்வாறிருப்பதை உணரவும். எப்பொழுதோ அம்மணமாகிவிட்ட இந்த சமூகத்தின் ஆடைகளை களைவதற்கு நான் யார். அதை மறைப்பதற்கும் நான் முற்படுவதில்லை. அது ஒப்பனக்காரர்களின் வேலை.” என மண்ட்டோ தன் படைப்புகள் குறித்து எழுதியிருப்பார். லஷ்மி சரவணகுமாரின் கதையுலகும் மண்ட்டோவின் இக்கூற்றை ஆமோதித்து எழுதப்பட்டவை என்னும் புரிதல் அவரை வாசிக்கும் பொழுது ஏற்படும் என்பது திண்ணம்.
***
ஷாலினி பிரியதர்ஷினி ..
ஆசிரியர் தொடர்புக்கு — shalinidarshini@gmail.com