தமிழ்நாட்டுப் பழங்குடிகள்
Yaavarum Publishers
தமிழ்நாட்டில் ஏழை எளிய, குரலற்ற விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிச் சமூகங்கள் காடு, மலை, சமவெளி என மாநிலத்தின் வெவ்வேறு புவியியல் பரப்புகளை தங்களுடைய மரபார்ந்த வாழிடங்களாகக் கொண்டு அல்லது பல்வேறு காரணங்களால் இடம் பெயர்ந்து புதிய இடங்களில், சூழ்நிலைகளில் வசித்து வருகின்றனர். நீண்டவரலாறும், தொன்மையும் கொண்ட இச்சமூகங்கள் தங்களுக்கென்று சமூக அமைப்பு வாழ்வாதாரச் செயல்பாடுகள், மரபார்ந்த உரிமைகள், அறிவு, நம்பிக்கைகள், மதிப்பீடுகள், எனத் தனித்துவமான வாழ்க்கை முறையினைக் கொண்டிருக்கின்றனர். பழங்குடிச் சமூகங்களின் மரபார்ந்த வாழிடங்களில் அவர்கள் தாள் பூர்வீகக்குடிகள். இவர்களிடையே சமூக (சாதீய) அடுக்கு முறை இல்லை. பிறப்பால் மேலோர், கீழோர் என்கிற பாகுபாடு கிடையாது. நாட்டார் தெய்வங்கள். சமஸ்கிருத தெய்வங்கள் என்கிற வேறுபாடு கிடையாது. சைவம், அசைவம் என்கிற கருத்தாக்கங்கள் இல்லை.
தமிழ்ச் சமூக வரலாறு குறித்து சற்றுப் பின்னோக்கிச் சென்று சங்க இலக்கியங்களில் நாம் ஆய்ந்தறிந்த மரபான முறைமைகளை, பண்டையத் தமிழர் வாழ்வின் நடைமுறைகளின் பிரதிபலிப்பாகக் கொள்வோமானால் அது போன்ற நடைமுறைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை நிகழ்கால வாழ்க்கையில் கொண்டிருக்கும் பழங்குடிச் சமூகங்கள், தமிழ்ச் சமூக வரலாற்று மரபின் எச்சங்கள் அல்லது நிகழ்காலத்தில் வாழும் தொல்லியல் சமூகங்கள் எனக் கருத வாய்ப்புகள் உண்டு.
வாழ்க்கை குறித்து பழங்குடிகளின் பார்வை, இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதம், அதள் மேலாண்மை, அதற்கேற்றார்போல உருவாக்கிக்கொண்ட சமூக நிறுவனங்கள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், போன்றவற்றிலிருந்து பொது நீரோட்டச் சமூகங்கள் அறிந்து கொள்வதற்கும், படிப்பினைகள் பெறுவதற்கும் ஏராளமான தகவல்கள் உண்டு.
பழங்குடிகளின் வளர்ச்சி அல்லது மேம்பாடு என்பது அவர்களின் தேவையிள் அடிப்படையில் வாழ்க்கைக்குத் தேவையான கூறுகளை வெளிப்புறத்திலிருந்து உள்வாங்கி நவீனமயமாதல், தவிர தங்களின் மரபினையும், மதிப்பீடுகளையும் தக்க வைத்தல் என்கிற உகந்த கலவையாக இருக்கவேண்டும். பண்பாடும். தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டும்.